ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கையில் தாக்கம் செலுத்திய புத்தகங்கள்...  

1

“இந்த பிரபஞ்சத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்.” –ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு புரியாத புதிர். அவருடைய அறிவுக்கூர்மை மற்றும் இணையில்லா ஈடுபாடு ஒரு நிறுவனம் அல்லது பொருள் சார்ந்ததாக மட்டும் இருக்கவில்லை. தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்ப மாற்றத்தின் அடையாளமாக அவர் திகழ்கிறார். ஒரு கலைஞன் போல இருந்தவர் முழுமை மீது கொண்டிருந்த ஈடுபாடு தொழில்நுட்பத்தை நாம் அணுகும் விதத்தை மாற்றி அமைத்து அவற்றை தினசரி பயன்பாட்டாக மாற்றியது. 

ஜாப்ஸ் வாழ்க்கையின் பாடங்களை வாழ்க்கையில் இருந்தே பெற்றுக்கொண்டார். அதிலும் குறிப்பாக புத்தகங்களில் இருந்து பெற்றுக்கொண்டார். இவை அவரது பணிகள் மற்றும் அவர் விட்டுச்சென்றுள்ள சகாப்தம் மீதும் பெரும் தாக்கம் செலுத்தின.

ஷட்டர்ஸ்டாக் படம் 
ஷட்டர்ஸ்டாக் படம் 

ஜாப்ஸ் ஆன்மிக நாட்டம் கொண்டிருந்தார். சுதந்திர சிந்தனை மற்றும் கலை மீதும் ஆர்வம் கொண்டிருந்தவர், ஜென் பாணி பெளத்தத்தை பின்பற்றினார். கல்லூரியில் இருந்து பாதியில் விலகி ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றத்துவங்கிய நிலையிலும், அவரது புத்தக அலமாரி வாழ்க்கையை மாற்றக்கூடியவர்கள் என அவர் கருதியவர்களின் புத்தகங்களை கொண்டிருந்தது.

புத்தக புழுவாக திகழ்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ் தனது வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் மிக்க காலத்தில் வாசித்து தாக்கத்தை உணர்ந்த புத்தகங்கள் இவை:

1984, ஜார்ஜ் ஆர்வெல்

“கடந்த காலத்தை கட்டுப்படுத்துபவர்கள் எதிர்காலத்தை கட்டுப்படுத்துகின்றனர். நிகழ்காலத்தை கட்டுப்படுத்துபவர்கள் கடந்த காலத்தை கட்டுப்படுத்துகின்றனர்.”

சர்வாதிகாரத்தை விவரிக்கும் ஆர்வெல்லின் இந்த நாவல் சமூகம் பிக் பிரதரால் முழுவதும் கட்டுப்படுத்தும் திகிலான எதிர்காலம் பற்றி பேசுகிறது. ஆர்வெல் விவரிக்கும் முழு சர்வாதிகார நாடு, கண்காணிப்பு என்பது நமது இருப்புடன் பின்னி பிணையத்துவங்கியிருக்கும் நம்முடைய காலத்தை நினைவு படுத்துகிறது. ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இந்த புத்தகம் ஜாப்ஸ் வாழ்க்கையில் பெரும் தாக்கம் செலுத்தியது. மேக் கம்ப்யூட்டர்கள் வருகையை அறிவித்த புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் 1984 சூப்பர் பவுல் விளம்பரத்திலும் இதன் தாக்கத்தை உணரலாம். ஒரு யோகியின் சுயசரிதை, பரமஹம்ச யோகனந்தா

“இந்தத் தருணத்தில் அமைதியாக வாழுந்து உங்களைச்சுற்றியுள்ள அழகை ரசியுங்கள். எதிர்காலம் தன்னை தானே கவனித்துக்கொள்ளும்...”

