வேலை பார்த்துக்கொண்டே பயணம் - இருவரின் அனுபவம்!

1

அனுஜா ஜோஷி மற்றும் கவுரப் மதுரே கடந்த ஆண்டு தாங்கள் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டு வெளியேறினார்கள். இதற்கு முக்கியமான காரணம், ரிமோட்இயர் என்ற நிறுவனம் ஒரு அட்டகாசமான வாய்ப்பை, உலகம் முழுவதும் இருக்கக்கூடிய சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்கினர். ஒருவர் தனது அலுவலக வேலையைப் பார்த்துக்கொண்டே, உலகம் சுற்றலாம் என்பதே அது. இதன்மூலம் 12 நகரங்களில் 12 மாதங்கள் தங்கி, அந்த பகுதிகளில் இருக்கும் கலாச்சாரத்தை ரசிக்கலாம். மற்ற நேரங்களில் ஃப்ரீலான்சாக வேலை பார்த்துக்கொள்ளலாம். விமானம் மற்றும் தங்கும் கட்டணமாக ரிமோட்இயர் நிறுவனத்திற்கு ஓராண்டு கட்டணத்தை முன்கூட்டியே செலுத்திவிட வேண்டும். இதற்கு உலகம் முழுவதிலிருமிருந்து 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். அதிலிருந்து 75 பேரை மட்டுமே தேர்ந்தெடுத்தார்கள்.

அதில் அனுஜா ஜோஷியும், கவுரப் மதூரேவும் அடக்கம். இருவரும் தங்கள் எட்டுமாத அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்கள்.

வாழ்க்கையை நிறுத்துதல்

இந்த பயணத்தை நான் துவங்கியபோது, “நீங்கள் வாழ்க்கையை கொஞ்ச காலம் நிறுத்தி வைத்துவிட்டு, பயணம் செல்கிறீர்கள்” என்று சொல்லப்பட்டது. இந்த ஓராண்டு குடும்பத்தை பிரிய வேண்டி இருக்கும். நண்பர்களை பிரிய வேண்டி இருக்கும். வாழ்க்கையை தற்காலிகமாக நிறுத்துவது என்ற வார்த்தைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. இதற்கு நேர்மாறாக தான் நடந்திருக்கிறது. இந்த பயணம் எங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. நாங்கள் ஆறு வருடங்களில் செய்ய முடியாததை வெறும் ஆறு மாதங்களில் செய்திருக்கிறோம். நாம் ஒரே நகரத்தில் வாழும்பொழுது, நம் வாழ்க்கையை குறுக்கிக்கொள்கிறோம். புதிதாக எதையும் முயற்சிசெய்யாமல் பாதுகாப்பாக இருந்துவிடுகிறோம். சில குறிப்பிட்ட தருணங்கள் அமைந்தால் மட்டுமே எதாவது செய்கிறோம்.

எங்கள் பயணம் துவங்கிய புதிதில், சில புதிய விஷயங்களைக் கண்டுபிடித்தோம், கற்றுக்கொண்டோம். குறிப்பாக ஸ்கூபா டைவிங், தொழில் துவங்கியது போன்றவை. துருக்கியில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை நேரடியாக பார்க்க முடிந்தது அபூர்வமான அனுபவம். இந்தியா மற்றும் துனீசியாவில் மூன்று திருமணங்களில் கலந்துகொண்டோம். எங்கள் பக்கத்து நாடான இஸ்தான்புல் நல்ல அனுபவத்தை வழங்கியது. ஸ்லோவேனியா மிகச்சிறப்பான நாடு என்பதை கண்டறிந்தேன். ‘Ljubljana’ என்ற வார்த்தையை எப்படி உச்சரிப்பது என புரிந்துகொண்டேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் நண்பர்களோடும், குடும்பத்தோடும் நேரம் செலவிட்டதை விட அதிகமாக இப்போது செலவிட்டிருக்கிறேன் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இவையெல்லாமும் ஃப்ரீலான்சாக பணியாற்றிக்கொண்டே பயணம் செய்ததன் மூலம் சாத்தியமானது.

இந்த ஆண்டு என்ன கொடுத்தது என யோசித்து பார்க்கும்பொழுது, புதிதாக என்ன செய்யலாம் என யோசிக்கக் கிடைத்த வாய்ப்பாகவே பார்க்கிறேன். எல்லோரும் இது போல முயற்சி செய்ய வேண்டும். ஓராண்டு எடுத்துக்கொள்ள வேண்டும் என சொல்லவில்லை. ஒரு மாதம் அல்லது இரண்டு, மூன்று மாதம். ஆனால் அது வழக்கமான ஒன்றாக இருக்கக்கூடாது. முழுக்க முழுக்க சம்பந்தமே இல்லாத ஒன்றாக இருக்க வேண்டும்.

