கேமிங் மீது இருந்த ஆர்வத்தால் தொழில் முனைவரான சென்னையைச் சேர்ந்த இளைஞர்!

2

தொழில்நுட்பம் அதி வேகமாக வளர்ந்து வரும் இந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு உண்ணும் உணவில் இருந்து நம் பொழுதுபோக்கு வரை அனைத்தும் மாறிவிட்டது. முன்பு தெருக்களில் விளையாடிய விளையாட்டுக்கள் கூட இன்று ஆண்டிராய்ட் கைபேசியில் விளையாட்டாக வந்துவிட்டது. தொலைகாட்சிகளிலும் திரை அரங்குகளிலும் விளம்பரம் செய்வது போக தற்பொழுது சமூக வலைத்தளத்தில் விளம்பரம் செய்வது டிரெண்டாக உள்ளது. இந்த போக்கை பயன்படுத்தி ஓர் நிறுவனத்தை அமைத்து வெற்றிகரமாய் நடத்தி வருகிறார் சிவனேஸ்வரன்.

நிறுவனர் சிவா மற்றும் குழுவினர்
நிறுவனர் சிவா மற்றும் குழுவினர்

சென்னையில் வசிக்கும் மதுரைக்காரர் சிவா, skytou ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிறுவனர். இந்நிறுவனம் கைபேசி விளையாட்டு செயலியை உருவாக்கம் மற்றும் டிஜிட்டல் ஊடக விளம்பரமும் செய்கின்றனர். ஓர் தொழில்முனைவராய் தன் தொழில்முனைப்பு பயணத்தை பகிர்கிறார் சிவா,

“சிறு வயதில் இருந்தே கேம் என்றால் ரொம்ப பிரியம் அதேபோல் பள்ளி படிக்கும் பொழுதே சுயதொழில் மீதும் அதிக ஆர்வம் இருந்தது. எனக்கு பிடித்த இரண்டையும் ஒன்று சேர்த்து என் தொழில் பயணத்தை தொடங்கினேன்,” என்கிறார்.

சிவா 2011 ஆம் ஆண்டு தன் பொறியியல் படிப்பை முடித்தார், கல்லூரி படிப்பை முடித்தவுடன் மொபைல் அப்ளிகேஷன் டெவலப்மென்ட் நிறுவனத்தில் வணிக ஆய்வாளராக பணிப்புரிந்தார். அங்கு நான்கு வருடம் பணிபுரிந்து மொபைல் கேம் பற்றி பலவற்றை கற்ற சிவா தன் சிறுவயது கனவை நிறைவேற்ற சுயதொழில் தொடங்க முடிவு செய்தார்.

தன் நண்பருடன் இணைந்து தனக்கு தெரிந்த மற்றும் பிடித்தமான கேமிங்கில் கால் பதிக்க முடிவு செய்தார்,

“2014, அப்பொழுது தான் மொபைல் கேம்கள் இந்தியாவில் பிரபலாமாக துளிர்விட தொடங்கியது. எனவே அதை பயன்படுத்தி சுயமாக மொபைல் கேம்களை உருவாக்கலாம் என என் நண்பரின் உதவியோடு தொடங்கினேன்..”

அப்பொழுது டாக்கிங் டாம் போன்ற கேம்கள் மிக பிரபலமாக இருந்தது, இது போன்ற சில கேம்களை தூண்டுதலாக கொண்டு சொந்தமாக கேம் உருவாக்க முடிவு செய்தார் சிவா. தான் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு முழுமனதாக இதில் அடி எடுத்து வைத்தார். சிவா விளையாட்டுக்கான யோசனை மற்றும் குறிப்புகளை கொடுக்க அவரது நண்பர் கேம் தயாரிப்பில் ஈடுபட்டார்.

ஆனால் இவ்விரு நண்பர்களுக்கும் கேம் தயாரிப்பில் எந்த முன் அனுபவமும், போர்ட்ஃபோலியோவும் இல்லாததால் தங்கள் தொழிலுக்கு முதலீட்டை பெற சற்று சிரமமாக இருந்ததாக தெரிவிக்கிறார்.

