நம் உள்ளக் குமுறல் கேட்டு மனசை லேசாக்கும் 'வாடகை நண்பன்'- ஜப்பானியரின் புதிய சேவை!

0

ஓய்வுதியம் பெற்று தனியாக வாழும் முதியோர்கள் முதல், பள்ளிக்குச் செல்லும் இளம் பெண்கள் வரையில், மன நல மருத்துவரிடமோ, நண்பர்களிடமோ அல்லது ஏன் தன் குடும்பத்தாரர்களிடம் கூட பகிர்ந்து கொள்ள விரும்பாத எண்ணங்களைக் காது கொடுத்து கேட்கத் தயாராக இருக்கின்றனர், 'வாடகை நண்பன்' சேவையை வழங்கும் ஜப்பானைச் சேர்ந்த தகநோபு நிஷிமோதோ மற்றும் அவரது குழுவும். 

  24 வயது நோடோகா ஹயோதோ (வலது), டோக்கியோவில்  கட்டணம் செலுத்தி ஓசான்  ரெண்டல்இன் தகநோபு நிஷிமோதோ (இடது)  உடன் உரையாடல் மேற்கொள்ளும் காட்சி. (படம்: ஏ.ஃப்.பி.)
  24 வயது நோடோகா ஹயோதோ (வலது), டோக்கியோவில்  கட்டணம் செலுத்தி ஓசான்  ரெண்டல்இன் தகநோபு நிஷிமோதோ (இடது)  உடன் உரையாடல் மேற்கொள்ளும் காட்சி. (படம்: ஏ.ஃப்.பி.)

யாருக்காவது பேச்சுத்துணைக்கு ஆள் வேண்டுமெனில், இவர்களது ஆன்லைன் சேவை மூலம் அணுகி, 'ஓசான்' அதாவது 45 -55 வயதான ஒருவரை ஒரு மணி நேரத்திற்கு 1000 யென் (10 டாலர்) தொகைக்கு வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

"மற்ற எல்லாவற்றை விட எனக்கு இந்த சேவை, ஒரு பொழுதுபோக்கு போலானது" என்று கூறுகிறார், நிஷிமோதோ. நான்கு வருடத்திற்கு முன், நிஷிமோதோ இந்த புதுமையான ஐடியாவைக் கொண்டு தொழில்முனைந்தார். தற்போது இவரது சேவை ஜப்பானில் சுமார் 60 பேரின் துணையுடன் வளர்ச்சி கண்டு வருகிறது.

"தண்டசோறு அல்லது உருப்படாதவன் என்று குறை கூறப்படும் என் வயது ஆண்களின் சுய அடையாளத்தை வெளிகொண்டு வந்து, அவர்களை முன்னேற்ற உதவுவதே, என்னுடைய முதல் திட்டமாய் இருந்தது".

48 வயது ஃபேஷன் ஒருங்கிணைப்பாளரான நிஷிமோதோ, தானும் ஒரு வாடகை ஆளாய் பணிபுரிந்து வருகிறார். ஒரு மாதத்திற்கு 30-40 வாடிக்கையாளர்களுக்கு எங்கள் நேரத்தை ஒதுக்கி அவர்களின் உரையாடலைக் கேட்டு வருகிறோம்; இவர்களின் 70% வாடிக்கையாளர்கள் பெண்களே ஆவர் என்று நிஷிமோதோ கூறுகிறார்.

"என்னை வாடகைக்கு எடுப்பவர்கள் அனைவரும், ஒரு மணி நேரத்திற்கோ அல்லது இரண்டு மணி நேரத்திற்கோ அவர்கள் கூறுவதைக் கேட்பதற்காகவே அழைக்கின்றனர்." 

"என்னை 80 வயது மூதாட்டி ஒருவர் வாரத்திற்கு ஒருமுறை வாடகைக்கு எடுப்பார். அவருடன் உள்ளூர் பூங்கா ஒன்றில் சிறிது நேரம் பேசிக்கொண்டே நடக்கவேண்டும். நான் இப்போது கிட்டத்தட்ட அவரது மகன் போல ஆகிவிட்டேன்" என்றார், நிஷிமோதோ.

மீன் பிடிக்க தனியாய் அமைதியாய் காத்திருந்து காத்திருந்து களைத்துப் போன மீனவன், தொழிலில் சாதிக்கத் துடிப்பவன்; குடும்ப அதரவு கிடைக்காத கல்லூரி மாணவன் மற்றும் தன் மேற்பார்வையாளரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தெரியாத இளம் ஊழியன் ஆகியோர் இவரது மற்ற வாடிக்கையாளர்கள் ஆவர்.

ஜப்பான், சமூக தனிமை பிரச்சனைகளுடன் போராடியுள்ளது. அதிலும் குறிப்பாக 'ஹிகிகோமொரி' என்று சொல்லப்படும் சம்பவம். அதாவது, பதின்பருவத்தினர் மற்றும் இளம் வயதினர் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல், சமூகத்துடன் பழகுவதற்கு மறுத்து, அதற்கு பதில் வீட்டு அறைக்குள்ளே முடங்கிக் கிடப்பர் அல்லது வீடியோ கேம்ஸ் விளையாடுவதில் மூழ்கிக் கிடப்பர்.

