நெடுஞ்சாலை விபத்தில் சிக்கும் பல்லாயிர மக்களை காப்பாற்றும் சுப்ரத்தோ மற்றும் குழுவினர்!

0

17 ஆண்டுகளுக்கு முன்பு, Dr.சுப்ரத்தோ தாஸ் அகமதாபாத்-வதோதரா ஹைவேயில் தன் மனைவி சுஷ்மிதா மற்றும் நண்பர் உடன் பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு சாலை விபத்தில் சிக்கினர். மழையுடனான அந்த இரவில் ஏற்பட்ட விபத்தில் கார் மரத்தில் மோதி நொறுங்கிப் போனது. காருக்குள்ளிருந்து உதவிக்குரல் எழுப்பியும் 5 மணி நேரத்துக்கு பின்பே ஒருவர் இவர்களுக்கு உதவ முன்வந்தார். 

காரில் பயணித்த மூவரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர் ஆனால் இது போல் விபத்தில் சிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிர்ஷ்டசாலிகள் அல்ல. ஹைவேயில் பயணிக்கும் பலரும் ஆபத்தோடு இருப்பதை உணர்ந்த சுப்ரத்தோ, லைப்லைன் பவுண்டேஷன் எனும் தன்னார்வ தொண்டு அமைப்பை குஜராத்தில் நிறுவினார். இதன் மூலம் அவசர ஆம்புலன்ஸ் சேவை (108) துவங்கினார். இது தற்போது இந்தியாவில் 25 மாநிலங்களில் செயல்படுகின்றது. சாலை விபத்தில் சிக்கும் மக்களை உடனடியாக காப்பாற்ற வருகிறது இச்சேவை. இது பற்றி பர்ஸ்ட்போஸ்ட் பேட்டியில் பேசிய சுப்ரத்தோ,

”நாங்கள் வடோடராவிற்கு சென்று கொண்டிருந்த போது நடு இரவு 1.30 மணிக்கு விபத்தில் சிக்கினோம். பயணித்த மூவரும் காரில் மாட்டிக்கொண்டு படுகாயங்களுடன் உதவியற்று கிடந்தோம். விடிகாலை ஒரு பால்காரர் எங்களை பார்த்த பின்னரே அருகில் இருந்த காவல் நிலையத்துக்கு தகவல் சொன்னார். பல யோசனைகளுக்கு பின், வெறும் ஆம்புலன்ஸ்களை ஹைவேயில் நிறுத்தி வைப்பதைவிட ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் க்ரேன் வசதிகளை ஒன்றிணைக்கு சேவையை தொடங்க முடிவெடுத்தோம்.” 

ஆம்புலன்ஸ் வசதியுடன் சுப்ரத்தோ முதல் உதவி கொடுத்து, விபத்தில் சிக்கியவர்களை அருகாமை மருத்துவமனையில் கொண்டு செல்ல தன் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். உதவி எண்களில் யார் அழைத்தாலும் அந்த இடத்துக்கு அவசர உதவி குழு மற்றும் ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும். மேலும் பேசிய சுப்ரத்தோ,

“விபத்தில் சிக்கியவர்களை ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டாலே அவர்கள் உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். ஒரு ஆண்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர் என்று தேசிய நெடுஞ்சாலை அதிகாரம் தெரிவிக்கிறது. இந்த இறப்புகள் பெரும்பாலானவை தவிர்க்கப்பட வேண்டியவை,” என்றார்.

சுப்ரத்தோவில் இந்த சேவையை பாராட்டி இந்திய அரசாங்கம் அவருக்கு நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ வழங்கியுள்ளது.

கட்டுரை: Think Change India