நாம் கனவில் மட்டுமே செய்ய முடிந்ததை நிஜமாக்கி வாழும்  81 வயதான கிருஷ்ணா லால்!

0

புது டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் 30 வருடம் பணி புரிந்து கலைசார்ந்த பொக்கிஷங்களைக் பாதுகாத்தது மட்டுமின்றி தனது எண்பதாவது வயதிலும் தன்னால் முடிந்த சேவையை கலைக்காக அர்பணித்து வருகிறார் கிருஷ்ணா லால்.

வயது வெறும் எண் என்பதற்கு எடுத்துக்காட்டாய் மிக ஆற்றலுடன் வாழ்கிறார். 1994-ல் புது டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் காப்பாளராக இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் அதன் பின்னும் ஓய்வு பெறாமல் கலை மற்றும் கைவினைப்பொருட்களை பிரபலப்படுத்த தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

எண்பத்தியோரு வயதான இவர் ’கிருஷ்ணயன்’ என்னும் கடையை அக்டோபர் 2015-ல் திறந்தார். இக்கடை உலகளாவிய பல கலை மற்றும் கைவினைப்பொருட்களை வியாபாரம் செய்யும் நோக்கத்துடன் திறக்கப்பட்டது. இங்கு கைவினைஞர்கள் தங்கள் கைவினைப்பொருட்கள், கையால் செய்யப்பட்ட வீட்டு அலங்கார பொருட்கள் மற்றும் ஆடைகள் ஆகியவற்றினை விற்கலாம். இதன் மூலம் டஜன்கணக்கான கைவினைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெறுகின்றனர் .

கஸ்தூர்பா காந்தி மார்கில் இக்கடை அமைந்துள்ளது. இது சிறிய கடையாக இருந்தாலும் கூட பல கைவினைப் பொருட்களை உள்ளடக்கியுள்ளது. புடவை, துப்பட்டாவில் இருந்து தலையணை, வீட்டு அலங்கார பொருள் வரை அனைத்தும் உள்ளது.

நம்முடன் பேசுகையில் கிருஷ்ணா லால்,

 “என் கடையில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் தனித்துவம் வாய்ந்தது, அது மட்டுமின்றி இங்கு இருக்கும் பொருளை வேறு எங்கும் காண முடியாது,” என்கிறார்.

பாரம்பரியம் மிக்க மேற்கு வங்காளத்தை சேர்ந்த கந்தா, பீகாரிலிருந்து மதுபானி, ராஜஸ்தானின் பார்மர் எம்பிராய்டரி, டெல்லியின் ஜர்டோசி என்று பல ஊர் மற்றும் கலாச்சாரத்தை சேர்ந்த பொருட்களை ’கிருஷ்ணயன்’ கடையில் காணலாம்.

இந்த வயதில் உங்கள் சுறுசுறுப்புக்குக் காரணம் என்ற கேட்டபோது, அவர்

“எனக்கு உடல் ரீதியாக பல பிரச்சனைகள் உள்ளது, நம்புங்கள். எனக்கு செய்வதற்கு எந்த வேலையும் இல்லாமல் இருந்தால், இந்நேரம் நான் படுக்கையில் இருந்திருப்பேன். காலையில் தினமும் என் மாத்திரைகளை போட்டு விட்டு என் வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவேன். ஏன் என்றால் எனக்கு செய்வதற்கு அவ்வளவு வேலையுள்ளது,” என்கிறார்.

தன் கடையோடு சேர்த்து, தற்போது மல்லையா திரையரங்கு கைவினை அருங்காட்சியகத்தில் அட்டவணை செய்வதில் பிசியாக உள்ளார். தேசிய அருங்காட்சியகத்தில் 1960ல் இருந்து 1994 வரை பயனுள்ள வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். அதை பற்றி மேலும் அவர் பேசுகையில்,

"உலகத்தின் அனைத்து அழகான பொருட்களும் தினமும் என்னை சுற்றியே இருந்தது. அதனால் இந்த கல் பொருட்களைக் காக்க வேண்டும் என்று திடமான ஆசையை எனக்குள் வளர்த்துக்கொண்டேன்.”

