உலக சந்தை எங்களின் இலக்காகவே இருந்தது - சொல்கிறார் பிராக்டோ நிறுவனர் ஷஷான்க்

0

நம் நாட்டிலேயே இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ள நிலையில், ஏன் உலகச் சந்தையை இலக்காக கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுவதில் ஆச்சர்யமில்லை. ஆனால் உலகம் மற்றும் இந்தியா என்ற பார்வை மிக முக்கியம் என்கிறார் ஹெல்த்கேர் தொழில்முனை நிறுவனமான பிராக்டோ வின் நிறுவனர் மற்றும் தலைமை அதிகாரி ஷஷான்க். வளர்ந்து வரும் நாடுகளுக்கான தயாரிப்பில் நிறுவனங்கள் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது. "தொடங்கிய முதற்கொண்டே உலகச் சந்தைகளுக்கு இலகுவாக கொண்டு செல்லக் கூடிய வர்த்தக அமைப்பிலேயே கவனம் செலுத்துவதில் முனைப்புடன் இருந்தோம்" என்கிறார் ஷஷான்க்.

நேரத்தின் முக்கியத்துவம்

உலகச் சந்தை இலக்கு மற்றும் பதினெட்டு மாதங்களில் இதை செயல் படுத்தும் முனைப்பு ஆகியவை உங்களுக்கு இருந்தால், இது ஏற்றது. நிறுவிய இரண்டு ஆண்டுகளுக்கு பின் நாங்கள் கால் பதித்த முதல் அயல்நாடு சிங்கப்பூர். புது சந்தை என்றாலும் தவறிழைப்பது பேராபத்திலேயே முடியும். "புது சந்தை, நிறுவனங்களை மேலும் செம்மைபடுத்த உதவும், ஆதலால் இது மிக முக்கியம்" என்கிறார் ஷஷான்க்.

வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள வாய்ப்பு

இந்திய நிறுவனங்கள் உலகச் சந்தையில் கால் பதிக்க இன்று அதிக வாய்புகள் உள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது இலகுவானது என்கிறார் ஷஷான்க். இணையம் மற்றும் அலைபேசி சந்தை மற்றும் நுகர்வோர் போக்கு ஆகியவை இந்தியாவை போன்றே அமைந்திருப்பதே இதற்கு காரணம். "உலகச் சந்தைமயமாக்குதல் என்பது உங்களின் இலக்கை பொறுத்தே அமைய வேண்டும், அதுவே உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானிக்கும்" என்கிறார்.

பிராக்டோ அளிக்கும் தீர்வே, பல்வேறு சந்தைகளில் கால் பதிக்க ஏதுவாகிறது. "புதிய சந்தைகளில் விரைவாக மற்றும் வெற்றிகரமாக எங்களால் செயல்பட முடிகிறது, வளர்ச்சியடைந்த நாடுகள் இச்சந்தையில் காலூன்றும் முன், நாம் விரிவாக்கம் செய்வது அவசியமானதும் கூட" என்று விவரிக்கிறார் ஷஷான்க். மொபைல் மற்றும் க்லௌட் ஆகிய நுட்பத்தை மனதில் கொண்டு தயாரிப்பை வடிவமைப்பது, மற்ற சந்தைகளை இலகுவாக கைப்பற்ற உதவும்.

கோலூன்றும் இந்திய தயாரிப்புகள்

மூன்றில் இரண்டு பங்கு இணைய சந்தை கொண்டது வளர்ந்து வரும் நாடுகள், ஆனால் அந்த சந்தை வாய்ப்பை மேற்கொள்ளும் விதமாக தயாரிப்புகள் இல்லை. உலகச் சந்தையில் கோலூன்றும் அளவுக்கு தயாரிப்புகளை வடிவமைக்க நம்மால் முடியும். எனவே இந்த இலக்குடன் செயல்படுவது அவசியம்.

பிரேசில், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் கைபேசி மூலம் வழங்கும் சேவை தயாரிப்புகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. வளர்ந்த நாடுகளை விட இங்கு நான்கு மடங்கு அதிக வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. "அதிக வாய்ப்பு உள்ள இந்த சந்தைகளை நாம் இனிமேலும் ஒதுக்க இயலாது" என்கிறார்.

பிராக்டோவின் வணிக உத்தியை பற்றி கூறுகையில் "உலக சந்தைக்கேற்ப எங்களின் தயாரிப்பை வடிவமைக்கிறோம். அயல் நாட்டு சந்தைகளில் கவனம் செலுத்தும் அதே நேரம், அங்குள்ள உள்ளூர் திறமையாளர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்துகிறோம்"

ஹெல்த்கேர் துறையில் பல முன்னேற்றங்கள் மிக விரைவாக வருவதை பல ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. புது நிறுவனங்கள் தோன்றுவது மட்டுமின்றி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பும் நடக்கிறது. ஹெல்த்கேர் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி மற்றும் நிதி முதலீடும் இதற்கு சான்று.