“என் பழைய நிறுவனத்தில் பெற்ற பணம் மற்றும் என் மனைவியின் உதவியோடு முதலீடு செய்து விளையாட்டின் முன்மாதிரிகளை உருவாக்கினோம். அதை வைத்து ப்ரீலான்ஸ் வலைத்தளம் மூலம் அன்னிய வாடிக்கையாளர்களை பெற்றோம்.”

ப்ரீலான்ஸ் மூலம் கிடைத்த சில சிறிய பிராஜக்ட்களை முடித்து கொடுத்து தங்கள் நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவை உருவாக்கினார். அதன் பிறகு தங்களது பணிகளால் வெளியில் இருந்து மிகக் குறைந்த முதலீட்டையும் பெற்றனர்.

நிறுவனத்தின் வளர்ச்சி

2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தன் நிறுவனத்தை துவங்கி ஒன்பது மாதத்திற்குள் பல நிறுவங்களுடன் பணிபுரிந்து அந்த அனுபவத்தால் செப்டம்பர் மாதம் விஜயின் கத்தி திரைப்படத்திற்கு கேம் தயாரிக்கும் அளவு உயர்ந்தனர். கத்தி படத்திற்கு பிறகு தங்களது நிறுவனம் ஓர் பிராண்டாக வெளியில் தெரிந்தது என குறிப்பிடுகிறார். அதன் பிறகு கத்தி படம் மூலம் 2015ல் பாலிவுட் படமான ’Gabbar is Back’ படத்திற்கும் கேம் பாட்னர் ஆகினர்.

“கத்தி கேம்க்கு கிடைத்த வரவேற்பால் அடுத்து அடுத்து வந்த விஜய் சாரின் புலி, தெறி, பைரவா மற்றும் மெர்சல் படத்திற்கு டிஜிட்டல் பார்ட்னராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது,” என மகிழ்ச்சி அடைகிறார் சிவா.

தொடர்ந்து இருவருடம் மற்ற நிறுவனங்களுக்காக பணிப்புரிந்தாலும் ஒரு பக்கம் தங்கள் நிறுவனத்திற்கான சுய கேமை தயாரிக்கும் வேலையிலும் ஈடுபட்டிருந்தனர். இந்த வாய்ப்புகள் மூலம் முதலீட்டாளர்களை பெற்ற skytou ஸ்டுடியோஸ் 2016ல் ’Paw Adventure’ என்னும் தங்களது கேமை வெளியிட்டனர். இந்த கேம் பெங்களூரில் நடந்த கேமிங் மாநாட்டில் “மக்கள் தேர்வு விருதை” பெற்றது.

தற்பொழுது நிப்பான் பேய்ன்ட் உடன் இணைந்து ’மை ப்லாபி’ என்னும் கேமையும் வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையில் பல தமிழ் படங்களுக்கு டிஜிட்டல் பார்ட்னராக பணிப்புரிந்து சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தும் வருகின்றனர். இது தங்கள் நிறுவனத்திற்கு நல்ல வருமானத்தை தருவதாக தெரிவிக்கிறார் சிவா.

“எனது முக்கிய நோக்கம் ’கிளாஷ் அஃப் கிளான்ஸ்’ போல் ஓர் பிரபலமான கேமை இந்தியாவில் உருவாக்குவது தான். இதை நோக்கியே எனது பயணம் அமையும்,” என்கிறார்.

இரண்டு பேருடன் தொடங்கிய இந்நிறுவனம் தற்பொழுது ஒன்பது பேர் கொண்ட குழுவாக உயர்ந்துள்ளது. தொழில் தொடங்கி நான்கு வருடங்கள் ஆன நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் வருவாயில் ப்ரேக் ஈவன் பாயிண்டை கடக்க உள்ளது இந்நிறுவனம். 

முகநூல் பக்கம்: skytou