’மாற்றுத்துக்கான மாற்றமாய்’- தொழில்நுட்ப சமூகப் புரட்சி ஏற்படுத்தும் ப்ரீத்தி ஹெர்மன்!

8

ப்ரீத்தி ஹெர்மன். 34 வயதான இவர் தமிழகத்தின் சிறிய ஊரான கூடலூரில் வளர்ந்தவர். அதிகாரம் பொருந்திய பழமைவாத சமூகத்திலிருந்து வந்தவர். 18 வயது வரை கணினி பயன்படுத்திய யாரையும் அவர் பார்ததில்லையாம். ஆனால் இன்றோ அவர் Change.org எனும் சமூக ஆன்லைன் அமைப்பின் இந்திய தலைவராக (Country Head and Campaign Director) இருந்து நாடெங்கும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். உலகில் குறிப்பாக இந்தியாவில் சமூக மாற்றத்துக்கான மிகப்பெரிய மேடையாக இருந்துவரும் சேஞ்ச்.ஆர்க், இல் பல சமூக பிரச்சனைகளை, மனுவின் வடிவில் மக்கள் சமர்ப்பித்து அதற்கான தீர்வுகளை உரிய இடங்களில் கண்டுள்ளனர். இந்தியாவில், சமூக மாற்றத்துக்கான தொழில்நுட்பப்பணியில் முன்னணியில் இருக்கும் பெண்களில் முக்கியமானவராக ப்ரீத்தி ஹெர்மன் இருக்கிறார். பிற்போக்கான அதிகார கட்டமைப்பில் உள்ள சவால்களை எதிர்கொண்டு பொது மக்களுக்கு உதவுவதே அவரது அன்றாட பணி ஆகும்.

அவருடன் தமிழ் யுவர் ஸ்டோரி பிரத்யேக பேட்டி கண்டது...

உங்களின் சிறுவயது கனவுகள் என்ன எத்தகைய சூழலில் வளர்ந்தீர்கள்..?

நான் வளர்ந்தது தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும்தான். ஆனால், சிறு வயது வாழ்க்கை முழுதும் கூடலூரில்தான் கழிந்தது. அதிகமாக மழை பெய்யும் தேயிலை தோட்டங்கள் சூழ்ந்த ரம்மியமான சூழலில் வளரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வீட்டுக்குப் பின்புறத்தில் கூட காட்டு யானை அவ்வப்போது வந்து நிற்கும். அத்தகைய இயற்கை சூழ்ந்த பகுதியில் வசித்தேன். அந்த அனுபவங்கள் குறித்து நகரங்களில் உள்ள எனது நண்பர்களிடம் சொல்லும் போதெல்லாம் அவர்கள் பொறாமைப் படுவார்கள். அதுவே எனக்கு பெருமையாக இருக்கும்.

என் தந்தை ஒரு மலையாளி, அம்மா ஒரு கன்னடர். ஆனால் நான் என் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை தமிழ் பள்ளியில்தான் படித்தேன். ஆகவே, மலையாளம், கன்னடம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளும் அத்துப்படி. அது மட்டுமல்ல இந்த மூன்று கலாச்சாரமும் சேர்ந்த ஒரு கலவையான ஒரு பெண், என்னுள் வெளிப்படுவாள். நான் எப்போதும் புதிய இடங்களைப் பார்க்க விரும்புவேன். அதனால் இந்தியா முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்று விரும்பினேன. அதுவே என் கல்வி மற்றும் வேலைகளுக்காக பல நகரங்களுக்கு செல்லும் வாய்ப்பாக அமைந்தது.

நான் பெங்களூரிலுள்ள கிறிஸ்தவ கல்லூரியில் ஊடக துறைக்கான பட்டப்படிப்பை முடித்தேன். அது ஒரு மகிழ்ச்சியான காலம். அது எனது ஆர்வத்துக்கும், பெர்சனாலிட்டிக்கும் பொருந்தமானதாக அமைந்தது. மேலும் சமூக சேவையில் எனது திறமையை வளர்த்துக் கொள்ள விரும்பினேன். அதற்காக பூனாவில் சென்று சமூகவியலில் பட்ட மேற்படிப்பை முடித்தேன். அங்கு 18 மாதங்கள் கிடைத்த இண்டர்ன்ஷிப் பயிற்சியானது மனித உரிமை குறித்த பல விஷயங்களை புரியவைத்தது. நாடுமுழுவதும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை நேரடியாக பார்க்கும் வாய்ப்பைக் கொடுத்தது. அப்போது நேரடியாக பல கிராமங்களுக்குச் சென்றோம். அந்த மக்களை சந்திதோம், அவர்களோடு பேசினோம், பலவற்றை படித்தோம், புரிந்து கொண்டோம்.

