அபுதாபியில் ஒன்று, மதுரையில் 2 கிளைகளுடன் வெற்றிகரமான ப்ரீஸ்கூலை நடத்தும் சரண்யா அதஸ்குமார்!   

'கிரியேட்டிவ் சிந்தனையை வளர்ப்பதே குழந்தைகளின் வளர்ச்சிக்கு வலுவான அஸ்திவாரம்,’ எனும் ’கிட்டி கேசில்’ ப்ரீஸ்கூல் நிறுவனர் சரண்யா எப்படி மழலையர் பள்ளியை சக்சஸ்புல் பிராண்டாக மாற்றினார்?

2
“பிறந்தது முதல் அம்மா, அப்பா, இன்னும் அதிகப் பட்சம் நான்கு முகங்களை மட்டுமே எதிர்கொண்டு வளரும் குழந்தைகள் அவர்களது வாழ்வில் முதன் முதலில் சந்திக்கும் சமூகம் பள்ளி. அப்படிப்பட்ட பள்ளி வெறுமனே, பாடத்திட்டத்தை பயிற்றுவிக்கும் கூடமாக மட்டும் அமைவதில், எனக்கு உடன்பாடு இல்லை. இன்னும் சொல்லப் போனால் 3 டு 5 வயது பிள்ளைக்கு படிப்பை காட்டிலும் சமூகத்தில் நல்ல மனிதனாக மாற்றுவதற்கான விதையை விதைப்பது தான் பிரதானமானது,” 

எனும் சரண்யா அதஸ்குமார், ‘கிட்டி கேசில் சர்வதேச மழலையர் பள்ளி’ (Kiddie Castle International Pre-school) எனும் பெயரில் அபுதாபியில் ஒரு கிளை, மதுரையில் இரண்டு கிளைகளுடன், வெற்றிகரமான ப்ரீ ஸ்கூலை நடத்திவருகிறார். அவருடைய கல்விச் சேவையினை பாராட்டி,  இந்தாண்டு தொடக்கத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கல்வி அமைச்சர் கையால் ’வாழ்நாள் சாதனையாளர்’ விருதும் வாங்கியுள்ளார்.

சரண்யா அதஸ்குமார் (இடது), மழலையர் பள்ளி குழந்தைகள் (வலது)
சரண்யா அதஸ்குமார் (இடது), மழலையர் பள்ளி குழந்தைகள் (வலது)

‘Kiddie Castle’ எட்டாண்டு பயணம்

சரண்யா பிறந்து, தவழ்ந்து, பள்ளிப்படிப்பை முடித்தெல்லாம் மதுரை மண்ணில். பயோடெக்னாலஜிஸ்ட் ஆன அவர் நொய்டாவில் பணிப்புரிந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, அவருக்கு மணம் முடிக்கவே துபாயில் கணவர் பணிபுரிந்ததால், திருமணத்துக்கு பின் துபாயில் செட்டி ஆகியிருக்கிறார். குடும்பம், குழந்தை என்று உருண்டோடியது சில ஆண்டுகள். அப்பொழுது, சரண்யா அவருடைய குட்டி பிரின்சசுக்கான பள்ளியை தேடி அலைந்து, இறுதியில் இன்டர்நேஷனல் பள்ளியில் சேர்ந்துவிட்டிருக்கிறார். சம்மர் ஹாலிடேக்களில் சொந்த ஊருக்கு குழந்தையுடன் ரிட்டர்ன் அடித்த சரண்யா, நம்மூரில் உள்ள கிண்டர் கார்டன் பள்ளிகளின் தரத்தை பற்றி அறிந்துள்ளார். 

அயல்நாடுகளில் உள்ள மழலையர் பள்ளிகளின் தரத்தோடு நம் நாட்டில் இருக்கும் பள்ளிகளை ஒப்பிட்டுப் பார்த்தவருக்கு ஏமாற்றமே எஞ்சியது. குழந்தைகளின் முதல் 1000 நாட்கள் மூளை வளர்ச்சிக்கான முக்கிய காலக்கட்டம், அப்போது பள்ளிக்கு சென்றுவிடும் குழந்தைக்கு பள்ளி சரியான தொடக்கமாய் அமையவேண்டும் என்ற சரண்யாவின் எண்ணத்தின் நீட்சியாய் தோன்றியது ‘கிட்டி கேசில்’.

