சொந்த ஊர் மாணவிகளை தன்னைப் போல் தொழில்நுட்பத் துறையில் சிறக்க வழிகாட்டும் மதுரை இளைஞர்!

2

பெங்களுருவில் பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தில் சீனியர் இன்ஜினியராக கைநிறைய சம்பளம் ஈன்றபோதும், தான் பிறந்து வளர்ந்த மண்ணின் மைந்தர்களும் தொழில்நுட்பத்தில் மேன்மை அடைந்து பல புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடவேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு லாபநோகமற்ற பயிற்சி மற்றும் வழிகாட்டி தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார் மதுரையைச் சேர்ந்த செந்தில்குமார். 'மீடுமென்டர்.ஆர்க் (metoomentor.org) என்ற அந்த அமைப்பு, இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களில் வசிக்கும் மாணவர்கள் குறிப்பாக பெண்களிடையே தொழில்நுட்ப அறிவு மற்றும் திறனை வளர்க்க ஊக்கப்படுத்தும் வகையில் பல  பயிற்சி திட்டங்களையும், நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.

தொழில்நுட்பத்துறையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளதாக நான் கருதுகிறேன். எனவே என் சொந்த ஊரான மதுரையில் உள்ள மாணவிகளைத் தொழில்நுட்பக் கல்வி பெறச் செய்து, டெக்னோவேஷன் சேலன்ஜ் போட்டிகளில் பங்கு கொள்ள எங்கள் அமைப்பின் மூலம் வழிகாட்டி வருகிறேன்," என்று தொடங்கினார் செந்தில்குமார்.  

மேலும் அவரது பயணம் குறித்து தமிழ் யுவர்ஸ்டோரியுடன் பகிர்ந்து கொண்டவை!

செந்தில் குமார்
செந்தில் குமார்

ஆக்கமும் அடித்தளமும்

இன்ஜினியரிங் படிக்கும் பல மாணவர்களுக்கு, இப்போது வேலை கிடைப்பதில்லை. வேலை கிடைத்தவர்களும், தான் படித்ததற்கு சம்பந்தம் இல்லாத துறைகளில் வேலை செய்து வருவதாக கூறுகிறார் செந்தில்குமார். தான் பணிபுரியும் Qualcomm நிறுவனத்தில்  பணிபுரிபவர்கள் ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களில் பட்டம் முடித்தவர்கள். அவர்களுக்கும் துறையில் பெரியதாய் திறன் உள்ளது என்று சொல்லிவிட முடியாது. ஆனால், புதியபுதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ளும் சூழல், அவர்களுக்கு அமைந்திருந்தது. அது அவர்கள் முன்னேற்றம் காண உதவியது. இதேபோன்ற ஒரு வெளிபாடும் அனுபவமும், தன் சொந்த ஊர் மாணவர்களும் பெறவேண்டும் என்று விரும்பியே மீடுமென்டர் அமைப்பை தொடங்கியதாக விளக்கினார் செந்தில்குமார்.  

அண்ணன்-தங்கையின் முயற்சி

செந்தில்குமார் பணிபுரியும் Qualcomm Inc நிறுவாம் 'டெக்னோவேஷன் சேலன்ஜ்' என்று பெண்களுக்காக உலகளாவிய தொழில் முனைவு வழிகாட்டும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தும். அந்நிகழ்ச்சி நிர்வகிப்பவர்களில் செந்திலும் ஒருவராய் இருக்கிறார். முதல் முறை, இந்த நிகழ்ச்சி 2014 இல் பெங்களூரில் உள்ள உயர்நிலை பள்ளிகளில் நடைப்பெற்றது. இதே போன்ற நிகழ்ச்சியை மதுரையிலும் நடத்தக் கோரி கேட்டபோது, மெட்ரோ நகரங்களில் மட்டும்தான் அடை நடத்தமுடியும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Metoomentor குழு
Metoomentor குழு

அதனால், metoomentor.org இன் துணை நிறுவனரும், செந்திலின் சகோதரியுமான மணிமாலா, இதுபோன்ற நிகழ்ச்சியை மதுரையில் நடத்த இவருக்கு துணைபுரிய ஒப்புக்கொண்டுள்ளார். பின், மணிமாலாவின் உதவியுடன், ஐந்து பேர் கொண்ட குழுவாய், சுய முதலீடு செய்து, இத்திட்டத்தை மதுரையில் நடத்தத் தொடங்கினர். 