”7 மாதங்கள் மின்சாரம், தொலைபேசி, சாலை வசதி, போக்குவரத்து என்று எதுவும் இல்லாத ஒடிசா மாநில மலைவாழ் மக்களோடு செலவிட்ட நாட்கள் எனக்கு சிறப்பான அனுபவமாக இருந்தது.”

பசியும், பட்டினியும் அந்த மலைவாழ் மக்களின் அன்றாட பிரச்சனையாக இருந்தது. அதனை போக்க எப்படி போராடுகிறார்கள்..? அதற்காக உள்ளாட்சி அரசியலை அவர்களால் பயன்படுத்திக் கொள்ள முடிகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்த அந்த மக்களோடு தங்கினேன். அந்த நீண்ட 7 மாதங்கள் அந்த அருமையான மக்களோடு தங்கியிருந்த காலம் என் வாழ்வில் மறக்க முடியாதவை. தினம் தினம் சவால்கள் நிறைந்த வாழ்க்கை. இரண்டு முறை மலேரியா காய்ச்சல் என்னை பாதித்தது. ஆனால் அதற்கு மருத்துவம் அங்கு இல்லை. மின்சாரம், தொலைத் தொடர்பு, பேருந்து வசதிகளுக்காக காத்திருக்கும் மக்கள்! வாய்ப்பு இல்லாத ஒன்றிற்கான நிரந்த காத்திருப்பு அது...

படிப்பை முடித்த பின் எங்கே உங்கள் பணிகளை தொடங்கினீர்கள்? 

நான் கல்லூரியில் படிக்கும் போதே சிறு சிறு மார்கெட்டிங் தொடர்பான வேலைகளை செய்திருக்கிறேன். அது தவிர ஒரு சில இண்டர்ண்ஷிப் பணிகளையும் செய்துள்ளேன். கல்லூரி படிப்பை முடித்தவுடன் சுற்றுச்சூழல் கல்வி மையத்தில் தான் முதல் முதலாக வேலை. Change.orgஇல் சேருவதற்கு முன் 5 நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளேன். 11 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளது.

மக்களிடமும், சமூகத்துடனும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு துறையில் பணியாற்றுவது என்பது உங்கள்  தொடக்க கால கனவாக இருந்ததா..?

சமூகத்தின் சவால்களை புரிந்துகொள்ளுவதை முதலில் நான் வளர்த்துக்கோண்டேன். தனிப்பட்ட ஒரு நபராக ஒரு சில பிரச்சனைகளுக்கு மேல் தீர்வு கண்டுவிடமுடியாது என்பதை அறிந்து கொண்டேன். 

 மக்கள் மத்தியில் தலைமைதாங்கும் திறனை வளர்ப்பதன் மூலமே அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்கிற கருத்தால் நான் கவரப்பட்டேன். நமது சமூகத்தில் பல பல பிரச்சனைகள் இருக்கிறது. அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என்பது பல லட்சம் மக்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தால் மட்டுமே சாத்தியமாகும். 

அதை நோக்கிய ஒரு நிறுவனத்தை உருவாக்க நினைத்து அதற்கான தயாரிப்பு பணிகளில் இருந்த போதுதான் இந்த சேஞ்ச்.ஆர்க் குறித்து நண்பர் மூலம் தெரிந்து கொண்டேன். Change.org சமூகத்தில் எற்படுத்திய தாக்கமும், மாற்றங்களும் அதிகம். அவை எல்லாம் இன்று வரலாறாக இருக்கிறது.

ஒரு பெண் என்கிற முறையில் தலைமைப் பொறிப்பில் எப்படி உணர்கிறீர்கள்? சந்திக்கும் சவால்கள் என்ன? 