தொடக்கத்தில் சரண்யாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தாலும், அவருடைய கணவர் பக்கபலமாய் இருந்துள்ளார். ப்ரீ ஸ்கூல் தொடங்குவதற்கான மொத்த முதலீட்டையும் அவர் கொடுத்ததுடன், மாதந்தோறும் மழலையர் பள்ளிக்கு பணம் வேண்டும் என்றாலும் தருகிறேன் என்று உந்துதல் வார்த்தைகளால் அவருக்கு பலம் கொடுத்திருக்கிறார். 

15 லட்ச ரூபாய் முதலீட்டில் 2010ம் ஆண்டு அபுதாபியில் தொடங்கப்பட்டது ‘கிட்டி கேசில்’ மழலையர் பள்ளி. இன்று அபுதாபி மற்றும் மதுரை ஆகிய இரு கிளைகளிலும் லட்சங்களில் வருவாய் ஈட்டிவருகின்றனர்.

’ஏ ஃபார் ஆப்பிள்’ விட முக்கியமானது சோஷியல் மேனர்சை கற்பித்தல்

“என் குழந்தை படிக்கக்கூடிய ஸ்கூல் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று நினைத்திருந்தேனோ, அது போன்றொரு பள்ளியை உருவாக்கினேன். முதன் முறையா 40 குழந்தைகளை எதிர்கொள்ளும் குழந்தை பள்ளியை பாதுகாப்பான சூழலாக உணர  வேண்டும். குழந்தைகள் 3 டு 5 வயதில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த தொடங்குவர். 80 சதவீத மூளைவளர்ச்சி நடைபெறும் காலத்தில் கல்வி மட்டும் புகுத்தினால் போதாது. அடுத்த பத்தாண்டுகளுக்கும் மேலாக படிக்கத் தான் போறாங்க. வெறும் ஏ,பி,சி,டி, 1,2,3... கற்றுக் கொடுக்காமல் கிரியேட்டிவ் சிந்தனை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், ஒரு குழந்தைக்குப் பிற்பாடு வளர்ச்சிக்கு வலுவான அஸ்திவாரம் அளிக்கிறது. அதை தவிர, சோஷியல் மேனர்சையும் கற்றுக் கொடுக்க வேண்டும். 

”உதரணமாக, ஒரு அம்மா கஷ்டப்பட்டு காய்கறி பையை தூக்கிவருவது போல் எங்க டீச்சர்ஸ் ரோல் பிளே பண்ணுவாங்க. அப்போ, குழந்தைக்கு ஹெல்ப் பண்ணனும்னு தோணும். அப்புறம் காய்கறிகளை தனியா தனியா பிரிச்சு வைக்கிறப்போ, கவுண்ட் பண்ணிக்கொண்டே பிரித்து வைப்பர். சோ, நம்பர்ஸ் கவுண்டிங் + உதவி செய்யும் மனப்பான்மையும் கற்றுக் கொடுத்துவிடலாம். சூழ்நிலையை கையாளவும் சொல்லிக் கொடுக்க வேண்டும்,”

எனும் அவர், ஒரு குழந்தை கீழே விழந்துவிட்டால் சுற்றியிருக்கும் குழந்தைகளில் பலரும் முதலில் சிரிக்க தான் செய்கின்றனர். ஆனால், எங்கள் குழந்தைகள் ‘ஆர் யூ ஓகே’ என்று கேட்டு கைக்கொடுப்பர் என்கிறார்.

ஒரு பாடம்... ஐவ்வகை கற்பித்தல்...

இக்காலத்து குழந்தைகள் ஆண்ட்ராய்டுடனே பொழுதை கழிப்பதால், சகக் குழந்தைகள் உடனான உரையாடல்களற்று வளர்கின்றனர். ஏன், பல குழந்தைகள் தாமதமாகவே பேசத் தொடங்குகின்றனர். அவர்களுக்காக பப்பட் (பொம்மலாட்டம்) வழியாக கதைச் சொல்ல வைத்து, குழந்தைகளின் ஆங்கில அகராதியை அதிகரிப்பதுடன், முன்நின்று கதை கூறவைக்கும் தைரியத்தினையும் வளர்த்து வருகிறது கிட்டி கேசில்.

“ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரியான கற்பித்தல் என்பது சரியானதாக இருக்காது. அதனால், நாங்கள் ஒரு விஷயத்தை ஐந்து முறைகளில் கற்பிக்கிறோம்.” 