ஓய்வு பெற்ற பிறகு சில கைவினையாளர்களை ஒன்று சேர்த்து சில பொருட்களை உருவாக்க சொன்னார். அந்த பொருட்களை இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு மையத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் போது விற்றார். இரண்டே நாளில் 15 லட்ச மதிப்புள்ள பொருட்களை அவரால் அன்று விற்க முடிந்தது.

அந்நாளிலிருந்து அக்கைவினையாளர்கள் கிருஷ்ணா லாலுடன் இணைந்து பணிபுரிகிறார்கள். அவரது பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விலையிலும், கைவினையாளர்களுக்கு நல்ல லாபத்தையும் ஈட்டுகிறது. காரணம், வாங்குபவர்க்கும் விற்ப்பவர்க்கும் இடையில் எந்த இடைத்தரகர்களும் இல்லை.

கிருஷ்ணா ஆரம்பத்தில் கைவினையர்களை ஒன்று திரட்டி, அவர்களது படிப்பை மெருகேற்றி, அதை விளம்பரம் செய்வதில் தனது பணத்தை முழுவதுமாக முதலீடு செய்தார். அவரது வீட்டின் மொட்டை மாடியில் நெசவாளர்களும், ஓவியர்களும் கைவினை பொருட்களை செய்து வருகின்றனர். அவர்களுக்கு தற்போதிய சூழலுக்கு ஏற்றவாறு பொருட்களை செய்ய கிருஷ்ணா லால் சொல்லிக் கொடுத்து வருகிறார்.

“என் வீட்டு மாடியில் வோர்லி ஓவியர்கள் பணி புரிந்து வருகிறார்கள்; அதுமட்டுமின்றி மர ஓவியர்கள், இப்பொழுது ஆடையில் வரையவும், காய்கறிகளின் சாயத்தை பயன்படுத்தவும் என்னிடம் கற்கின்றனர்."

கிருஷ்ணாவிற்கு தனது 30-வது வயதில், பிரஞ்சு அரசாங்கத்தின் ஸ்காலர்ஷிப் மூலம் பாரிசில் புகழ்பெற்ற École du Louvre-ல் அருங்காட்சியகத்தைப் பற்றி படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை ஏற்க கிருஷ்ணா சற்று தயங்கினார், காரணம் 6 வருடம் தன் கணவரையும், இரட்டை குழந்தையையும் பிரிந்து போக அவர் விரும்பவில்லை. இருப்பினும் அவரது கணவர் அவரை ஊக்கப்படுத்தி வாழ்க்கையில் ஒரு முறையே வரும் இவ்வாய்ப்பை தவறவிடாமல் ஏற்கச் சொன்னார்.

“இது 1971ல் நடந்த சம்பவம், அப்பொழுது எனக்கு லிஃப்டை கூட பயன்படுத்தத் தெரியாது. அது மட்டுமின்றி ஃபோர்க், கத்தியை பயன்படுத்தி உண்ணத் தெரியாது.”

இருப்பினும், கிருஷ்ணா படிக்க பாரிசுக்குச் சென்றார், மேலும் தன் திறமையை மெருகேற்றினார்.

ஆசீர்வதிக்கப்பட்ட பயணம்

2014-ல் தன் கணவர் இறந்த பிறகே கடை அமைக்கும் எண்ணம் அவருக்கு தோன்றியது. மேலும் தனது மருமகன் மற்றும் மகள்களின் ஊந்துதலில் தனது பொருட்களை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கண்காட்சியகத்தில் காட்சிப்படுத்தினார்.

ஓய்வு பெற்ற பின்னும், இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் கலாச்சார ஆவணங்களுக்கு ஆலோசகராக கிருஷ்ணா பணிபுரிந்துள்ளார். மேலும், இந்திய கலை மற்றும் கைவினைப் பொருட்களை பற்றி ஒரு புத்தகமும் எழுதியுள்ளார்.

கலைகளுக்கான தனது பங்களிப்பை கௌரவப்படுத்தும் வகையில் இந்திரா காந்தி தேசிய மையத்தில் இருந்து 'பிரஷாஷ்டி பட்ரா’ விருதை பெற்றார். ' வைகிர்தேவ் விஷேஷ் சம்மான் 'விருதும் சன்ஸ்கார் சமுகத்திலிருந்து பெற்றார்.

ஆங்கில கட்டுரையாளர்: சரிகா நாயர்