சர்வதேச அளவில் வெற்றிநடை போடும் கோவை வடிவமைப்பு நிறுவனம் 'toon explainers'

1

பத்து நாடுகளில் வாடிக்கையாளர்கள், ஏழு சர்வதேச மொழிகளில் 250 காணொலி படைப்புகள் என்று பரபரப்பாகச் செயல்பட்டும், ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி இருக்கிறார் ‘டூன் எக்ஸ்ப்ளெயினர்ஸின் நிறுவனர், ஜபீர். பல்வேறுத் துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு, எக்ஸ்ப்ளெயினர் வீடியோக்கள் அதாவது விளக்கப் படங்களை தயாரித்துக் கொடுக்கும், ஸ்டார்ட்-அப் நிறுவனமே, "டூன் எக்ஸ்ப்ளெயினர்ஸ்" (Toon Explainers).

“எனது பூர்வீகம் கோவை. ஸ்கூல் காலத்திலிருந்தே படம் வரைவது பெயிண்ட் செய்வது எல்லாம் மிக விருப்பம். வடிவமைப்பதில் ஆர்வம் அதிகம் இருந்ததால் தான் கல்லூரியில் படிப்புத் தேர்வு செய்த போது ப்ரோகாமிங் அல்லாமல் டிசைனிங் தேர்வு செய்தேன். முதுநிலை பட்டம் பெற்ற பிறகு வேலையில் இரண்டு வருடம் இண்டர்னாகத் இருந்தேன். அதன் பிறகு தான் வடிவமைப்பை கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொண்டேன். அனிமேஷன் செய்யவும் அங்கே கற்றுக் கொண்டேன்.

அதற்குப் பிறகு பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே எனக்கு மொபைல் விளையாட்டுக்கள், மொபைல் செயலிகள் வடிவமைக்கும் பொறுப்பு.

"எனக்குத் தொடக்கத்திலிருந்தே தொழில்முனைவு கனவாக இருந்ததில்லை. மற்ற மீடியா ஏஜென்சியிஸ் செய்வதை எல்லாம் நான் கவனித்துக் கொண்டே இருந்த போது, அதுவே மெல்ல எனக்கு ஊக்கமாய் மாறியது. வேலையில் சேர்ந்து ஆறு வருடம் அனுபவம் கிடைத்த பிறகே, தனியே மீடியா ஏஜென்சி நிறுவனம் தொடங்க வேண்டும் எனத் தோன்றியது.”

அவரோடு அதே நிறுவனத்தில், டெக்னிக்கல் ரைட்டராக வேலை செய்துக் கொண்டிருந்தவர் காந்திமதி. ஜபீருக்கு ராபர்ட் பாஷில் வேலைக் கிடைக்க, காந்திமதிக்கு ஐ.பி. எம்-ல் வேலை கிடைத்தது. இருவருமே அந்த வேலையை தேர்ந்தெடுக்காமல், e5 என்றொரு வடிவமைப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.

டூன் எக்ஸ்ப்ளெயினர்ஸ் குழு
டூன் எக்ஸ்ப்ளெயினர்ஸ் குழு
“நாங்கள் இருவருமே தொழில்நுட்பம் சார்ந்து வேலை செய்பவர்கள் எங்களுக்கு வணிக ரீதியாக எந்தப் புரிதலுமே இருந்திருக்கவில்லை”, எனத் தன் முதல் சறுக்கலை குறிப்பிடுகிறார்.

e5, வணிக அனுபவமில்லாக் காரணத்தினால் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதுவரை சேமித்து வைத்திருந்த அனைத்தையுமே இழந்த நிலை. எனிலும், இனி ஒரு வழக்கமான வேலைக்குச் சென்று வாழ்க்கை நடத்தலாம் என சிந்திக்காமல், மறுமுறை தொழில் முனைவின் தொடக்கத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். இம்முறை, அரசின் உதவியோடு.

