21 வயது சென்னை ஐஐடி மாணவரின் நோய் தாக்கும் வாய்ப்பை கண்டறியும் ஸ்டார்ட் அப் நிறுவனம்  

1

மருத்துவ துறை ஸ்டார்ட் அப் நிறுவனமான ஆர்புகுலும் (Orbuculum) ஜினோம் தரவுகளை செயற்கை நுண்ணறிவு கொண்டு அலசி புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை கணித்துச் சொல்கிறது.

ஸ்டார்ட் அப் : Orbuculum

நிறுவனர்கள்: பிரணவ் கங்வால்

நிறுவிய ஆண்டு: 2016

எங்கு: சென்னை

தீர்வு காணும் பிரச்சனை: புற்றுநோய் போன்ற தீவிர நோய்களுக்கான வாய்ப்பை கண்டறியும் குறைந்த விலை தீர்வு

துறை: மருத்துவ தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு

நிதி: 2017 ல் ஆக்சிலார் வென்சரின் கோஹர்ட்டின் அங்கம்

மருத்துவ துறை எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை, நோய்களை விரைவாக கண்டறிவதில் உள்ள சிக்கலாகும். இதன் காரணமாக நோயாளிகள் நேரம் வீணாவதுடன், மருத்துவ செலவும் அதிகமாகிறது.

அதே நேரத்தில் செயற்கை நுண்ணறிவு பற்றி அதிகம் பேசப்படுகிறது. எல்லா பிரச்சனைகளுக்கமான தீர்வாகவும் முன்வைக்கப்படுகிறது. மருத்துவ துறையிலும் செயற்கை நுண்ணறிவு நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இது மருத்துவர்களுக்கு நோய் கண்டறியும் கருவியாக அமைவதோடு, நோயாளிகளுக்கு செலவு குறைந்த வழியாகவும் இருக்கிறது.

ஐஐடி மெட்ராஸ் பயோடெக் மாணவரான 21 வயதான பிரணவ் கங்வால், தனது நண்பருடன் இணைந்து, ஜினோம் தரவுகள் மூலம், புற்றுநோய் , நீரிழிவு நோய் மற்றும் நரம்பியக் கோளாறு போன்ற நோய்களை கண்டறியும் மற்றும் அவை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை கணிக்கும் காப்புரிமை பெற்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த வழிமுறையை உருவாக்கியுள்ளனர்.

இந்த இருவரும் இணைந்து ஆர்புகுலும் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர். ( இது ஆக்சிலார் வென்சரிசன் 2017 கோஹர்டின் அங்கமாகும்).

“நாங்கள் மருத்துவ துறை ஸ்டார்ட் அப். ஆர்புகுலும் என்றால் கிரிஸ்டல் பந்து என்று பொருள். இது ஜினோம் தகவல்களை கொண்டு புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை கணித்துச்சொல்கிறது” என்கிறார் பிரணவ்.

மருத்துவ துறையில் அதிக முதலீடு சாத்தியமான சூழலிலும் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பது ஏன் என்பது குறித்தும் இவர்கள் ஆய்வு செய்ய விரும்புகின்றனர். "நோய் கண்டறியும் முறையில் குறை இருப்பதாக உணர்கிறோம். நோய்களின் பொதுவான அறிகுறிகள் காரணமாக, நோய்களை கண்டறிவதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. இதன் காரணமாக, புற்றுநோய் போன்ற நோய்களில் நோயாளியின் நோய் கண்டறியப்படும் போது கால தமாதமாகி விடுகிறது” என்கிறார் அவர். இங்கு தான் அவர்கள் தீர்வு வருகிறது. “நோயாளிகளின் நேரம் மற்றும் பணத்தை மிச்சமாக்கும் வகையில், ஆரம்பத்திலேயே நோயை கண்டறிவதில் டாக்டர்களுக்கு உதவ விரும்புகிறோம்” என்கிறார் அவர் மேலும்.

மாணவர் தொழில்முனைவோரின் சவால்

நோயின் ஜினோம் தரவுகளை காட்சிப்படுத்தி பார்க்கும் நுட்பத்திற்கான காப்புரிமை பெற்ற போது, ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கான எண்ணம் அவர்களுக்கு உண்டானது. இன்னமும் கல்லூரியில் இருப்பதால் மற்றவர்களை விட அவர்கள் சிலவற்றை அதிகம் செய்ய வேண்டியிருக்கிறது. தங்களை விட வயதான பயிற்சி நிலை ஊழியர்களும் அவர்கள் பெற்றுள்ளனர். “டேட்டா அறிவியல் மற்றும் ஜினோமிக்ஸ் துறையை சேர்ந்த விஞ்ஞானிகளும் எங்களுக்கு வழிகாட்டுகின்றனர்” என்கிறார் பிரணவ்.

ஆர்புகுலும் ஸ்டார்ட் அப் மூலம் தாங்கள் தீர்வு காண விரும்பும் பிரச்சனை பற்றி பிரணவ் பேசுகிறார்

ஆங்கிலத்தில்: தீப்தி நாயர் | தமிழில்: சைபர்சிம்மன்