உதாரணமாக, கலர்ஸ் சொல்லிக்கொடுக்கிறோம் என்றால், ஸ்கூலில் உள்ள மஞ்சள் நிறப்பொருட்களை கண்டுபிடித்து கொண்டுவருமாறு கேம் வைப்போம். வொர்க்ஷீட் வைத்து கலர்ஸ் சொல்லிக்கொடுத்தல், ஜேம்ஸ் பாக்கெட் வாங்கிவந்து யாருக்கு என்ன கலர் வேண்டும் என்று கேட்டு வண்ணங்களை கற்பிக்க வைக்கிறோம்,” என்கிறார்.

துளிர் பருவத்தின் எல்லா வளர்ச்சித் தேவைகளையும் பூர்த்தி செய்வதாக கிட்டி கேசில் அமைய வேண்டும் என்று எண்ணத்தில் அனுதினமும், குழந்தையின் வளர்ச்சிக்கு இன்னும் என்ன தேவை என்பதை பற்றி ஆராய்ந்து கொண்டே வரும் சரண்யா, பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் இன்டர்நேஷனல் மாண்டிசோரி கவுன்சிலின் உறுப்பினர். 

முழு மனிதனாக குழந்தையை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைத்து கொடுக்க, மாநாடுகள் மற்றும் கலந்தாய்வு கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்தியா முழுவதும் பயணித்து கொண்டிருக்கிறார்.

எட்டாண்டு காலம் பள்ளியை சிறப்பாய் நடத்துவதில் கூட பெரும் சிரமங்களோ, சவால்களையோ சந்தித்தது இல்லை. கலந்தாய்வு கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது தான் போக்குவரத்து, மற்றும் கழிப்பறை வசதிகளில் சிரமங்களை சந்திக்க வேண்டியாகியுள்ளது, என்கிறார்.

”மதுரையில் முதல் கிளையை நிறுவிய முதலாண்டில் 9 குழந்தைகள் தான் சேர்ந்தனர். ஆனால், இப்போது மதுரையில் 47 மாணவர்கள் என்று அதிகரித்துள்ளது. அபுதாபி கிளையில் 145 குழந்தைகள் படிக்கின்றனர். மாதத்தில் மூன்று நாட்கள் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது,” என்னும் ரண்யாவின் ‘கிட்டி கேசில்’ வெற்றிகரமான பிராண்டாகவும் வளர்ந்து நிற்கிறது. 

நீங்களும் தொடங்கலாம் பிளே ஸ்கூல்!

ஆம், கிட்டி கேசில் பிராண்டின் கீழ் உரிமம் பெற்றுள்ள மூவர் சேலம், திருச்சி, சிவகாசியில் அடுத்த கல்வியாண்டில் பள்ளியைத் தொடங்க இருக்கின்றனர். 

“எந்தவொரு தொழிலை எடுத்துக் கொண்டாலும் பிரேக் ஈவன் பாய்ண்ட் வருவதற்கு வரும்வரை காத்திருக்கவேண்டும், அதாவது லாப, நஷ்டமற்று தொழில் இயங்கத் துவங்குவது. எனக்கு பிரேக் ஈவன் பாய்ண்ட் ஆறு மாதத்திலே வந்துவிட்டது. 

இத்தனைக்கும் நான் பள்ளிச் சேர்க்கை அதிகரிப்பதற்கு விளம்பரங்கள்கூட ஏதும் செய்ததில்லை., என்கிறார் இந்த பெண் தொழில்முனைவர்.

ஃப்ரான்சைஸ் முறையில் எங்களது பிராண்டின் உரிமம் பெறுபவர்களுக்கு இரண்டுவிதமான திட்டங்களை வைத்துள்ளோம். ஒன்று ரூ 8லட்ச முதலீட்டிலும், மற்றொன்று ரூ15லட்ச முதலீட்டிலும் வகுத்து வைத்துள்ளோம். இரண்டுக்குமான வித்தியாசம் உட்கட்டமைப்பில் உள்ள மாறுதல்களே,” என்கிறார் ரண்யா. 

பள்ளிக்கட்டிடம் தொடங்கி கழிவறை வரை எப்படி இருத்தல் வேண்டும் என்பதற்கு அரசு விதிமுறை விதித்திருக்கிறது. இதைத் தாண்டி, ப்ளே ஸ்கூல் குழந்தையின் மனம் போலவே கலர்புல்லாகவும், பிளேபுல்லாகவும் பிளஸ் பாதுக்காப்பான அமைப்போடும் இருக்க வேண்டும் என்கிறார் அவர். 

Related Stories

Stories by jaishree