ஆடம்பர திருமண ஏற்பாட்டை விடுத்து 90 ஏழைகளுக்கு வீடு பரிசளித்து மகளின் திருமணத்தை நடத்திய தொழிலதிபர்!

0

மனோஜ் முனோட், அவுரங்காபாத்தை சேர்ந்த ஒரு பெரிய தொழிலதிபர். இன்று அவர் பலரையும் தன் செய்கையால் ஊக்குவித்துள்ளார். தனது மகள் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தாமல் அந்த செலவில் 90 ஏழைகளுக்கு வீடுகளை பரிசாக வழங்கி அவர்களை மகிழ்வித்துள்ளார். 

பட உதவி: யூட்யூப்
பட உதவி: யூட்யூப்

கட்டுமானத் தொழில் செய்யும் மனோஜ், இந்த ஐடியாவை தனது நண்பர் மற்றும் உள்ளூர் எம்எல்ஏ அளித்ததன் பேரில் நடைமுறைப்படுத்தியுள்ளார். ஆரம்பத்தில் தன் மகளின் திருமணத்தை 70 முதல் 80 லட்ச ரூபாய் செலவில் நடத்த திட்டமிட்டிருந்தார் மனோஜ். பின்னர் இந்த எண்ணம் வந்ததும் அதை கைவிட்டு ஏழைகளுக்கு வீடுகள் பரிசாக தர முடிவெடுத்தார். இது குறித்து அவர் கூறுகையில்,

“பொதுவாக எல்லாரும் திருமணங்களுக்கு அதிகம் செலவு செய்கின்றனர். ஆனால் தேவை உள்ளோர்க்கு உதவிக்கரம் நீட்டுவதும் முக்கியம் என்று நினைக்கிறேன். சமூகத்திற்கு உதவிட பிரதமர் மோடியும் வலியுறுத்தி வருகிறார். அதனால் நான் என் மகள் திருமணத்தை ஏழைகளுக்கு பரிசளித்து கொண்டாட முடிவெடுத்தேன்,” என்றார்.  

இதை அடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லசூர் என்ற இடத்தில் 90 சிறியவகை வீடுகளை கட்டி வீடில்லா ஏழைகளுக்கு பரிசளித்துள்ளார் மனோஜ். 

”நான் வீட்டுவேலை செய்து வருகிறேன். இனி வீட்டு வாடகை தரவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. தண்ணீர், மின்சார வசதியும் இந்த வீட்டில் உள்ளது,” என்று மனோஜிடம் வீடு பெற்ற சாப் அலி சைக், க்விண்ட் தளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். 

சுமார் 40 குடும்பங்கள் மனோஜ் பரிசளித்த வீட்டில் குடிபெயர்ந்துள்ளனர், சிலர் வந்து கொண்டிருக்கின்றனர். மனோஜ் செய்துள்ள இந்த நற்செயல் இந்தியா முழுதும் பெரிதும் பாராட்டப்படுகிறது. அவரது மகள் ஷ்ரேயாவும் இந்த முடிவில் உடனிருந்து தன் தந்தையின் இந்த திருமண பரிசை சிறந்த ஒன்றாக கருதுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டியில் தெரிவித்துள்ளார். 

நன்றி : ANI
நன்றி : ANI

கடந்த மாதம், ஜனார்தன ரெட்டி, கர்நாடக மாநிலத்தில் தனது மகளின் திருமணத்தை பல கோடி செலவில் செய்து பெரும் சர்ச்சைக்கு உள்ளானார். பெங்களுரு நகரையே ஸ்தம்பிக்க வைத்த அந்த திருமண நிகழ்வு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நடந்தது மேலும் பல சந்தேகங்களை உருவாக்கியது. அதே போன்று மற்றொரு விஐபி ஆன மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் மகளின் பிரம்மாண்ட திருமணமும் பலரை திரும்பி பார்க்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

கட்டுரை: Think Change India