“தமிழக அரசின் ‘நீட்ஸ்’ திட்டம் ( NEEDS - New Entrepreneur and Enterprises Development Scheme) - அதன் விளம்பரம் ஒன்றைப் பார்த்துவிட்டு, 'டூன் எக்ஸ்ப்ளெயினர்'-ஸின் திட்டத்தை எடுத்துச் சென்று அவர்களை அனுகினோம். அப்போது எங்களுக்கு செக்யூரிட்டி என யாரும் இல்லாததால், அடிப்படை லோன் வசதி மட்டும் கிடைக்குமென்றார்கள். மேலும், முதல் ஸ்டார்ட் அப் தோல்வியின் காரணமாய் சில கிரெடிட்டுகள் எல்லாம் இருந்தது. அதை வைத்துத் தொடங்கியது தான் 'டூன் எக்ஸ்ப்ளெயினர்ஸ்'.10 லட்சம் நிதி உதவி பெற்று தொடங்கப்பட்ட முதல் வருடத்தின் இறுதியில், ஒன்றரைக் கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருந்தோம்.”.e5 நிறுவுதலுக்கு உறுதுணையாய் இருந்த காந்திமதி, தற்போது டூன் எக்ஸ்ப்ளெயினர்ஸின் இணை நிறுவனர்

அப்படித் தொடங்கிய நிறுவனத்தில், முதல் காணொலியை தனியே வடிவமைத்திருக்கிறார் ஜபீர். 

“பின்னர் தான் குழுவை ஒருங்கிணைத்தோம். அதில் இருந்த சிக்கல்கள் என்னவென்றால், யாருக்குமே முன் அனுபவம் இல்லை. முன் அனுபவம் இருப்பவர்களை வேலைக்கு எடுத்தால் சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டியிருக்கும். அதனால், அடிப்படை வடிவமைப்பு யுக்திகள் பற்றிய அறிவு இருப்பவர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்தோம்.”

தற்போது டூன் எக்ஸ்ப்ளெயினர்ஸ்-ல் முப்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். சி இ ஓ மற்றும் க்ரியேட்டிவ் டைரக்‌ஷன் பொறுப்பை ஜபீர் பார்த்துக் கொண்டிருக்கிறார். பின்னணி குரல் மற்றும் திரைக்கதையை மேம்படுத்த ஒரு குழு இருக்கிறது. காட்சிப்படுத்துதல் மற்றும் ஸ்டோரி போர்டு- இதற்கு ஒரு குழு இருக்கிறது. பின்னணி இசை கோர்க்க ஒரு குழு. மேலும், இல்லஸ்ட்ரேஷன் மற்றும் அனிமேஷனுக்கான ஒரு குழு என்று தனித்தனியே வல்லுனர்களுடன் இயங்குகிறது டூன் எக்ஸ்ப்ளெயினர்ஸ்.

“இல்லஸ்ட்ரேஷன் மற்றும் அனிமேஷன் குழுவில் தான் அதிகமானவர்கள் இருப்பார்கள். வாடிக்கையாளருக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் வேண்டுமோ, அதை வரைந்து டிஜிட்டலாக புகுத்துவது தான் அவர்களுடைய வேலை.”

வளர்ந்துக் கொண்டிருக்கும், புரொமோஷனல் வீடியோ துறையைப் பற்றிப் பேசிய போது, “2009, 2010 ல் தான் விளக்கப்படத் துறை உருவாகத் தொடங்கியது. நான் வேலை செய்யத் தொடங்கியதிலிருந்தே ‘ப்ரொமோஷனல் வீடியோ’ என்னும் துறை இருந்துக் கொண்டே தான் இருக்கிறது. அப்போதெல்லாம், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துக் கொண்டு அதை செய்துக் கொண்டிருப்பார்கள். இருந்தாலுமே, அதை எப்படி வணிகமாக்கலாம் என மக்கள் யோசிக்கத் தொடங்கியது 2010, 2012 காலத்தில் தான்.”

ப்ரொமோஷனல் வீடியோக்களில் கார்ட்டூன்களை உபயோகப்படுத்தும் புதுமையான யோசனையே, டூன் எக்ஸ்ப்ளெயினர்ஸின் வெற்றிக்குக் காரணம். எல்லோருக்கும் எளிமையாக புரியும், வித்தியாசமான கதை சொல்லும் முறையாய் அது இருந்தது. 

“விளம்பரங்களுக்கும், ப்ரொமோஷனல் வீடியோவிற்கும் இருக்கும் வேறுபாடு என்னவென்றால், ப்ரொமோஷனல் வீடியோக்கள் சமூகம் சார்ந்தும் இருக்கும். அவை சமூக ஊடகத்தில் எளிதில் பலரை சென்றடையும்”, என மேம்பட்டிருக்கும் தொழில்நுட்பம் வழியே, நிலையாக தடம் பதித்ததை சொல்கிறார். 

டூன் எக்ஸ்ப்ளெயினர்ஸ் எந்தச் சிக்கலை தீர்க்கிறது...?

