ஒரே கிளிக்கில் தரமான குடிநீர் 'கேன்கேன்' செயலி உருவாக்கி அசத்தும் சகோதர்கள்!

0

நீர்கிடைக்காத பகுதிகளுக்கு குடிநீர் எடுத்துச் செல்ல அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட பபுள்டாப் (Bubble Top) குடிநீர் கேன் தமிழக நகரங்கள் மட்டுமல்லாது குக்கிராமகளிலும் புழக்கத்தில் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. ஆனால், கேன்களில் கிடைக்கும் எல்லாமே தரமான குடிநீரா என்ற கேள்வி பலரது மனதில் எழாமல் இல்லை. இந்த சந்தேகத்தைப் போக்க தொழில்நுட்பத்தை நாடி வெற்றிகண்டுள்ளனர் சகோதரர்கள் தினேஷ் மற்றும் மோகன்ஸ்ரீனிவாஸ் .

ஆரோக்கியத்திற்கு வித்திடும் புதிய முயற்சியை செய்து பார்த்துள்ள அவர்களிடம் பிரத்யேகமாக கலந்துரையாடியது தமிழ் யுவர்ஸ்டோரி

சகோதரர்களின் பின்னணி

சேலத்தில் நடுத்தர குடும்பப் பின்னணியில் வளர்ந்தவர் தினேஷ். “நான் கோவைக் கல்லூரியில் எம்பிஏ மார்க்கெட்டிங் படித்து விட்டு 5 ஆண்டு காலம் இரண்டு பெரிய ஐடி நிறுவனங்களில் பிசினஸ் அனலிஸ்ட்டாக பணியாற்றினேன். வார விடுமுறை, கைநிறைய சம்பளம் என்று நாட்கள் சுகமாக கழிந்த போதும், ஸ்டார்ட் அப் மீது தொடக்கம் முதலே எனக்கு ஆர்வம் இருந்தது”. தொழில்முனைவு கனவு இவரை தூங்கவிடவில்லை.

“முதலில் தொடங்கிய ஈ-காமர்ஸ் தொடக்க நிறுவனம் தோல்வி அடைந்தாலும் அதில் கிடைத்த அனுபவம், தொடர்ந்து அடுத்த பயணத்திற்கு எனக்கு உந்துகோலாக இருந்துவந்தது”. என்கிறார் தினேஷ்.

தினேஷின் அண்ணன் மோகனுக்கும் தொழில்முனைவு மீது ஆர்வம் அதிகம். ஐஐடியின் ஒரு தொடக்க நிறுவன ஆராய்ச்சியில் பணியாற்றிய அவர் பின்னர் தன் சகோதரருடன் இணைந்து செயலி தயாரிக்கும் முயற்சியில் களம் இறங்க முடிவு செய்தார்.

“எப்போதும் சுயமாக யோசித்து, புதிய ஒரு நிறுவனத்தை உண்டாக்க வேண்டும் என்ற தாகம்தான் எங்களின் வாழ்க்கை பயணத்தில் முதல் அடியை எடுத்து வைக்க உதவியது” என்று பெருமைப்படுகிறார் மோகன் ஸ்ரீனிவாஸ்.

ஸ்டார்ட்அப்-க்கான தொடக்கம்

வாடிக்கையாளர்கள் மத்தியில் இதுவரை பிரபலமில்லாத ஒன்றை அறிமுகப்படுத்தும்போது ஒரு தொழில்முனைவோருக்கு இருக்கும் சிரமத்தைவிட இந்த சகோதரர்கள் கடுமையான சவாலை எதிர்கொண்டார்கள். “பல்வேறு தொழில்முனைவு எண்ணங்கள் உதித்த போதும் அது மக்களிடம் வரவேற்பை பெறுமா என்ற ஐயம் தொடக்கத்தில் இருந்தது” என்கிறார் தினேஷ். சொந்த பிரச்சனைக்கு தீர்வு காண முனைந்தபோதுதான் நல்ல ஸ்டார்ட் அப்புக்கான எண்ணம் இவர்களுக்கு உதித்தது. “சென்னையில் தேவைப்படும்போது, சரியான நேரத்தில், தரமான குடிநீர் கிடைக்காமல் நாங்கள் கடுமையான நெருக்கடியில் இருந்துவந்தோம். நாங்கள் சந்தித்துவந்த குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்ற தீவிர சிந்தனையில் இருந்தபோது தான் கேன்கேன் யோசனை உதித்தது” என்கிறார் மோகன்.

“சென்னையில் 90% பேர், கேனில் அடைக்கப்பட்ட குடிநீரையே பயன்படுத்துகின்றனர், அவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை சரியான நேரத்தில் விநியோகம் இல்லை, குடிநீர் தரமானதா என்றும் தெரியவில்லை என்பதே. இதற்குத் தீர்வு காணும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டது தான் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் கிடைக்கும் "கேன்கேன்" (cancan) செயலி” என்கிறார் தினேஷ்.

