10 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய தயாரிப்பு தொலைக்காட்சிப் பெட்டி நிறுவனம் நிறுவிய இளைஞர்!

512 MB ரேம் வழங்கும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, அதே விலையில் Daiwa தொலைக்காட்சிகள், 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள் நினைவகம் வழங்குகிறது!

1

அர்ஜுன் பஜாஜ், வீடியோடெக்ஸ் (Videotex) என்னும் தொலைக்காட்சி உற்பத்தி நிறுவனத்தின் வாரிசு. இங்கிலாந்தில் பட்டப்படிப்பு முடித்த இவர் தனது குடும்பத்தின் எலெக்ட்ரானிக் வணிகத்தை மேம்படுத்த விரும்பினார். அவர் இங்கிலாந்தில் இருந்தப்பொழுது, அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்திய ரீட்டைலில் கால் பதிக்க தொடங்கினர். இது பாரம்பரிய தொழில்முனைவோரை ஆன்லைன் விற்பனைக்கு நகர்த்தியது.

தொழில்முனைவோருக்கு இது நல்ல வாய்ப்பாய் இருந்தாலும், அர்ஜுன் பஜாஜ் ஒரு சிக்கலை உணர்ந்தார். இங்கு எலெக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் பெரும்பாலான பிராண்டுகள், சீனாவிலிருந்து இறுதி தயாரிப்புகளை இறக்குமதி செய்கின்றனர். இதில் இன்டெக்ஸ், மைக்ரோமேக்ஸ் போன்ற பிராண்டுகளும் அடங்கும். ஆனால் அந்த பொருட்கள் தனது தந்தையின் நிறுவனமான வீடியோடேக்ஸில் அசெம்பல் செய்யப்படுகிறது. (வீடியோடெக்ஸ் இன்டர்நேஷனல், இந்தியாவின் முதன்மையான LED தொலைக்காட்சி ODM / OEM நிறுவனங்களில் ஒன்றாகும்.)

“எங்களுடன் இணைப்பில் உள்ள பிராண்டுகளுடன் உறவை மேம்படுத்த எங்கள் தொழிற்சாலையில் ஒரு வருடம் கழித்தேன். இங்கு பல வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் நம் நாட்டில் தொலைக்காட்சியை அசெம்பல் செய்ய, நாம் ஏன் சொந்த நாட்டிலே தொலைக்காட்சி உற்பத்தி செய்யக்கூடாது என தோன்றியது,” என்கிறார் அர்ஜுன்.

இதுவே ’டைவா’ (Daiwa) பிறக்கக் காரணம். 2016-ல், அர்ஜுன் வியாபாரத் திட்டத்துடன் தன் தந்தையை அணுகினார். தன் தந்தையிடம், மூன்று விதமான ஸ்மார்ட் டிவிக்களை தயார் செய்து ஆன்லைனில் விற்க விரும்புவதாக கூறினார். இதற்கான முதலீடு 5 லட்சமே ஆகும். அதன் பின் டைவா (Daiwa) பிராண்ட் தோன்றியது.

“என் அப்பா ஒரு பொறியியலாளர், தொலைக்காட்சிக்கு எந்த விதமான நவீன தொழில்நுட்பங்கள் சேரும் என்பதை அவர் அறிந்திருந்தார். நான் இ-காமர்ஸ் இணைப்பை பார்த்துக்கொண்டேன்.”

அர்ஜுன் தன் வியாபாரத்துக்காக பல தகவல்களை சேகரித்துக்கொண்டு, பல இ-காமர்ஸ் நிறுவனத்தை அணுகினார். அப்பொழுது இந்தியாவில் வியாபாரம் செய்ய முக்கியமானது ‘விலை’ என்பதை உணர்ந்தார்.

ஒரு மாதத்திற்குள் அர்ஜூன் 50 தொலைக்காட்சியை உற்பத்தி செய்து அதை விற்க ஷாப்குளுஸ், அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனத்தை அணுகினார். பல சந்திப்புக்கு பிறகும் சில நிறுவனங்கள் Daiwa-ன் மதிப்பில் ஆர்வம் காட்டவில்லை.

“பல வணிகர்களை சந்தித்து இந்தியாவின் சிறந்த ஸ்மார்ட் டிவியைப் பற்றி பேசினேன், ஆனால் அவர்களின் ஆர்வம் எல்லாம் விலை குறைப்பின் மேலேயே இருந்தது” என்கிறார் அர்ஜுன்.

இருந்தாலும் அர்ஜுன் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. பின், ஏப்ரல் 2016-ல் “டைவா” பிரத்தியேகமாக ஷாப்குளுஸில் விற்கப்பட்டது.

