இந்தியாவில் ஃபீச்சர் ஃபோன் புரட்சிக்கு வழிவகுத்த ஜியோ ஃபோன்

மூன்றே மாதங்களில் சாம்சங், மைக்ரோமேக்ஸ், ஐடெல், நோக்கியா ஆகிய ப்ராண்டுகளைக் காட்டிலும் சந்தையில் முன்னணி வகிக்கிறது ஜியோஃபோன்...

0

உலகளவில் ஃபீச்சர் ஃபோன் வகைகள் பயன்பாடு குறைந்து வந்தாலும் உலகின் வேகமாக வளர்ந்து வரும் மொபைல் பயன்பாட்டு சந்தையான இந்தியாவில் தொடர்ந்து அதன் பயன்பாடு அதிகரித்தே வருகிறது. இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமான ஃபீச்சர் ஃபோன் பயனர்கள் இருப்பதாகவும் ஸ்மார்ட்ஃபோன் புரட்சி இவர்களை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை எனவும் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். இவர்களுக்கு ஸ்மார்ட்ஃபோன் தேவை இல்லாமல் இருக்கலாம் அல்லது ஸ்மார்ட்ஃபோன்களை வாங்க முடியாத நிலையில் இவர்கள் இருக்கலாம்.

ஆனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் 'ஜியோஃபோன்' அறிமுகப்படுத்தியதால் சில மாற்றங்கள் ஏற்பட்டது. ஜியோஃபோன் ஒரு தனித்துவமான சாதனம். இது ஃபீச்சர் ஃபோனின் தோற்றத்திலும் விலையிலும் அதே சமயம் 4ஜி மொபைல் டேட்டாவை வழங்கும் திறன் கொண்டதாகும். புதிய பயனர்கள் பலர் இதை ஏற்றுக்கொள்ள ஜியோஃபோனுக்கான முன்பதிவு ஆறு மில்லியனை எட்டியது. 

ஜியோஃபோன் விநியோக அளவு மிகச்சரியாக தெரியாது என்றாலும் ஃபீச்சர் ஃபோன் பிரிவில் அதிகம் பங்களித்துள்ளது. இந்தப் பிரிவு 2017-ம் ஆண்டின் டிசம்பர் வரையிலான காலாண்டில் 55 சதவீத வளர்ச்சியை சந்தித்தது. மாறாக ஸ்மார்ட்ஃபோன்கள் 12 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது எனவும் ஒட்டுமொத்த மொபைல் விநியோகம் 37 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் தெரிவிக்கிறது.

”ஸ்மார்ட்ஃபோன்களைப் போலவே ஃபீச்சர் ஃபோனின் தேவையும் அதிகரித்திருப்பதே இத்தகைய அபார வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம். ஃபீச்சர் ஃபோன்கள் ஜியோஃபோனின் அதிரடி அறிமுகம் காரணமாக வளர்ச்சியடைந்து இந்தப் பிரிவு மேலும் விரிவடைந்தது,” 

என்று அறிக்கை தெரிவிக்கிறது. மூன்று மாதங்களில் ஜியோஃபோன் 26 சதவீதம் பங்களித்து ஃபீச்சர்ஃபோன் சந்தையில் முன்னணி இடத்தைப் பிடித்தது. சந்தையில் 15 சதவீதம் பங்களித்த சாம்சங் நிறுவனத்தை முறியடித்தது. அதே போல் மைக்ரோமேக்ஸ், ஐடெல், நோக்கியா போன்றவை முறையே 9 சதவீதம், ஏழு சதவீதம் மற்றும் ஆறு சதவீதம் பங்களித்தது.

