தமிழ் திரை உலகிற்கு 5 தேசிய விருதுகள்.

தேசிய அளவில் தமிழ் சினிமாவுக்கு மூன்றாம் இடம்! 

0

'விசாரணை'க்கு 3 தேசிய விருதுகள்..!

ஆடுகளத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய விருது பெறுகிறார் வெற்றிமாறன்!

கடந்த பிப்ரவரி மாதம் அவரது 'விசாரணை' படம் இந்தியாவில் வெளியாவதற்கு முன்பே உலக திரைப்பட விழாக்களில் பேசப்பட்டது, பாராட்டப்பட்டது.

இன்று இதோ 2015 ஆம் ஆண்டுக்கான 63 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட போது, 'விசாரணை' மூன்று தேசிய விருதுகளை தட்டிச் சென்றிருக்கிறது. சிறந்த துணை நடிகருக்கான விருதை படத்தில் நடித்த சமுத்திரகனியும், சிறந்த பட தொகுப்பாளர் விருதை மறைந்த டி.இ.கிஷோரும் பெற்றுள்ளனர். அது மட்டுமல்லாமல் சிறந்த தமிழ் மொழி படமாகவும் விசாரணை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்காக இயக்குனர் வெற்றிமாறனும், தயாரிப்பிற்கு வொண்டர்பார் பில்ம்ஸும் விருதுகள் பெறுகிறார்கள்.

டெல்லியில் உள்ள தேசிய மீடியா மையத்தில் விருதுகளை அறிவித்த ஜூரி தலைவர் பிரபல இந்தி பட இயக்குனர் ரமேஷ் சிப்பி இப்படத்தை வெகுவாகப் பாராட்டினார்.

"அப்பாவி மனிதர்கள் மீதான காவல்துறை தாக்குதல்களை அப்பட்டமாகவும், பரபரப்பாகவும் படம் விளக்கி இருக்கிறது. இதன் கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுத்தது என்று சொல்லும்போது இன்னும் வீரியம் கூடுகிறது, ஜூரி உறுப்பினர்கள் பலரையும் படம் உறைய வைத்தது.." என்றார்.

சிறந்த இசை அமைப்பாளர் விருது 'பின்னணி இசை, பாடலுக்கான இசை' என்று இரு பிரிவுகளாக அறிவிக்கப்பட்டது. சிறந்த பின்னணி இசைக்கான விருதினை தனது ஆயிரமாவது படமான 'தாரை தப்பட்டை' படத்திற்காக இசைஞானி இளையராஜா தட்டிச்சென்றார்.

'பாரம்பரிய இசைக்கருவிகளை சிறப்பாக பயன்படுத்தி கிராமிய மெல்லிசையை ஹார்மோனிக் இசை அடுக்குகளாக பல பரிமாணத்தில் கொடுத்தமைக்கு இந்த விருது' என்று அறிவிக்கப்பட்டது.

சிறந்த பாடல்களுக்கான இசையமைப்பாளர் விருது 'எந்நு நின்றே மொய்தீன்' என்ற மலையாளப் படத்திற்கு இசை அமைத்தமைக்கு எம்.ஜெயச்சந்திரனுக்கு அறிவிக்கப்படுள்ளது.

அதே போல் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக மிக துணிச்சலாக நடித்துள்ளதற்காக 'இறுதிச் சுற்று ' நாயகி ரித்திகா சிங்கிற்கு சிறப்பு விருது அறிவிக்கப்படுள்ளது. அப்படி இந்த ஆண்டு ஐந்து விருதுகளை தமிழ் சினிமா பெற்றுள்ளது.

தேசிய அளவில் 'பிக்கு' இந்தி படத்தில் முதியவராக நடித்த அமிதாப் பச்சன் சிறந்த நடிகராகவும், 'தனு வெட்ஸ் மனு' படத்தில் நடித்த கங்கனா ரானாத் சிறந்த நடிகையாகவும் தேர்வாகி உள்ளனர்.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜ மௌலியின் 'பாகுபலி' சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டதோடு, சிறந்த சிறப்பு தொழில்நுட்ப விருது வி.ஸ்ரீநிவாஸ் மோகனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 17 ஆம் நுற்றாண்டு மராட்டிய படைவீரன் பாஜிராவ் மற்றும் அவனது இரண்டாம் மனைவி மஸ்தானி காதல் கதையை விவரித்த 'பாஜிராவ் மஸ்தானி' இந்தி படம் ஏழு விருதுகளை தட்டிச்சென்றது. அந்த படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி சிறந்த இயக்குனர் விருதினையும், தான்வி ஆஸ்மி சிறந்த துணை நடிகை விருதையும், சுதீப் சாட்டர்ஜி சிறந்த ஒளிப்பதிவாளர் விருதையும், பிஸ்வதீப் சவுண்ட் டிசைனர் விருதையும், ஜஸ்டின் கோஷ் ரி ரெக்கார்டிங் விருதினையும், ஸ்ரீராம் ஐயங்கார், சலோனி தாத்ரக், சுஜீத் ஷவாந்த் ஆகிய மூன்று பெரும் சிறந்த புரடக்ஷன் டிசைன் விருதையும், ரெமோ- டி- சுசா சிறந்த நடன இயக்குனர் விருதினையும் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு முதல் முறையாக அறிவிக்கப்பட்ட 'சிறந்த திரைப்பட நட்பு மாநில விருது' குஜராத் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 16 எம்.எம். அல்லது 35 எம்.எம். படச்சுருள்களாக விருதுக்கு படங்கள் அனுப்பப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தேர்வுக்கு வந்த 308 படங்களும் டிஜிட்டல் வடிவில் வந்ததாக ரமேஷ் சிப்பி தெறிவித்து, திரைப்பட உலகு நவீனமயமாகி வருவதை பாராட்டினார்.

தமிழில் மொத்தம் 33 படங்கள் போட்டிக்கு வந்தாலும் இறுதிச்சுற்றில் 8 படங்கள் மட்டுமே போட்டியில் இருந்துள்ளன. இசை அமைப்பாளர் கங்கை அமரன் நாட்டின் மேற்கு மாநில குழு உறுப்பினராக இடம் பெற்றிருந்தார்.

விருதுகள் பெற்ற அனைவரும் மே 3 ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையால் விருதுகளை பெற உள்ளனர். 1913 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி மும்பை கோரோநேஷன் திரை அரங்கில் இந்தியாவின் முதல் திரைப்படமான ராஜா ஹரிச்சந்திரா படம் வெளியானதை நினைவு கூறும் விதமாக 2012 ஆம் ஆண்டு முதல் மே 3 ஆம் தேதியன்று தேசிய திரைப்பட விருதுகள் வழங்கபட்டு வருகிறது.

விருது பெற்றவர்களுக்கு தமிழ் யுவர் ஸ்டோரியின் பாராட்டுக்கள்.!