'கேன்கேன்' செயலியின் சிறப்பு

20 லிட்டர் குடிநீர் கேன் தேவைப்படுபவர்கள் கேன்கேன் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் ஒரே கிளிக்கில், எந்த நிறுவன கேன் குடிநீர், எத்தனை மணிக்கு டெலிவரி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டால் போதும் குறித்த நேரத்தில் டீலர்கள் வீட்டில் டெலிவரி செய்துவிடுவார்கள். முதற்கட்டமாக தற்போது திருவான்மியூர், அடையாறு, பெசன்ட் நகர், வேளச்சேரி தரமணி உள்ளிட்ட இடங்களில் இதற்காக பகுதிவாரியாக டீலர்களையும் விநியோகிஸ்தர்களையும் தொடர்பு கொண்டு இந்தப் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர் இவர்கள். தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை மோகன் கவனித்துக் கொள்ள, தினேஷ் வாடிக்கையாளர்கள் மற்றும் டீலர்களை கையாள்கிறார். பகுதிக்கு இரண்டு டீலர்களும், விநியோகிஸ்தர்களும் இந்தக் குழுவில் உள்ளனர். “குறிப்பிட்ட நேரத்திற்கு கேன்கள் சப்ளை நடந்துவிடவேண்டும் என்பதில் எந்த சமரசமும் நாங்கள் செய்துகொள்வதில்லை” என்கிறார் தினேஷ்.

“கேன்கேன் செயலியை 2015 செப்டம்பரில் தொடங்கிய இரண்டு மாதத்தில் 900 பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாகக் கூறும் அவர், தொடக்கத்தில் இதற்கு வரவேற்பு இல்லாமல் இருந்த போதும் தற்போது நாள் ஒன்றுக்கு 50க்கும் அதிகமான கேன்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறுகிறார். இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலேயே மேலும் உத்வேகமாக இருவரும் செயல்படுகின்றனர்”.

எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது?

கம்பெனி பிராண்டு குடிநீர் கேன்களான பிஸ்லெரி, அகுவாஃபினா உள்ளிட்டவை சந்தை விலையான ரூ.80 முதல் ரூ.85 வரை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. “நாங்கள் உள்ளூர் பிராண்டுகளையும் வழங்கிவருகிறோம். ஆனால், அதை வாங்குபவர்களுக்கு அதன் தரம் பற்றிய சந்தேகம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தக் குறையை போக்க சம்பந்தப்பட்ட கேன் குடிநீரை பரிசோதனை கூடத்தில் கொடுத்து ஆய்வு செய்து அதன் பின்னர் தங்கள் செயலியில் விற்பனை பட்டியலில் சேர்த்திருக்கிறோம். அதே போன்று காலி கேன்கள் முறையாக மறுசுழற்சி செய்து தண்ணீர் நிரப்படுகின்றனவா என்பதும் கண்காணிக்கப்படுவதால், தரமான குடிநீருக்கு நாங்கள் உத்திரவாதம் தருகிறோம்”.

தனியாக வசிக்கும் பேச்சுலர்களை குறி வைத்து தொடங்கப்பட்ட இந்த செயலியில் பெரும்பாலும் குடும்பத்தினரே பயன்படுத்துவதாகக் கூறுகிறார் தினேஷ். “அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வாடிக்கையாளரிடம் நற்பெயர் பெற்றுவிட்டால் அதன் மூலம் பல வாடிக்கையாளர்கைளை எளிதில் ஈர்த்து விட முடியும் என்பதை உணர்ந்துள்ளதாகவும்” தினேஷ் கூறுகிறார்.

“இருவருமே வேலையை விட்டுவிட்டு தொழில்முனைவு பக்கம் கவனம் செலுத்தியதால், இவர்களின் குடும்பத்தினருக்கு சற்று கவலை இருந்தது” என்கிறார் மோகன். எனினும் எங்களது செயலிக்கு கிடைத்துள்ள வரவேற்பையடுத்து எங்கள் பெற்றோருக்கு எங்கள் மீது நம்பிக்கை வந்துவிட்டது” என்கிறார் தினேஷ். “சாதிக்க வேண்டும் என்ற முனைப்போடு இருப்பதால் நிச்சயம் வெற்றி காண்போம்” என்கிறார் மேலும்.

“சொந்த சேமிப்பு பணம் ரூ.5 லட்சத்தை முதலீடாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த தொடக்க நிறுவனம் மூலம் இன்னும் லாபம் பார்க்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில் நாங்கள் தான் இந்தத் துறையின் முன்னோடிகளாக இருப்போம்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் மோகன். குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இருக்கும் விற்பனை வளையத்தை சென்னை முழுவதும் விரிவாக்கம் செய்யும் விதத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் இவர்கள்.

தாகத்திற்கு தண்ணீர் கொடுத்தால் புண்ணியம் என்ற பழமொழிக்கு ஏற்ப, ஏற்ற தாழ்வு பாராமல், மாற்றத்தை காண உழைத்து வரும் இவர்கள் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம்.

செய்லியை பதிவிரக்கம் செய்ய: CanCan