50 தொலைக்காட்சிகளை விற்றால் அவர் தந்தையின் ஆசீர்வாதங்களைக் பெறலாம் என்று நம்பினார். ஆனால் ஒரு மாதத்தில் 500 ஸ்மார்ட் தொலைக்காட்சிக்கான ஆர்டரை பெற்றார். அதன் பின், டைவா இ-காமர்சில் பிரபலமான பிராண்டில் ஒன்றாய் ஆனது. விரைவில் அமேசான், பேடிஎம், ஸ்நாப்டீல் போன்ற தளத்திலும் டைவா விற்பனைக்கு வந்தது.

அமேசானில் விற்பனைக்கு வந்தவுடன், ஒரே மாதத்தில் டைவா 1000 தொலைக்காட்சிகளை விற்றது. மார்ச் 2017 இறுதியில், இந்நிறுவனம் 10,000 தொலைகாட்சிகளை விற்று, 10 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியது.

இந்த வருடம் டைவா ஒரு மாதத்திற்கு 1500 தொலைக்காட்சியை விற்கிறது. டைவாவின் ஒரே நோக்கம், அதிக விலை கொடுத்தால் மட்டுமே தரமான பொருட்கள் கிடைக்கும் என்னும் பிம்பத்தை உடைப்பதே ஆகும். குறைந்த விலையில் தரமானப் பொருளை வழங்குதலில் டைவா பெருமிதம் கொள்கிறது.

டைவா அதிக விற்பனை ஆவதற்கு முக்கியக் காரணம், மார்கெட்டில் உள்ள மற்ற பிராண்டுகளை விட 50 சதவிகிதம் குறைவான விலையில், அதே தொழில்நுட்பத்துடன் வழங்குவதே ஆகும். உதாரணமாக, 512 MB ரேம் வழங்கும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, அதே விலையில் டைவா தொலைக்காட்சிகள், 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள் நினைவகம் வழங்குகிறது.

டைவாவின் உற்பத்தி இந்தியாவில் இருப்பதால், குறைந்த விலையில் தொலைக்காட்சிகளை தர முடிகிறது. கிரேட்டர் நொய்டாவில் உள்ள தொழிற்சாலையில் ஒரு நாளில் 2,000 தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிக்கும் வசதி உள்ளது.

சாம்சங், வீடியோகான், பானசோனிக், ஒனிடா, மைக்ரோமேக்ஸ் மற்றும் சோனி போன்ற பெருநிறுவனங்களுடன் போட்டி கடினமாகவே இருக்கிறது. ஆனால் அர்ஜுன் இந்நிறுவனங்களுடன் போட்டியிடவில்லை என்றும், தன் இலக்கு எல்லாம் 21-35 வயதிற்குள் இருபவர்களே என்கிறார். இந்த வயதிற்கு உட்பட்டவர்கள் பெரும்பாலும் குறைந்த விலையில் சிறந்த தொழில்நுட்பங்களை எதிர்பார்கின்றனர்.

தற்பொழுது இந்திய தொலைக்காட்சியின் சந்தை மதிப்பு 75,000 கோடி எனவும், இறுதி ஆண்டில் 1,30,000 கோடி ஆகும் எனவும் Ernst and Young கூறுகிறது. மகேஷ் லிங்கரெட்டி, ஸ்மாட்ட்ரான் நிறுவனர் கூறுகையில்,

“இந்திய சந்தையில் பல புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பிரிவில் இந்திய தயாரிப்பு, இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட பல பொருட்கள் தேவை” என்கிறார்.

வி யு டெக்னாலஜிஸ் என்னும் மற்றொரு இந்திய நிறுவனம் கடந்த ஆண்டு அரை மில்லியன் யூனிட்டுகள் விற்றது மற்றும் 275 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியது. இதன் பொருள் டைவாவிற்கு எதிர்காலத்தில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என்பதாகும்.

Daiwa-விற்கு, அர்ஜுனின் பெற்றோர் மற்றும் அவரது 200 கோடி மதிப்பு கொண்ட வீடியோடெக்ஸ் உற்பத்தி நிறுவனம் உறுதுணையாக உள்ளது. ஆனால் இன்னும் சில வருடங்களில் டைவா, தயாரிப்பு நிறுவனத்துடன் பன்மடங்கு பெரிய நிறுவனம் ஆகலாம்.

ஆங்கில கட்டுரையாளர்: விஷால் கிருஷ்ணா | தமிழில்: மஹ்மூதா நௌஷின்

Related Stories

Stories by YS TEAM TAMIL