கியூபா முன்னாள் அதிபர், புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்தார்!

0

கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், உலக புகழ் புரட்சியாளரும் ஆன, ஃபிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார். அவருக்கு 90 வயதாகிறது. கடந்த பல மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மறைந்த தகவலை, கியூபாவின் அரசு தொலைக்காட்சியில், தற்போதைய அதிபரும் அவரது சகோதரருமான ரால் காஸ்ட்ரோ  இன்று அறிவித்தார்.

ஃபிடல் காஸ்ட்ரோ, 1926 ஆகஸ்ட் 13 ஆம் தேதி பிறந்தவர். இளம் வயதிலேயே போராளியின் குணங்களை கொண்ட அவர், உலகின் மேற்குப் பாதியில் முதன்முதலாக ஒரு கம்யூனிஸ தேசத்தை உருவாக்கியவர்.  1959-ல் அதிகாரத்துக்கு வந்த ஃபிடல் காஸ்ட்ரோ, 2008ம் ஆண்டு ஓய்வுபெற்றார். கியூபாவில்செ 1959 முதல் 1976 வரை பிரதமாராகவும், 1976-2008 வரை  அதிபராகவும் இருந்தார். 

1945-ல் கியூபாவின் தலைநகரில் இருந்த ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார். கல்லூரிப் பருவத்திலேயே, ஃபிடல் காஸ்ட்ரோ அபாரமான பேச்சுத் திறமை  கொண்டவர். முதலாளித்துவத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்த ஒரு புரட்சியாளர்.

அமெரிக்காவின் தெற்கில் உள்ள ஃப்ளோரிடாவிலிருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தீவு கியூபா. அமெரிக்காவின் பரப்பளவில் பத்தில் ஒரு பங்குகூட இல்லாத குட்டி நாடு. இதன் தலைநகரம் ஹவானா. கியூபாவில் மக்களுக்கு எதிராக செயல்பட்ட ஃபாசிச அரசை 1952ல் வீழ்த்தினார். 

அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி ஒதுக்கி வைத்ததால் கியூபாவின் பொருளாதாரம் சீராக இல்லாமல் நிலைகுலைந்தது. ஆனால் இத்தகைய எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து குரல் கொடுத்து, கியூபாவை சிதையவிடாமல் பார்த்துக்கொண்டவர் ஃபிடல் காஸ்ட்ரோ.