கல்லூரி கட்டணத்தில் தொழில் தொடங்கிய சென்னை இளைஞர்!

தொழில் துவங்குவதற்கு பணமோ வயதோ தடை இல்லை என்று தொழில்முனைவரான அசாருதீன். 

21

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் வசிக்கும் 23 வயது அசாருதீனுக்கு சிறு வயதிலிருந்தே சொந்தமாக தொழில் தொடங்கும் ஆர்வம் இருந்ததால், கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் போது நிறுவனம் ஒன்றை துவங்கினார். நடுத்தர குடும்பத்தில் டெய்லரின் மகனாக பிறந்தபோதும், தொழில் மீது கொண்ட காதலால் பல தடைகளை தாண்டி தொழிலை தொடங்கி இன்று மாதம் 1.5 லட்சம் ரூபாய் வருமானம் வரை ஈட்டுகிறார். 

கல்லூரியில் படிக்கும் போதே, துணிச்சலாக தான் நினைத்த நிறுவனத்தை அசாருதீன் தொடங்கியது எப்படி? அதில் வளர்ச்சி அடைய அவர் செய்தவை என்ன? 

 சிறுவயது முதல் தொழில்முனைவு கனவு

பள்ளியில் படிக்கும் போதிருந்தே தொழில்முனைவர் ஆக வேண்டும் எனும் எண்ணம் இருந்தது என்று தன்னைப் பற்றி பேசத்தொடங்கிய அசாருதீன், பல கனவுகளுடன் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். 

”எனக்கு எலக்ட்ரானிக்ஸ் ரொம்பவும் பிடிக்கும் கண்ணில் படும் எலக்ட்ரானிக் பொருட்களின் பாகங்களை பிரித்துவிட்டு அதன் செயல்பாடுகளை ஆராய்வேன். இதனால் எனக்கு கணினி ஹார்டுவேரில் ஆர்வம் ஏற்பட்டு அதை கற்றுக்கொண்டேன்,” என்றார். 

தானீஷ் அஹமது பொறியியல் கல்லூரியில் இன்ஜினீரிங் முடித்துள்ள அசாருதீனின் அப்பா அப்பாஸ் ஒரு டெய்லர். குடும்பப் பொறுப்புடன் இருந்த அசாருதீன், கல்லூரியில் படிக்கும் போதே பகுதி நேரமாக கம்ப்யூட்டர் ட்ரைனிங் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரிந்துள்ளார். புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும், நான் கற்றுக்கொண்டதை பிறருக்கு கற்றுக்கொடுப்பதிலும் எனக்கு ஆர்வம் அதிகம் எனவே இத்துறையை தொழிலாக தேர்ந்தெடுத்தேன் என்றார். ஆர்வ மிகுதியால் கல்லூரி விடுமுறை நாட்களில் முழு நேரமும் அங்கேயே செலவிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி கல்லூரியில் முதல் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் போது தொழில் தொடங்குவதில் ஆர்வம் ஏற்பட்டதால், எனது வீட்டின் அருகில் ஒரு சிறிய கடையை வாடகைக்கு எடுத்து கம்ப்யூட்டர் பழுது நீக்கும் தொழில் செய்தேன். கல்லூரி படிப்பு காரணமாக என்னால் அதை தொடர முடியவில்லை. ஒரு ஆண்டுக்குள்ளாகவே அதை நிறுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது. எனினும் கம்ப்யூட்டர் குறித்த தனது ஆர்வம் குறையவில்லை என்ற சொன்ன அசாருதீன், தொடர்ந்து ப்ரோக்ராம்மிங் மற்றும் ஏனைய கம்ப்யூட்டர் டெக்னாலஜியை கற்றுக்கொண்டு தன் அறிவை வளர்த்துக்கொண்டார்.

தொழில், முதலீடு, செயல்பாடுகள்

”உங்களின் கனவை நீங்கள் வளர்த்தெடுக்கவில்லை என்றால் வேறொருவரின் கனவை வளர்க்க உங்களை அவர்கள் பணியிலமர்த்திவிடுவார்கள்,”  எனும் வாக்கியத்தால் கவரப்பட்ட அசாருதீன், தொழில்முனைவில் தான் ஈடுபட அதுவே உந்துதலாக இருந்தது என்றார். 

“எனது ரோல் மாடல் ஸ்டீவ் ஜாப்ஸ். மற்றப்படி தொழிலில் எனது வழிகாட்டி எப்போதும் என் அப்பா தான் ஏனென்றால் முடிவெடுக்கும் அதிகாரத்தை அவர் என்னிடமே விட்டுவிடுவார். ஒருவேளை நான் தவறான முடிவை எடுத்துவிட்டாலும் அதை சரி செய்ய சொல்லி என்னை ஊக்கப்படுத்துவார்.”

2015 செப்டம்பர் மாதம் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது, அசாருதீனின் அப்பா கல்லூரியில் ஆண்டு கட்டணம் செலுத்துவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் தயார் செய்து வைத்திருந்தார். இந்நிலையில் சொந்தமாக தொழில் துவங்க ஒரு வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதை தவற விட மனமில்லாமல் தன் அப்பாவிடம் வாய்ப்பு குறித்து விளக்கி அதற்கு அவரை சம்மதிக்க வைத்துள்ளார் இந்த இளைஞர்.