இதுவரை, மீடுமென்ட்டர் மூலம் மதுரை பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கல்லூரி பெண்களுக்கு தொழில்நுட்பத் திறன் பயிற்சி அளித்து வழிகாட்டியாக செயல்பட்டுள்ளோம். இந்த மாணவிகளை பெண் தொழில்முனைவு நிகழ்ச்சிகள், நாஸ்காம் 10,000 ஸ்டார்ட் அப்ஸ், கூகிள் லான்ச்பேட், பயர்பாக்ஸ் வெப் மேக்கர் போன்ற பல போட்டி மற்றும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு பயன்பெற வழிகாட்டியுள்ளோம்," என்றார்.   

2014 இல் நடைப்பெற்ற டெக்னோவேஷன் சேலன்ஜ் போட்டியில் இந்த மாணவிகள், ஆண்ட்ராய்ட் செயலிக்கான புதிய ஐடியாக்களை உருவாக்கி விண்ணப்பித்து அதில் கலந்துகொண்டுள்ளனர். மதுரை அருகாமையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் வழிகாட்டிகளை உருவாக்கி அவர்களுடன் மாணவிகள் ஆலோசனைப் பெற்று 'ஹேக்கத்தான் போட்டிகளில்' கலந்துகொள்ளவும் 'மீடுமென்ட்டர்' உதவி வருகிறது.  

செந்தில்குமாரின் பின்னணி

தொழில்நுட்பதில் ஆர்வம் கொண்ட செந்தில்குமார் மதுரையில் பிறந்து, சென்னை அண்ணா பல்கலைகழகத்தில், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் முடித்தவர். படித்து முடித்தவுடன், அரிசென்ட் டெக்னாலஜிஸில் ஒரு வருடம் பணி புரிந்தார். பின், சாம்சங் நிறுவனத்தில் இரண்டு வருடம் பணிபுரிந்த போது, மொபைல் டெக்னாலஜியில் சில காப்புரிமைகளைப் (Patents) பெற்றுள்ளார்.

தற்போது, ஃக்வால்காம்ம் இன்க் (Qualcomm Inc) நிறுவனத்தில், சீனியர் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும், இவர் எலக்ட்ரான்கள் மற்றும் செமி-கண்டக்டர்ஸ் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஆர்வம் கொண்டவர்.

"நம் மனம் விரும்பும் வேலையை நாம் செய்ய வேண்டும். அதனை எப்பொழுதும் விட்டுக்கொடுக்காமல், ஈடுபாடுடன் வேலை செய்ய வேண்டும்," என்கிறார்.

வயர்லெஸ் மற்றும் நெட்வொர்க் நெறிமுறைகளின் முன்னேற்றம் மற்றும் C முதலிய கணினி மொழிகளைக் கொண்டு தீவிரமான ப்ரோக்ராம்மிங்க் பணிகளில் ஈடுப்பட்டுள்ளார். மற்ற நேரங்களில், வலைத்தளம் வடிவமைப்பு (Website designing), மொபைல் செயலி டெவலப்மென்ட் (Mobile app development) என்று பல தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை செய்து வருகிறார். 

  • பயிற்சி வகுப்பு

சந்தித்த சவால்கள்! சாதனை கண்ட மாணவிகள்!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை இந்த போட்டிகளில் ஈடுப்பட வைப்பது, கடினமான ஒன்றாய் இருந்தது. பெரும்பாலான கல்லூரிகள், அவர்களின் மாணவர்களுக்கு இதில் பங்கு கொள்ள திறமை இல்லை என்று குறைத்து மதிப்பிட்டார்கள். தொழில்நுட்ப ஞானம் குறைவாக இருக்கும் இரண்டாம் அடுக்கு நகரங்களில், இந்நிகழ்ச்சி நடத்துவது சவாலாக இருந்தது. 

ஆனால், மதுரை மாணவிகள் என் நம்பிக்கைக்கு ஏற்றவாறு, இதில் நன்றாக ஈடுபாடு காட்டினர். அதற்கு பலனாக, டெக்னோவேஷன் போட்டியில், பல்கலைக்கழக பிரிவில் பிராந்திய மட்டத்தில் (Regional level) வெற்றியும் கண்டோம், என்று தன்  மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

வருங்கால லட்சியம்

வருங்காலத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் உள்ள மேலும் பல கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நுட்பத் துறையில் நல்ல வாய்ப்புகளும், விழிப்புணர்வும் ஏற்படுத்துவதே, இவர்களது முக்கிய இலக்காக உள்ளது.

"மனம் தளராதே... பொதுவான அறிவுரைகளைக் கேட்டு நடக்காதீர்... உங்களுக்கு விருப்பமில்லாதவற்றை செய்ய முயற்சிக்காதீர்கள்..." என்று கூறி விடை பெற்றார் செந்தில்குமார். 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Stories by Induja Ragunathan