 “இன்று யாருக்குமே பெரிய பெரிய ப்ரவுச்சர்களை எல்லாம் படித்துத் தகவல் தெரிந்துக் கொள்ள நேரமும் விருப்பமும் இருப்பதில்லை. அதனால், எளிமையாய் ஒரு கருத்தைச் சொல்வதற்கு எங்கள் வீடியோக்கள் உதவுகிறது.

இட்லியைப் பற்றி ஒரு வீடியோ செய்தோம். அதன் மூலமாய் நிறைய பேரின் கவனத்தைப் பெற முடிந்தது. அது இலவசமாக செய்த காணொலியாக இருந்தாலுமே, அதைப் பார்த்துவிட்டு தான் பலர் வந்து எங்களோடு பணிபுரிய ஆர்வமாக இருந்தனர். தகவல் தொழில்நுட்பம் சார்ந்திருப்பவர்கள், புதிய செயலிகள் வடிவமைப்பவர்கள் தான் பெரும்பாலும் எங்களின் வாடிக்கையாளர்கள். தங்களது ஸ்டார்ட்-அப்களை பிரபலப்படுத்துவதற்கும், சந்தைப்படுத்துவதற்கும், முதலீட்டாளர்களை அனுகுவதற்கும் எங்கள் வீடியோக்களை உபயோகப்படுத்துவார்கள். 

அது தவிர்த்து மற்ற பலத் துறைகளுக்கும் காணொலி வடிவமைத்திருக்கிறோம். விவசாயத்திற்குக் கூட காணொலி செய்துக் கொடுத்தோம். நீர் பாசன அளவை ஒரு செயலி மூலம் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்திற்கான காணொலி அது. இதுவரை விளம்பரம் என நாங்கள் செய்துக் கொண்டதே இல்லை. எங்கள் வேலையின் தரம் பிடித்துப் போய் ஒரு வாடிக்கையாளரின் வழியே தான் பிறருக்கு அறிமுகமாகியிருக்கிறோம்,” என்கிறார் ஜபீர்.

அண்மையில் செல்லப்பிராணியான நாய் பற்றிய "Why do We Love Dogs" என்ற் ஒரு அழகான சுவாரசியமான வீடியோவை தயாரித்து வெளியிட்டுள்ளனர் இந்த குழுவினர். 

வழிகாட்டிகள் 

“தேவராஜ் - எங்கள் இயக்குனர், வழிகாட்டி, உந்து சக்தி. தொழில் முனைவில், ஏறத்தாழ இருபது வருடமாய் வெற்றிகரமாக இருப்பவர். அவருடைய அனுபவ வழியே தான் டூன் எக்ஸ்ப்ளெயினர்ஸ் உயரங்கள் தொட்டது”, என மனதார சொல்கிறார் ஜபீர். 

சாதனைகள்

இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து இரண்டு தேசிய விருது வாங்கியது, சென்னையில் நடந்த சர்வதேச மூதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக 16 காணொலிகள் வடிவமைத்தது, இந்தியாவில் வளர்ந்து வரும் 50 நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றது, ரெட் ஹெர்ரிங்கால் சிறந்த 100 நிறுவனங்கள் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டதென, டூன் எக்ஸ்ப்ளெயினர்ஸின் சாதனைப் பட்டியல் நீண்டுக் கொண்டே இருக்கிறது. 

“புரோமோஷனல் வீடியோக்களை தவிர்த்து, பத்து நொடியில் விளம்பர விடியோக்கள் செய்வதாய் திட்டமிட்டிருக்கிறோம்” என எதிர்கால திட்டங்கள் குறித்துச் சொன்ன ஜபீரிடம், தொழில் முனைவில் ஆர்வம் இருக்கும் இளைஞர்களுக்கு என்ன அறிவுரை சொல்வீர்கள் என்ற போது, 

 அனுபவத்தோடு களத்தில் இறங்குங்கள், தொழில்நுட்பத்தை அப்டேட் செய்துக் கொண்டே இருங்கள்.. அவ்வளவு தான்” என்றார்.

டூன் எக்ஸ்ப்ளெயினர்ஸ் நிறுவனம், மேலும் பல வெற்றிகளைக் கண்டுத் திளைக்க தமிழ் யுவர்ஸ்டோரி சார்பாய் வாழ்த்துக்கள் !

இணையதள முகவரி: ToonExplainers

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

நான்கு கணினியுடன் தொடங்கி ஒரு கோடி வரை ஈட்டும் கோவை நிறுவனம்!


 

வெகுஜன ஊடக மாணவி; பயணங்கள், சினிமா,காதல் மீதெல்லாம் வற்றாத நம்பிக்கை கொண்ட சின்னப் பெண்.

Stories by Sneha