கிராம மக்களிடம் இருக்கும் மதுப்பழக்கத்தையும் போதைப்பழக்கத்தையும் அகற்ற உருவான குழு ’தி க்ரீன் கேங்’

பச்சை நிற புடவை அணிந்த 30 பெண்கள் அடங்கிய குழு தங்களது கிராமத்திலிருந்து மதுபழக்கத்தையும் போதைபழக்கத்தையும் அகற்றுவோம் என்று உறுதிமொழி எடுத்துள்ளனர்.

0

கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள் வரதட்சணை கொடுமை, கற்பழிப்பு, ஆணவப் படுகொலைகள் என பல்வேறு வன்முறைகளுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் சம்பத் பால் தேவி தலைமையில் ’குலாபி கேங்’ என்கிற குழு உருவானது. இக்குழுவினர் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த புந்தேல்கண்ட் பகுதியில் நடந்துவந்த இப்படிப்பட்ட வன்முறைகளை எதிர்த்துப் போராடினர்.

முழுவதும் பெண் ஆர்வலர்கள் அடங்கிய மற்றொரு குழு தற்போது வாரனாசி மாவட்டத்தில் அதிகம் அறியப்படாத குஷியாரி என்கிற கிராமத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பச்சை நிற புடவை அணிந்த 30 பெண்கள் ஒரு குழுவாக இணைந்துள்ளனர். இவர்கள் ’க்ரீன் கேங்’ என்று பிரபலமாக அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தங்களது கிராமத்து மக்கள் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருப்பதை உறுதி செய்கின்றனர். முதலில் அந்தப் பகுதியில் உள்ள ஆண்களை சந்தித்து அவர்களது தீய பழக்கங்களை நிறுத்திவிடுமாறு வார்த்தைகளால் அறிவுறுத்துகின்றனர். அதற்கு செவிசாய்க்காமல் போனால் அடுத்தகட்டமாக அவர்களை தாக்குகின்றனர். 2015-ம் ஆண்டு இந்தக் குழு உருவானதிலிருந்து குஷியாரி மது மற்றும் போதைப்பழக்கமில்லாத பகுதியாக மாறிவிட்டது.

புரட்சியாளர்கள் உருவாயினர் 

வாரனாசியின் காசி வித்யாபீட் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகிய இரு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் உருவாக்கியதுதான் இந்தக் குழு. இவர்கள்தான் இந்தப் பெண்கள் தங்களது உரிமைக்காக போராட ஊக்குவித்தனர்.

2015-ம் ஆண்டு திவ்யான்ஷு உபாத்யாய் மற்றும் ரவி மிஷ்ரா இருவரும் இணைந்து ஏழ்மையை விலக்குவதற்காக ‘ஹோப் வெல்ஃபேர் ட்ரஸ்ட்’ துவங்கினார்கள்.

இதைத் துவங்க தூண்டுதலாக இருந்த சம்பவம் குறித்து திவ்யான்ஷு நினைவுகூர்ந்தார். அவரும் அவரது நண்பர்கள் சிலரும் ஒரு பிறந்தநாள் விழாவிற்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். ”அஸ்ஸி படித்துறையில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியும் அவரது இரு குழந்தைகளும் குப்பைத்தொட்டியில் உணவு தேடிக்கொண்டிருந்தனர். அந்த பெண்மணிக்கு கொஞ்சம் ரொட்டி கிடைத்தது. அதை தனது குழந்தைகளுக்கு கொடுத்தார். அதைப் பார்த்ததும் எனது இயலாமையை நினைத்து வருந்தினேன். அந்தத் தருணத்தில்தான் சமுதாயத்திற்கு ஏதேனும் செய்யவேண்டும் என்கிற உந்துதல் எனக்கு ஏற்பட்டது.”

திவ்யான்ஷு, ரவி மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து வாரனாசியில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். பின்னர் ’ஹோப் வெல்ஃபேர் ட்ரஸ்ட்’ அமைத்தனர். ஏழ்மையை அகற்றுதல், அருகாமையிலுள்ள கிராமங்களில் இருக்கும் நலிந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி வழங்குதல் உள்ளிட்ட சமூகப் பணிகளை இந்த அறக்கட்டளை வாயிலாக மேற்கொண்டனர்.

குஷியாரி பகுதிக்கு இக்குழுவினர் பயணித்தனர். இந்தக் கிராமத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. அத்துடன் பலர் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்தனர். பலர் சூதாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். இதனால் குஷியாரியில் இருந்த ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு விதத்தில் துன்புறுத்தலுக்கு ஆளானார்கள்.