’கல்லூரி கட்டணத்தை பிறகு பார்த்த்துக்கொள்ளலாம் தைரியமாக நீ தொழில் துவங்கு’ என்று தன் அப்பா அன்று ஊக்கமளித்ததை அடுத்து, 2015 செப்டம்பர் மாதம் ’பிரின்ஸ் கம்ப்யூட்டர் எடுகேஷன்’ என்ற பெயரில் கம்ப்யூட்டர் ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட் துவங்கினார் அசாருதீன்.

துவக்கத்தில் பல இடையூறுகளை சந்தித்தாலும் தொடர்ந்து முயற்சி செய்து நிறுவனத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு 1.5 லட்சம் ரூபாய் செலவழித்து தொடங்கினார். விளம்பரம் சம்மந்தமான செலவுகளுக்கு, வெளி நிறுவனங்களுக்கு போஸ்டர் மற்றும் வெப் சைட் டிசைனிங் வேலைகளை பகுதிநேரமாக அசாருதீனும் அவரது தம்பியும் செய்து வருமானம் ஈட்டி அதை சொந்த நிறுவன செலவுகளுக்கு பயன்படுத்தியுள்ளனர். இக்கட்டான பொருளாதார சூழலில் எனது அப்பா மிகவும் உதவியாக இருந்தார் என்றும் கூறினார்.

”பயிற்சி மையத்தில் பல புதுமைகளை செய்தோம். கணினி பயிற்சி மட்டுமின்றி வேலைவாய்ப்பிற்கு உதவும் பயிற்சிகளையும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம்.” 

இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் இவரது பயிற்சி நிறுவனம், சராசரியாக ஒரு மாணவருக்கு 2000 ரூபாய் முதல் கட்டணம் வசூலிக்கின்றனர். அரசு பள்ளியில் படிக்கும் தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் தொழில்நுட்பத்தை இலவசமாக கற்றுத்தருகின்றனர். 

சந்தித்த சவால்களை சமாளித்தது எப்படி?

நிறுவனம் தொடங்கிய பொழுது மிகுந்த சவால்களை சந்திக்க நேர்ந்துள்ளது. குறிப்பாக வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

”அந்த சூழலில் எனது நண்பர்கள் சில மாதம் சம்பளம் இல்லாமல் எனக்காக வேலை செய்தார்கள். வர்தா புயலின் போதும் அதற்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தின் போதும் எங்களது பயிற்சி மையம் பெரும் சேதத்திற்கு உள்ளானது. குறிப்பாக வெள்ளத்தின் போது ஏற்பட்ட சேதத்தில் இருந்து மீள்வது கடினமாக இருந்தது, ஏனென்றால் அது புதிதாக தொழில் துவங்கிய தருணம்.”

மறுகட்டமைப்புக்கு தேவையான பொருளாதாரம் இல்லாமலும், கல்லூரியில் இறுதி செமெஸ்டரில் இருந்த சமயம் என்பதாலும் கடுமையான நஷ்டத்துடன் சிரமப்பட்டுள்ளார் அசாருதீன். இருந்தும் விடாமுயற்சியுடன் சில நண்பர்களின் உதவியால் எல்லாவற்றையும் சரி செய்ததை நினைவுக்கூர்ந்தார். 

தற்போது லாபத்துடன் இயங்கி மாதம் 1.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் காணும் இவர், சந்தையில் புதிய தொழில்நுட்பங்களின் ஆதிக்கத்தை கவனித்து அதற்கு ஏற்றார் போல் தங்களை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக டேட்டா அனலிடிக்ஸ் (data analytics), கிளவுட் கம்ப்யூட்டிங் (cloud computing), நெட்ஒர்க் செக்யூரிட்டி (network security) போன்ற துறைகளில் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.

வருங்கால திட்டம்

தற்போது 45 விதமான கம்ப்யூட்டர் கோர்சுகளை வழங்கி வரும் இவர்கள், கூடியவிரைவில் புதிய கோர்ஸ்களையும் நடத்த திட்டமிட்டுள்ளனர். நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய முதலீடுகளுக்கு முயற்சி எடுத்து வருவதாகவும், நிலையான பார்ட்னர்ஷிப் வழியில் பணிபுரிய கவனம் செலுத்திவருவதாக அசாருதீன் கூறினார்.

”வருங்கால திட்டமாக, இளம் தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் ஸ்டார்ட்=அப் இன்குபேட்டர் (Startup Incubator) மற்றும் பங்கிட பணியிடம் (Co-working space) போன்றவற்றை துவங்க திட்டமிட்டுள்ளேன்," என்றார்.

தன்னை அதிகம் ஊக்கப்படுத்திடும் ஸ்டீவ் ஜாப்சின் வரிகளான, “If today were the last day of my life, would I want to do what Iam about to do today” என்றதன்படி தான் நினைத்த வேலைகளை அன்றைக்கே முடித்து விடுவேன், என்று கூறினார் தன்னம்பிக்கை குறையாத அசாருதீன். 

Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Related Stories

Stories by Induja Ragunathan