இது விடுமுறையல்ல..புது வாழ்க்கை முறை!

ஒரு பயணம் செல்லும்போது, உங்களைப்பற்றியே நீங்கள் அதிகம் தெரிந்துகொள்வீர்கள். உங்கள் பலம், உங்களது முக்கியத்துவம், உங்களால் செய்ய முடிவது என்ன? எப்படி பயணம் செய்ய விரும்புகிறீர்கள் எனப் பல. முதல் மாதம் எங்களை இந்த பயணத்தோடு பொருத்திக்கொள்ள சிரமப்பட்டோம். இன்னமும் நியூயார்க் நகரத்தில் இருக்கும், அதே நேரமுறையைத்தான் பின்பற்றுகிறோம். ஆனால் வேறு ஒரு நகரத்தில் இதைச்செய்கிறோம். நாங்கள் பரேக் நகரத்தில் இருந்தோம். அது ஐரோப்பியாவில் இருந்த மிக அருமையான நகரம். வெள்ளிக்கிழமை இரவு 11 மணி வரை டெலிபோனில் உரையாடியது நினைவில் இருக்கிறது. எந்தவித “todo/ things to see" குறிப்புகளும் இல்லாமல் பேசினோம். பத்து நாள் விடுமுறைக்குச் செல்லும் பயணங்களில் இது போல நடந்ததில்லை.

கவுரப் மதுரே மற்றும் அனுஜா ஜோஷி
கவுரப் மதுரே மற்றும் அனுஜா ஜோஷி

ஆனால் இது விடுமுறைப்பயணம் அல்ல. புதிய வாழ்க்கை முறை. எங்களையே நாங்கள் கண்டறிவதற்கான ஒரு சாவி. வேலை பார்த்துக்கொண்டே பயணம் செய்வது, வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு மிக எளிமையான ஒன்றாகத்தெரியும். ஆனால் உண்மையில் அப்படியல்ல. ஆனால் இது மதிப்புள்ள ஒன்று. எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்றால், நீங்கள் வேலையை விட்ட உடனேயே, உங்கள் வாழ்க்கை-வேலை நேர சுழற்சிக்கு ஏற்ப தயாராகிவிடுகிறீர்கள் என்று. ஆனால் உண்மை அப்படியல்ல. ஒரு வேலை நடக்க வேண்டுமென்றால், நாம் மிகத்திட்டமிட்ட விதத்தில் செயல்பட வேண்டும். அப்போது தான் வேலை நடக்கும். இது ஒவ்வொரு நாளுமே சவாலான ஒன்றாக இருந்தது. ஒரு இடத்தைப் பார்ப்பதற்காக செலவிட்ட நேரத்தை விட, அந்த பகுதி மக்களோடு உரையாடவே அதிக நேரம் எடுத்துக்கொண்டோம் என உணரமுடிகிறது. நீண்ட தூரம் பயணித்து, அந்த பகுதிக்கே உண்டான சிறப்பான உணவை உண்டோம். இது ஒவ்வொரு நகரத்திலும் கிடைத்த அற்புதமான அனுபவமாக இருந்தது.

பின்னால் திரும்பிப்பார்த்தால் முன் நகர முடியும்

எட்டு மாத பயணத்திற்குப்பின் திரும்பிப்பார்த்தால், எங்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறி இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அந்த அனுபவத்தை வார்த்தைகளில் விவரிப்பது சிரமம். மிகச்சிறப்பான நான்கு உணவகங்களில் சாப்பிட்டது நல்ல அனுபவம். பயணம் செய்த ஒவ்வொரு பகுதியிலும் நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். இப்போது உலகம் முழுவதும் நண்பர்களாக இருக்கிறார்கள். எல்லோரும் பலவித கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் ஆர்வத்தை நோக்கி நகரக்கூடிய சுதந்திரம் கிடைத்திருக்கிறது. அது புது அனுபவத்தைக் கொடுத்தது.

புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் தங்கள் வீட்டுக்கதவை மட்டும் திறக்கவில்லை, தங்களது இதயத்தையே திறந்தார்கள். எங்களுக்கு வாழ்நாள் முழுவதும் அவர்களது நினைவு இருக்கும். பச்சாதாபம் என்பது ஒருவருக்கு வாழ்க்கை முழுக்க இருக்க வேண்டிய பண்பு. குறிப்பாக பயணத்தின் போது அது அவசியமான ஒன்றாகிறது. நகர்ந்துகொண்டே இருக்கும் ஒரு வாழ்க்கை முறை மிகப்பெரிய சுதந்திரத்தை அளிக்கிறது.