ஜாப்ஸ் பெளத்தம் மீது ஆர்வம் கொண்டவர் என்றாலும், இந்து மதம் மீதும் அவருக்கு இடைவிடாது ஆர்வம் கொண்டிருந்தது. உயர் நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது அவர் பரமஹம்ச யோகானந்தாவின் சுயசரிதை நூலை எதிர்கொண்டார். முதல் முறையாக தெய்வாம்சத்தை சந்தித்தது முதல் பின்னர் ஆன்மீகத்தை கற்றுத்தரும் வாழ்க்கையை மேற்கொண்டது வரை தனது பயணத்தை அவர் அந்த புத்தகத்தில் விவரித்திருந்தார்.

இமய மலை அடிவாரத்தில் அமர்ந்த படி ஜாப்ஸ் இவ்வாறு கூறியிருந்தார்:

“எனக்கு முன்னர் வந்து சென்ற பயணி விட்டுச்சென்ற ஒரு யோகியின் சுயசரிதை நூல் அங்கு இருந்தது. வேறு செய்ய அதிகம் இல்லாததால் அந்த புத்தகத்தை பல முறை படித்தேன்.”

2011 நினைவு கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் இந்த புத்தகத்தின் நகல் அளிக்கப்படும் அளவுக்கு அவர் வாழ்க்கையில் இந்த புத்தகம் தாக்கம் செலுத்தியது.

இன்சைடு தி டொரண்டோ, ஜெப்ரி ஏ மூர்

“சந்தையின் உறுப்பினர்கள் என்ற முறையில் நம்முடைய நடத்தை மாற்றம் இல்லாமல் இருக்கிறது: நாம் மந்தையாக நகர்கிறோம். அங்கும் இங்கும் அலைந்து திடீரென கூட்டமாக முட்டித்தள்ளி கொள்கிறோம்.”

‘இன்சைடு தி டோர்னடோ’ வெகுஜன வாடிக்கையாளர் சந்தை மீது கவனம் செலுத்த துவங்கிய பிறகு தொழில்நுட்ப நிறுவனம் சந்திக்கும் மாற்றத்தை விவரிக்கும் மூரின் முந்தைய புத்தகமான கிராஸிங் தி சாஸம் புத்தகத்தின் தொடர்ச்சியாக அமைகிறது. தங்கள் சேவை அல்லது தயாரிப்புகளுக்கு பரந்த வாடிக்கையாளர்களை நாடும் கண்டுபிடிப்பாளர்களுக்கு உதவ விரும்பும் மார்க்கெட்டிங் வல்லுனர்களுக்கான வழிகாட்டியாக இந்த புத்தகம் விளங்குகிறது. ஜாப்ஸ் தலைமையின் கீழ், ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை வெளியிடும் சுழற்சி, துவக்க நிலை பயனாளிகள் எப்படி ஒரு பொருளின் வேகமான வெற்றிக்கு உதவுவார்கள் எனும் மூரின் கருத்தாக்கம் சார்ந்து அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.

கிங் லியர், வில்லியம் ஷேக்ஸ்பியர்

எனக்கு எந்த பாதையும் இல்லை, எனவே விழிகள் வேண்டாம்,

நான் பார்த்த போது தடுமாறி விழுந்தேன். அது முழுவதும் தெரிந்தது

நம்முடைய வழிகளை காப்பாற்றுகின்றன, நம்முடைய குறைகள்

நம்முடைய பாதகங்களாகின்றன.”

ஜாப்ஸ், ஷேக்ஸ்பியரை விரும்பி படித்தார். அவருக்கு மிகவும் பிடித்தமானது கிங் லியர் நாடகம். இது விநோதமான தேர்வாக இருக்கலாம் என்றாலும், ஹவ் டு திங் லைக் ஸ்டீவ் ஜாப்ஸ் புத்தக ஆசிரியரான டேனியல் ஸ்மித் இது பொருத்தமானது என்கிறார்.

உன்கள் ராஜ்ஜியம் மீது கட்டுப்பாட்டை இழக்கும் போது என்ன நடக்கும் என்பதற்கான உதாரணமாக கிங் லியர் இருப்பதால், சி.இ.ஓவாக விரும்பும் எவருக்கும் இந்த கதை சுவாரஸ்யமானது என்கிறார் ஸ்மித்.