”நாங்கள் முதலில் கிராமத்திற்குச் சென்றபோது அங்கிருந்த பெண்கள் பேசத்தயங்கினார்கள். எங்களது எந்த கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்காமல் அவர்களது கணவன்மார்களையே பேச வைத்தனர். எங்களை வெளியாட்களாகவே பார்த்தனர். நான்கைந்து நபர்கள் அடங்கிய குழுவுடன் சில சிறுவர்கள் சூதாடுவதைப் பார்த்தோம். ஆண்கள் தினமும் குடித்துவிட்டு பெண்களை அடிப்பதைக் கண்டோம்,” என்றார் ஹோப் வெல்ஃபேர் ட்ரஸ்ட் தலைவரான ரவி.

இந்தப் பெண்களின் கணவர் அருகில் இல்லாத நேரத்தில் ஹோப் வெல்ஃபேர் ட்ரஸ்டின் உறுப்பினர்கள் இவர்களிடம் சென்று பேசினார்கள். இக்குழுவினர் அங்கிருந்த பெண்கள் அனைவரையும் ஒன்று திரட்டி கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். மெல்ல மெல்ல இந்தப் பெண்கள் தங்களது பெயர்களை எழுத கற்றுக்கொண்டனர். வங்கிக்கணக்கை துவங்கினர். தங்களது உரிமைகளை நிலைநாட்டத் துவங்கினர். அத்துடன் இக்குழுவினர் அவர்களுக்கு தற்காப்புக் கலைகளிலும் பயிற்சியளித்தனர்.

எதிர்த்துப் போராட தீர்மானித்தோம்

இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் இதற்கு முன்பு விவசாயத்தை ஒதுக்கிவிட்டு கிடைத்த சொற்ப வருமானத்தையும் மது அருந்துவதிலும் சூதாட்டத்திலும் வீணாக்கினார்கள். இது குறித்து க்ரீன் கேங் தலைவர் ஆஷா தேவி குறிப்பிடுகையில், “ஆண்களின் இப்படிப்பட்ட செயல்களால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பெண்களே கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். எனவே இதை எதிர்த்துப் போராட தீர்மானித்தோம். இன்று ஆண்கள் மரத்தடியில் உட்கார்ந்து தைரியமாக சூதாடுவதில்லை.”


10 உறுப்பினர்களுடன் துவங்கப்பட்ட இந்தக் குழு இன்று 30 பெண்களைக் கொண்டுள்ளது. இவர்கள் அனைவருமே சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் தீவிரமாக உள்ளனர். இவர்களை உத்திரப்பிரதேச காவல்துறை ’போலீஸ் மித்ரா’ என்றே அழைக்கிறது. எந்நேரமும் குற்றம் நடைபெறாமல் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இது இந்த இயக்கத்திற்கு மிகப்பெரிய சக்தியை அளிக்கிறது என்கிறார் ஆஷா.

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வளர்ச்சிக்காக தீவிரமாக செயல்படும் இவர்கள் வாரனாசி மாவட்டத்தின் மற்ற ஆறு கிராமங்களிலும் ’க்ரீன் கேங்’ உருவாக்கி வருகின்றனர். ”மிர்சாபூர் மாவட்டத்தின் நக்சல் பாதிப்பிற்கு உள்ளான கிராமங்களிலும் ’க்ரீன் கேங்’ உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்,” என்றார் ஆஷா.

“கிழக்கு உத்திரப்பிரதேசத்தில் கிராமிய சுற்றுலா தளமாக மாற்ற உகந்த ஏழு கிராமங்களை கண்டறிந்துள்ளோம். இது குறித்து சுற்றுலா அமைச்சகத்திற்கு விவரங்களை அனுப்பியுள்ளோம்,” என்றார் திவ்யான்ஷு.

மேலும் குழுவைச் சேர்ந்த பெண்கள் மது இல்லாத சமூகமாக மாற்றுவதற்கு மட்டுமல்லாமல் தூய்மை, ஆரோக்கியம், கல்வி, வாக்குரிமை குறித்த விழிப்புணர்வு, கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பிற நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்தவும் பாடுபடுகின்றனர்.

வீட்டை விட்டு வெளியே வருவதற்கே பயந்த இந்தப் பெண்கள் இப்படிப்பட்ட முயற்சிகளை மேற்கொள்வதற்கு திவ்யான்ஷு மற்றும் அவரது குழுவினர்தான் காரணம். “மாணவர்களின் ஆதரவின்றி எந்தவித மாற்றமும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை,” என்றார் ஆஷா.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்நேஹ் சிங்

Related Stories

Stories by YS TEAM TAMIL