ரிமோட் இயர்ஸுக்கு வந்த பிறகு வாழ்க்கை பற்றிய எங்கள் பார்வை மாறியிருக்கிறது. நாங்கள் வாழ்க்கையை ரொம்ப திட்டமிட்டெல்லாம் வாழ்ந்ததில்லை. திட்டமிடுவது என்பது வாழ்க்கையில் சில பகுதிகளில் தேவை தான். ஆனால் அந்த நொடியில் நாம் கணக்கிட்டு முடிவெடுப்பதற்கு இது உதவியது.

நாங்கள் எங்கள் வேலையை விரும்புகிறோம். அதை முழுவதுமாக விட்டுவிட விரும்பவில்லை. அதை இப்போதைக்கு எங்களால் செய்ய முடியாது என்பது தான் உண்மை. எனவே பகுதிநேரமாக பணியாற்ற திட்டமிட்டோம். இந்த ஓராண்டு பயணத்திற்கு வருவதற்கு முன்பு எங்களிடம் ஒரு திட்டமிருந்தது. எட்டு மாதங்கள் பணி சார்ந்த வேலைகளுக்கு ஒதுக்கிவிட்டு, அடுத்த நான்கு மாதங்கள் தனிப்பட்ட ஆர்வத்திற்காக ஒதுக்கலாம் என யோசித்திருந்தோம். ஆனால் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியும் என்பதை இந்த பயணம் காட்டியது. இதை வாழ்க்கைமுறையின் ஒரு அங்கமாகவே எதிர்காலத்தில் ஆக்கிக்கொள்வோம்.

ஜப்பான் நண்பர்களோடு
ஜப்பான் நண்பர்களோடு

நிறுவனம் துவங்கினோம்

முதல் மாதம் பரேக் நகரத்திற்கு சென்ற போது எங்களுக்கென ஒரு நிறுவனம் துவங்கினோம். பிக்காபாக்ஸ் என்று அதற்கு பெயரிட்டோம். இது ஒரு நல்ல ஐடியா. இதுவரை நாங்கள் முயற்சிக்காத ஒன்றும்கூட. கடந்த எட்டு மாதங்களில் எங்களுக்கு பல முக்கியமான அனுபவம் கிடைத்திருக்கிறது. அதை உங்களுக்கு அளிக்கிறோம்.

உடனடியாக பிசினஸ் துவங்குங்கள்

உங்களிடம் லட்சக்கணக்கான திட்டங்கள் இருக்கலாம். ஆனால் அதை இறுதிக்கட்டத்திற்கு கொண்டுவருவது சிரமமான ஒன்று. ஆனால் இன்று தொழில் துவங்குபவர்களுக்கு உதவ பல எளிமையான வழிகள் இருக்கின்றன. மிக எளிமையாக ஒரு வெப்சைட் துவங்கிவிட முடியும். எளிதில் பணம் செலுத்தும் வசதிகள் இருக்கின்றன. ஃபேஸ்புக்கில் நம்மை விளம்பரப்படுத்திக்கொள்ள முடியும். உங்களுக்கு உண்மையிலேயே தொழில் மீது ஆர்வம் இருந்தால் உடனடியாக துவங்குங்கள். யோசித்துக்கொண்டு இருக்காதீர்கள்.

உங்கள் ஐடியாவை மற்றவர்களிடம் சொல்லுங்கள்

எத்தனை நாளைக்குத்தான் உங்கள் ஐடியாவை மூளைக்குள்ளேயே வைத்திருப்பீர்கள். மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அது முழுமையான ஒன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்கள் கொடுக்கும் ஆலோசனை பயனுள்ள ஒன்றாக இருக்கும். நீங்கள் சரியான பாதைக்கு விரைவாக செல்ல அது உதவும்.

மற்றவர்களோடு சேர்ந்து செய்யுங்கள்

தனியாக செய்வது கடினமான ஒன்றாக இருக்கும். எனவே இன்னொருவரோடு சேர்ந்து செய்வதன் மூலம் ஒரு வேலை எளிதாகும். ஜாலியான ஒன்றாகவும் இருக்கும்.

கட்டுரை: அனுஜா ஜோஷி மற்றும் கவுரப் மதுரே.

தமிழில் : ஸ்வரா வைத்தீ

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

வேலையை விடுத்து உலகை வலம் வரும் ஜோடி- பயணத்தில் தொடங்கிய தொழில்!

உலகைச் சுற்றும் சாகசத் தம்பதியர்!