பை ஹியர் நவ், ராம் தாஸ்

“நீங்கள் சுதந்திரமானவர் என நினத்தால், அதிலிருந்து தப்பிக்கும் வழி இல்லை.”

இந்த புத்தகம் நான்கு பகுதிகளைக் கொண்டது. ஜாப்ஸ் மீது மிகுந்த தாக்கம் கொண்ட யோகா கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட ஒருவரின் ஆன்மிக விழிப்புணர்வை இது விவரிக்கிறது. இது தன் மீது மிகுந்த தாக்கம் செலுத்தியதாகவும், வாழ்க்கை மீதான பார்வையை மாற்றி தனது நண்பர்கள் மத்தியிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் ஜாப்ஸ் கூறியுள்ளார்.

மோபிடிக், ஹெர்மன் மெல்விலே

“என்ன எல்லாம் வரும் என்பது எனக்குத்தெரியாது, ஆனால் எது வந்தாலும் அதை சிரித்துக்கொண்டே எதிர்கொள்வேன்.”

நன்மை மற்றும் தீமைக்கு இடையிலான போராட்டத்தை உருவகமாக சித்திரிக்கும் இந்த கதையில், மற்ற எவரையும் விட லட்சியம் மிக்க பாத்திரமாக விளங்கும் கேப்டன் அஹாப் மீது ஜாப்ஸ் மிகுந்த அபிமானம் கொண்டிருந்தார். போராட்டம், நம்பிக்கை மற்றும் நனவோடை ஆகியவற்றின் செய்தியை கொண்டிருப்பதால், இந்த நாவல் அது வெளியான 1891 முதல் எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களை கவர்ந்து வருகிறது.

தி இன்னவேட்டர்ஸ் டைலமா, கிளேட்டன் கிறிஸ்டென்சன்

“தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு நல்ல மேலாளர் சரியான வேலைக்கு சரியான நபர்களை தேர்வு செய்து, பயிற்சி அளித்து ஊக்கம் அளிப்பதோடு, அந்த வேலைக்கான சரியான நிறுவனத்தை தேர்வு செய்து, உருவாக்கி தயார் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.”

ஹார்வர்டு பேராசிரியர் கிளேடன் எம்.கிறிஸ்டென்சன் எழுதிய இந்த பாராட்டு பெற்ற புத்தகம், சில நேரங்களில் எல்லாவற்றையும் சரியாக செய்தாலும் ஒரு நிறுவனம் சந்தையில் முன்னிலை இடத்தை இழந்து காணாமல் போகும் வாய்ப்பு இருக்கும் கசப்பான உண்மையை உணர்த்துகிறது. இதற்குத் தீர்வாக நிறுவனங்கள் செய்யக்கூடியவற்றை அவர் விவரிக்கிறார். 

மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவதற்கு பதில் அடுத்த அலை தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். எளிமையாகக் கூறுவது என்றால், நிறுவனங்கள் வழக்கமான மற்றும் பாரம்பரிய அணுகுமுறையால் புதுமையான கண்டுபிடிப்புகளை அரவணைக்கத்தவறி அடுத்த அலையை தவறவிடுகின்றன.

ஆப்பிளுக்கு ஒரு போதும் இந்த நிலை வராது என தெரிவித்த ஜாப்ஸ் இப்படி கூறினார்:

“கிளேட்டன் கிறிஸ்டென்சன் கூறுவது போல, கண்டுபிடிப்பாளர் தடுமாற்றம் காரணமாக, அதாவது ஒன்றை கண்டுபிடிப்பவர்களே அது காலாவதியாவதை கடைசியாக உணர்பவர்களாக இருப்பதால், இந்த மாற்றத்தை நாங்கள் மேற்கொள்வது அவசியம். ஏனெனில் நாங்கள் பின் தங்கிவிட விரும்பவில்லை”.

ஆங்கில கட்டுரையாளர்: சஞ்சனா ரே | தமிழில்: சைபர்சிம்மன்