ஒரு பெண்ணாக தலைமை தாங்குவது என்பது சவாலானதாகவே இருக்கிறது. இதற்கு முன் செய்யாத சிலவற்றை செய்தாக வேண்டும் என்பதற்காக புதிதாக முயற்சிப்பதே சவாலாக இருக்கிறது. மக்கள் எதிர் நோக்கும் மாற்றத்தை நாடுமுழுவதும் உருவாக்க மக்களுக்கே வாய்ப்பை, அதற்கான சாவியை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். நாட்டில் சமூக மாற்றத்தை உருவாக்க, பல லட்சம் மக்களை அதில் ஈடுபடவைத்தாகவேண்டும். கலாச்சார ரீதியாகவும், மொழி வாரியாகவும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் அந்த மாற்றத்தை கொண்டுவரும் பணி என்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. அதில் சில நடக்கலாம், சில நடக்காமல் போகலாம். அது ஒரு சோதனை முயற்சி மட்டுமே. எங்கே தவறு என்பதை கண்டறிய ஒரு வாய்ப்பு. ஆனால், இந்த நிறுவனம் மூலம் ஏற்பட்டிருக்கும் பல மாற்றங்கள் இன்று சாட்சியங்களாக நம்முன் உள்ளன. அதுவே எனது பணிக்கு ஒரு முக்கிய ஊக்கமாகவும், மேம்பாடாகவும் அமைந்துள்ளது.

பொது மக்களிடமிருந்து வரும் மனுக்கள் (Petition) எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது? 

பிரச்சனைகள் குறித்து மனுக்கள் தயாரித்து அனுப்பும் பல்வேறு விதமான மக்களிடம் உறையாடுவது இந்த பணியில் எனக்கு கிடைக்கும் உற்சாகமான அனுபவம். பொதுமக்கள் மத்தியில் கருத்தொற்றுமையை ஏற்படுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஏதுவாக அதிகாரம் படைத்தவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும்போது ஏற்படும் மனநிறைவு. எங்களிடம் வரும் ஒவ்வொரு தனிநபர்களிடம் அன்பு செலுத்தி, அவர்களுக்கு ஆதரவாக இருப்பதையும் நான் விரும்புகிறேன். அவர்கள் ஏற்படுத்தும் அந்த மாற்றம் என்பது அசாத்தியமானது. சமூகத்தில் ஒரு பிரச்சனையை முன் எடுத்து சமூக மாற்றத்துக்கு வித்திடுவதுதான் எனது பணியின் முக்கிய பகுதியாக இருக்கிறது.

மேலும் என்ன மாற்றங்களை செய்ய விரும்புகிறீர்கள்? Change.org - யை நாட்டில் ஒரு பலம் பொருந்திய அமைப்பாக உருவாக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

பொது மக்களின் பிரச்சனைகளை கனிவோடு கேட்டு தீர்வு காண முயலும் அரசியல்வாதிகள் கொண்ட நாடாக இந்தியா உருவாக வேண்டும் என்பதுதான் எனது கனவு. 

Change.org அதற்கான பணிகளை முன் எடுக்கத் தொடங்கி உள்ளது. அதற்காக, தொழில் நுட்பத்தை மக்களுக்கு எளிதாக கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும். அதன் முலம் அவர்கள் எளிதாக தங்கள் பிரச்சனைகளை பொது வெளிக்குக் கொண்டுவர முடியும். அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் தனியார் நிறுவனங்களும் மக்களுக்கான பிரச்சனைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளச் செய்யமுடியும்.

இதுவரை வந்த மனுக்களில் உங்களை மிகவும் பாதித்தது எது?

நிறைய இருக்கின்றன. அதில் சில வெற்றி பெற்று மாநில அளவில், தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தின. இன்னும் சில ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரிலுள்ள பேருந்துகளில் பெண்களுக்கு பாதுகாப்பு கோரி 18 வயது பள்ளி மாணவி முன் எடுத்த மனு போராட்டம் என்னை மிகவும் ஈர்த்த ஒன்று. அவர் தனது மனுக்கள் மூலம் பெங்களுரு பெரு நகர போக்குவரத்து கழகத்தை திரும்பிப் பார்க்க வைத்தார். தற்போது பேருந்துகளில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்தால் உடனே தொடர்பு கொள்ள ஏதுவாக தனியாக உதவி தொலைபேசி எண்கள் நிறுவப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல பேருந்துகளில் பெண்களுக்கு பிரச்சனை என்றால் உடனடியாக களம் இறங்கி நடவடிக்கை எடுக்க பேருந்து ஊழியர்களுக்கும் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிராமப்புற மக்களும் மனுக்கள் மூலம் தங்கள் பிரச்சனைகளை உலகிற்கு எடுத்துச் சொல்லி போராட ஆங்கிலம், இந்தி மட்டுமல்லாது மற்ற பிராந்திய மொழிகளிலும் Change.org இல் மனுக்களை அனுப்பலாம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநில மக்கள் தங்கள் மொழிகளிலேயே மனுக்களை அனுப்புகிறார்கள்.