கவுண்டர்பாயிண்ட் ரிசர்ஸ் இணை இயக்குனர் (மொபைல் சாதனம் மற்றும் சுற்றுச்சூழல்) தருண் பதக் குறிப்பிடுகையில், 

“சாதாரண 2ஜி ஃபீச்சர் ஃபோனுடன் ஒப்பிடுகையில் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலான பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு ஒரு காலாண்டிலேயே ஃபீச்சர் ஃபோனின் 26 சதவீத பங்குகளை கைப்பற்றியது. அடுத்த ஐந்தாண்டுகளில் 4ஜி ஃபீச்சர் ஃபோன் பிரிவு 200 மில்லியன் யூனிட் அளவிற்கு வாய்ப்பு கொண்ட பிரிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஏனெனில் தற்போது இந்தியாவிலுள்ள பயனர்களில் மில்லியன் கணக்கானோர் VoLTE கைபேசிகளுக்கு மாறுவதற்கு சாத்தியம் உள்ளது."

ஜியோஃபோன் மற்றும் மலிவு விலை மொபைல் புரட்சி

கடந்த பத்தாண்டுகளில் ஃபீச்சர் ஃபோன் ஒரு பிரிவாக குறைந்த அளவிலான புதுமைகளையே சந்தித்துள்ளது. மைக்ரோமேக்ஸ், லாவா, கார்பன், இண்டெக்ஸ் உள்ளிட்ட பிற உள்ளூர் உற்பத்தியாளர்கள் மலிவு விலையிலான ஸ்மார்ட்ஃபோன் சந்தையிலிருந்து விலகும் தருவாயில் இருந்தபோது ஜியோஃபோன் தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் இந்தச் சந்தையில் நுழைந்து அவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. தற்போது சீனாவின் Xiaomi இந்தச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

உள்ளூர் ஃபோன் உற்பத்தியாளர்கள் சிறியளவிலான 4ஜி டேட்டா வசதியுடன் கூடிய சாதனங்களை அறிமுகப்படுத்த ஜியோவின் போட்டியாளர்களாக இருக்கக்கூடிய தொலைதொடர்பு நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளனர். ஏர்டெல் நிறுவனம் கார்பன், லாவா, இண்டெக்ஸ், செல்கான் போன்ற நிறுவனங்களை இணைத்துக்கொண்டது. வோடஃபோன் – ஐடியா மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தை இணைத்துக்கொண்டது. பிஎஸ்என்எல் நிறுவனம் லாவா மற்றும் மைக்ரோமேக்ஸ் உடன் கைகோர்த்துள்ளது. 

ஒவ்வொரு நாளும் ’இந்தியாவின் மலிவான ஸ்மார்ட்ஃபோன்’ என்கிற பெயரில் புதிய ரக ஃபோன்கள் அறிமுகமாகி வருகிறது. 3,000 ரூபாய்க்கும் குறைவான விலைகொண்ட சந்தை ஒரு மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்தது.

இந்தியாவின் 1.34 பில்லியன் மக்களில் 67 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிப்பதாக உலக வங்கி தெரிவிக்கிறது. இதில் 400 மில்லியன் முதல் 500 மில்லியன் பேர் ஃபீச்சர் ஃபோன் பயன்படுத்துவதாகவும் இவர்கள் அடுத்தடுத்த மேம்பட்ட ஃபீச்சர் ஃபோன் பயன்பாட்டிற்கே மாறுவதாகவும் துறையை தொடர்ந்து கண்காணித்து வருவோர் தெரிவிக்கின்றனர்.

பாரம்பரிய ஃபீச்சர் ஃபோனை புதுப்பொலிவுடன் வழங்குவதன் மூலம் அப்படிப்பட்ட மில்லியன் கணக்கான பயனர்களை மொபைல் இணையதள சுற்றுச்சூழலில் இணைத்துள்ளது ஜியோஃபோன். அதிக சிறப்பம்சங்களைக் கொண்ட ஃபீச்சர் ஃபோன்கள் இந்திய சந்தையைக் கவர்ந்துள்ளது என்பதையே இந்த எண்ணிக்கைகள் சுட்டிக்காட்டுகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : சோஹினி மிட்டர்