சென்னை அரசுப்பள்ளி மாணவிகளுக்கு ஃபுட்பால் விளையாட ஸ்பான்சர் செய்த யூகே ஆர்செனல் க்ளப்! 

0

பளிச்சிடும் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிற ஜெர்சி அணிந்த இரு தமிழக கால்பந்து வீராங்கனைகளின் வீடியோ, யூகேவைச் சேர்ந்த ஆர்செனல் முகநூல் பக்கத்தில் வெளியாகி பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அன்பரசி மற்றும் சாமுண்டேஷ்வரி ஆகிய இருவரும் சோலிங்கநல்லூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள். இவர்கள்தான் அந்த வீடியோவில் இடம்பெற்று ஒரே நாளில் உலகப்பிரபலம் ஆகியுள்ளனர். 

வீடியோவில் தோன்றியதோடு இல்லாமல், இரு மாணவிகளுக்கும் கால்பந்து விளையாட்டில் முறையாக பயிற்சி பெற ஸ்பான்சரும் கிடைத்துள்ளது கூடுதல் மகிழ்ச்சி.

பட உதவி: தி நியூஸ் மினிட்
பட உதவி: தி நியூஸ் மினிட்

நான்கு நிமிடம், 15 நொடிகள் கொண்ட அந்த வீடியோ, இவ்விரு பெண்களின் வாழ்க்கைப் பயணத்தையும், அவர்களுக்கு கால்பந்து மீதுள்ள ஆர்வம் மற்றும் காதலையும் அழகாக காட்டுகிறது. 9-ம் வகுப்பு முதல் இந்த இரு மாணவிகளும் ஃபுட்பால் விளையாடத் தொடங்கி, அவர்களின் ஆர்வத்தை மெருகேற்றியுள்ளார் கோச் ஆரன் தாமஸ். இம்மாணவிகளுக்கு இருந்த ஆர்வம் மற்றும் திறனை அவர் கண்டறிந்துள்ளார். தி நியூஸ் மினிட் பேட்டியில் பகிர்ந்த கோச்,

”சாமுண்டேஷ்வரி ஃபார்வர்டிலும், அன்பரசி மிட்ஃபீல்டிலும் விளையாடுவார்கள். அவர்கள் பயிற்சியை தொடங்கியபோது, அவர்களிடம் வெறும் 200 ரூபாய் மதிப்புள்ள கேன்வாஸ் ஷூ மட்டுமே இருந்தது. ஆனால் ஆர்செனல் க்ளப் இம்மாணவிகளின் திறமையை கண்டு அவர்களுக்கு ஃபுட்பாலுக்கு தேவையான, பாதுகாப்பு கவசம், நல்ல ஷூ என்று எல்லாவற்றையும் ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ளனர்,” என்றார்.

இந்த இரண்டு மாணவிகளுக்கும் ஃபுட்பால் ஆர்வம் வெவ்வேறு திசைகளில் இருந்து வந்துள்ளது. சாமுண்டேஷ்வரி சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வம் கொண்டு, கோ-கோ, நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் என்று இருந்துள்ளார். அன்பரசி பாடவகுப்பை கட் அடிக்க ஆரம்பத்தில் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவருக்கே ஆர்வம் வந்துள்ளது. கால்பந்து விளையாடி, பள்ளி நடத்திய போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தேர்வானார்கள்.

”நான் அதுவரை கால்பந்து விளையாடியதே இல்லை. அதனால் எனக்கு எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை. தேர்வு சுற்றுகளில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன், பின் டீமில் என்னை சேர்த்தனர். என்னாலும் ஒரு விளையாட்டை அடியில் இருந்து கற்றுக்கொண்டு இவ்வளவு முன்னேறி விளையாடமுடியும் என்று நினைப்பதில் ஊக்கமாக உள்ளது,” என்கிறார் சாமுண்டேஷ்வரி.

ஆரனின் பயிற்சியில் இருவரும் தினமும் காலை 6.30 முதல் 8.30 வரை கால்பந்து விளையாடுகின்றனர். இவர்களின் பள்ளி கால்பந்து குழு இரண்டு மேட்சுகளை கடந்த இரண்டு ஆண்டுகளில் வென்றுள்ளது. அடுத்து மாவட்ட அளவில் வெற்றி பெற காத்திருக்கின்றனர். இந்த மேட்சுகளில் சாமுண்டேஷ்வரி மற்றும் அன்பரசி விளையாடியதை கண்ட ஆர்செனல் க்ளபின் சென்னைக் குழு இவர்களின் திறமையை புரிந்து கொண்டு, யூகேவில் உள்ள க்ளப் தலைமைக்கு தெரியப்படுத்தினர். அதன் பின்னர் நடந்ததெல்லாம் நல்லதே.

மாவட்ட அளவில் ஃபுட்பால் போட்டியில் வெற்றிப்பெறுவது இக்குழுவுக்கு மட்டுமின்றி, பெண்கள் கால்பந்து போட்டியில் இடம்பெற பலருக்கு ஊக்கமாக அமையும். மேலும் விளையாட்டு கோட்டாவில் மாணவிகளுக்கு தமிழக கல்லூரிகளில் அட்மிஷனும் கிடைக்கும். தற்போது பன்னிரண்டாம் வகுப்பில் இருக்கும் இம்மாணவிகளுக்கு மாவட்ட அளவில் வெற்றிப் பெற இதுவே கடைசி வாய்ப்பாகும். 

ஆர்செனல் க்ளபில் இருந்து சாமுண்டேஷ்வரி மற்றும் அன்பரசிக்கு, கால்பந்து விளையாட்டுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் கிடைத்துவிட்டது. பூமா பிராண்ட் ஷூக்களும் கிடைத்துவிட்டது. மேலும் அவர்களின் பள்ளிக்கு கோல் போஸ்ட் ஒன்றையும் ஸ்பான்சர் செய்துள்ளது ஆர்செனல் க்ளப். இருவரும் இப்போது ஆர்வமாக ஃபுட்பால் உலகக் கோப்பை மேட்சுகளை கண்டு ரசிக்கின்றனர். 

”மெஸ்ஸி, ரோனால்டோ விளையாடும் எல்லா மேட்சையும் பார்ப்போம், அவர்களைப் போல் விளையாடவில்லை என்றாலும், அவர்களால் ஊக்குவிக்கப்பட்டு நன்றாக விளையாட வேண்டும் என்ற உத்வேகம் எனக்குக் கிடைத்துள்ளது,” என்கிறார் சாமுண்டேஷ்வரி.

சாமுண்டேஷ்வரி, அன்பரசி அடங்கிய வீடியோ ஆர்செனல் முகநூல் பேஜில் சுமார் 50 ஆயிரம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. அதற்கு அமோக வரவேற்பும், கமெண்டுகளும் குவிந்து கொண்டும் இருக்கிறது. 

ஆர்செனல் முகநூல் பக்கத்தில் வெளியான வீடியோ லின்க்

கட்டுரை: Think Change India

Related Stories

Stories by YS TEAM TAMIL