இந்த பணியின் மூலம் உங்களுக்கு சுய திருப்தி கிடைத்திருக்கிறதா?

Change.org -யை 50 லட்சம் மக்கள் பயன்படுத்துகிறார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு மேல் இதுவரை வெற்றிபெற்ற பல பிரச்சனைகளில் பங்கு பெற்றிருக்கிறார்கள் அல்லது துணை நின்றிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களும் எங்கள் நிறுவனத்தோடு தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இது வளர்ச்சிக்கான அறிகுறி மட்டுமல்ல எங்கள் பணிக்கான பலனும் கூட. இந்த சாதனைகள் மூலம் மகிழ்ச்சியடைந்தாலும் முழு திருப்தியை இன்னும் நான் எட்டவில்லை.

”இன்னும் பல லட்சம் மக்கள் பயன்பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அதன் மூலம் சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதற்கான பணிகளில் தீவிரமாக இருக்கிறோம்.”

உங்கள் தனிப்பட்ட பயணத்தில் ஏதேனும் முக்கிய கதை இருக்கிறதா? முன்னோடியாக யாரையாவது பின் பற்றுகிறீர்களா?

எனது தனிப்பட்ட வாழ்க்கை பயணத்தில் பல முக்கியமான கதைகள் நிறைந்துள்ளன. அவற்றிலிருந்துதான் சக்தியைப் பெறுகிறேன். அவற்றில் இருந்து கிடைத்த அனுபவம்தான் என்னை அன்றாடம் இயக்குகிறது, வழிநடத்துகிறது. சிலவற்றை மட்டும் சுட்டிக்காட்டுவது சரியாக இருக்காது.

ஆனால், இந்த சமூகம் என்னிடம் எதிர்பார்த்த பணிகளோடு நின்றுவிடாமல், நான் எல்லைகள் தாண்டி சிந்தித்து, ஒரு சராசரி மனிதருக்கும் மேலாக  செயல்பட்டு வருகிறேன் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

பல்வேறு சவால்களுக்கு இடையே தங்களின் இலட்சியத்தை அடைய முயற்சிக்கும் இந்தியாவிலுள்ள இளம் பெண்களுக்கு உங்களின் ஆலோசனை என்ன?

எனக்கு 'ஹோம் சயின்ஸ்' பாடம்தான் இலகுவாக வரும் என்று ஒரு கல்லூரியின் முதல்வர் சொன்னார். அது இலகுவாக இருக்கிறது என்பதற்காக, அதுவே எனது தேர்வாக இருக்க முடியாது. நான் மற்ற பலவற்றில் சாதிக்க விரும்பினேன். அந்த கனவுகளை பின்தொடர சிலவற்றை சாதித்துள்ளேன். எனக்குள் இருக்கும் ஆற்றலில் பாதி அளவுக்கு கூட நான் சாதிக்கவில்லை என்றுதான் கருதுகிறேன். இதுதான் பெரும்பாலான பெண்களின் நிலை. முந்தைய தலைமுறையினருக்கு கிடைக்காத வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்குகிறது. தொழில்நுட்பம் மற்றும் எளிதாக எல்லாவற்றையும் அணுகும் ஒரு காலத்தில் வாழ்கிறோம். கனவுகளை மெய்ப்படுத்தி வாழவேண்டும். 

“நீ பெண் என்பதால் உன்னால் எதையும் சாதிக்க முடியாது” என்ற கூப்பாடுகளுக்கு இடையே உங்கள் குரலை தனித்து ஒலிக்கச் செய்வது என்பது இப்போது ஆடம்பரமானது மட்டுமல்ல, நம் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பும் கூட..!
Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Stories by Induja Ragunathan