'உங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்துங்கள்'

ஆனால் நிஷிமோதோவிடம் வரும் மக்கள், சமூகத்தில் இருந்து பிரிந்து இருப்பதாலோ அல்லது பிரச்சனைகளைச் சகித்து கொண்டிருப்பதலோ எந்த வருத்தமும் பாதிப்பும் அடையாதோர்.

குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் எதிர்ப்பார்பிற்கு ஏற்றவாரு இல்லாமல் வெளிப்படையாக மனம்விட்டு பேச ஆளை தேடுவோர்களே இவர்களின் சேவையை நாடுகின்றனர். ஜப்பானில் பொதுவாக வீடுகளில் கட்டுப்பாடும், இறுக்கமான சூழ்நிலைகளும் நிலவுவதால் இத்தகைய சேவைக்கான வரவேற்பு அதிகம் உள்ளதாக மனநல வல்லுனர்கள் கூறுகின்றனர்.  

"நான் வெவ்வேறாக உள்ளேன். என் நண்பர்களிடம், குடும்பத்தார்களிடம், காதலனிடம் என ஒவ்வொரிடமும், நான் வேறுப்பட்டு பழகுவதாக உணர்கிறேன்", என்று நிஷிமோதோ உடன் கலந்துரையாடிய பிறகு கூறுகிறார், 24 வயது நோடோகா ஹயோதோ.

தெரிந்தவர்களுடன் பழகும் போது என்னை 'நான்' என்று உருவாக்கிப் பேசுகிறேன். ஆனால் யாரென்றே தெரியாத ஒருவரிடம் பேசுவதால், எனக்குள்ளவை எல்லாம் மறைந்து போய்விடுகிறது. அவருக்கு என் நன்றிகள். நான் என்னையே நன்றாக புரிந்து கொள்வது போல் உணர்கிறேன்," என்று விவரித்தார் நோடோகா.

மிக நெருங்கிய நண்பர்களிடம் கூட செய்யக்கூடாத, சொல்லக்கூடாத விஷயங்கள் என சமூக விதிமுறைகள் பல ஜப்பானில் அதிகம் இருக்கிறது என்று சொல்கிறார், மன நல மருத்துவர் ஹிரோஅகி எனோமோதோ.

"நீங்கள் ஒரு புதிய கருத்துடன் வெளிவரும்போது, அதை பற்றி மற்றவரிடம் கூறுவதற்கு கடினமாக உணரலாம். காரணம், அதை கூறுவதற்கான தகுந்த ஆள் உங்கள் சுற்றுவட்டாரத்தில் இல்லாமல் இருக்கலாம்", என்று கூறினார் ஹிரோஅகி.

"அடுத்தவருக்கு சிரமம் கொடுக்காத விதம், நம் உணர்வுகளை வெளிப்படுத்துவது கஷ்டமான விஷயம் ஆகும்".

ஆனால், ஒரு 'ஓசான்'- ஐ வாடகைக்கு எடுத்து கொள்ளும்போது, அந்த உறவானது வணிகமாக மாறி விடுகிறது, அதனால் வேறுப்பட்ட விதிமுறைகளையும் பின்பற்றுகிறது. கடந்த சில வருடங்களாக, 'வாடகை நண்பன்' என மணி நேர கணக்குக்கேற்ப கட்டணம் வசூலிக்கும் சகா சேவையை, பல செயலாண்மை நிறுவனங்கள் அளிக்கத் தொடங்கிவிட்டனர்.

திருமணம், இறுதி சடங்கு, விருந்து கூட்டங்கள் முதலியவற்றிற்குகூட இந்த ஏஜென்சிகளின் ஊழியரை போலியாக நண்பனாகவோ, குடும்ப நபராகவோ அல்லது சகவாசியாகவோ வாடிக்கையாளர்கள் வாடகைக்கு எடுத்து அழைத்தும் செல்லலாம்.

"நான் பல முறை இச்சேவையை கைவிட எண்ணி உள்ளேன், ஆனால் நான் என் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படுவது போல், அவர்களும் எனக்கும் தேவை" என்றார் திருமணமாகிய நிஷிமோதோ.

"என்னை வாடகைக்கு எடுக்கும் போது, என்னிடம் அவர்கள் என்ன கேட்டப் போகிறார்கள் என்று எனக்கு எப்பொழுதுமே சரியாக தெரிந்ததில்லை. நிச்சயமாக எனக்கும் அது பயமாகத்தான் இருக்கும், ஆனால் அதனால் தான் இது சுவாரசியமாகவும் உள்ளது. உண்மையை கூறகிறேன், இதுவரையில் எந்த ஒரு வித்தியாசமான வாடிக்கையாளர்களிடமும் எனக்கு பிரச்சனை ஏற்பட்டதில்லை... நிறைய உணர்ச்சிமிக்க அனுபவங்களை தான் பெற்றுள்ளேன்,"  

என்று தன் அனுபவத்தையும் இதை தொடர்ந்து செய்வதற்கான ஊக்கத்தை பற்றியும் கூறி விடைப்பெற்றார்.

கட்டுரையாளர் : ஏ.ஃப்.பி ரிலாக்ஸ்நியூஸ்.