சிவில் இன்ஜினியர் இந்திராணி முகர்ஜி உருவாக்கும் அழகான மூங்கில் வீடுகள்

0

அந்தப் பெண் தன் குழந்தைப்பருவத்தில் ஏழு வருடங்களை வடகிழக்குப் பகுதியில் கழித்த போது தன்னைச் சுற்றியுள்ள மூங்கில், புதுப்பிக்கத்தக்க, எளிதில் கிடைக்கத்தக்க ஒரு அற்புதமான மூலப்பொருள் என்ற விஷயத்தைப் புரிந்து கொண்டாள். அதன்பால் ஈர்ப்பு ஏற்பட இதுவே அவளுக்கு போதுமானதாக இருந்தது. இந்திராணி எனும் அந்தப் பெண்ணின் தந்தை ஓ.என்.ஜி.சியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். பணி மாற்றம் காரணமாக, அவர்கள் அடிக்கடி ஊர் மாற வேண்டியிருந்தது. இந்திராணி ஒருமாதக் குழந்தையாக இருக்கும் போது அவர்களது குடும்பம் திரிபுராவுக்குச் சென்றது, அதன்பிறகு அஸ்ஸாமிற்கு சென்றனர். மூங்கில் காடுகளுக்கு மத்தியில் வாழ்ந்தது... அது ஓரு செழுமையான அனுபவம் என்கிறார் இந்திராணி முகர்ஜி. தற்போது அவர் பாம்பூஸ் (Bambooz) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இணை நிறுவனர். மூங்கில் பயன்படுத்தத்தக்க ஒரு அற்புதமான வளம். அதை நிலையான வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம் என்ற சிந்தனையில்தான் அந்த நிறுவனம் உதயமானது. இந்தியாவில் ஏராளமாகக் கிடைக்கும் மூங்கில்களால், கட்டுமானங்களுக்கு பலம் சேர்க்க முடியும்.

முதல் தலைமுறைத் தொழிலதிபரான இந்திராணி, தற்போது பெங்களூரில் இருக்கிறார். தனது பாம்பூஸ் நிறுவனம் மூலம் பல்வேறு நிறுவனங்களை அணுகி, மூங்கில்களில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். பல பன்னாட்டு நிறுவனங்களில் பல்வேறு விதமான பதவிகளில் சுமார் 13 வருடங்கள் பணியாற்றிய அவர், தனது மனதுக்குப் பிடித்த சமூகத்திற்குப் பசுமை சேர்க்கும் ஒரு பணியைச் செய்ய வேண்டும் என முடிவு செய்தார்.

இப்படி ஒரு ஆர்வத்தில் உருவானதுதான் பாம்பூஸ். அதை வர்த்தகரீதியில் வெற்றிகரமான நிறுவனமாக்க வேண்டும் என்று முடிவு செய்தார் இந்திராணி. “வழக்கமான கட்டுமானத் துறையில்தான் நீண்டகாலமாக இருந்தேன். ஆனால் (சுற்றுச் சூழலைக் கெடுக்காத) பசுமைநிறைந்த கட்டுமானங்களை உருவாக்க வேண்டும் என எப்போதும் நான் ஆழமாக நினைத்துக் கொண்டிருந்தேன். அதன் விளைவு இந்தத் தொழிலில் குதித்தேன்.” என்கிறார் அவர்.

தொடங்கும் யோசனை

சின்னவயதிலேயே திருமணம் முடிந்து விட்டது. அவரது கணவர் சாம்ராட் சாஹாவும் ஒரு சிவில் இன்ஜினியர். இருவரும் தங்களது புதிய திட்டத்திற்கு தங்களின் பெற்றோர்களை ஒப்புக்கொள்ளச் செய்ய முடியவில்லை. “இருவரது பெற்றோர்களும் அரசு ஊழியர்கள். ஐந்து வருடத்திற்கு முன்பு இதைத் தொடங்கும் போது, அவர்களுக்கு இது என்னவென்றே அறிமுகமில்லை” என்கிறார் இந்திராணி.

"புதிதாக ஒரு தொழிலைத் தொடங்குவது, ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. தொழில் நடத்துவது என்பது மேடுபள்ளமான சாலைகளில் வண்டி ஓட்டுவது போல. ஒவ்வொரு நாளும் சவால்களைச் சந்திக்க வேண்டும். அது, ஒருவருடைய சவால்களைச் சந்திக்கும் திறனை வெளிப்படுத்துகிறது. மனவலிமையை பொருத்தே இந்தப் பயணத்தில் தொடர்வதற்கான முடிவு அமையும்" என்கிறார் இந்திராணி. மூங்கிலை ஒரு கட்டுமானப் பொருளாக, ஒரு மாற்று கட்டுமானப் பொருளாக பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

கலைஞர்களை மேற்பார்வையிடும் இந்திராணி
கலைஞர்களை மேற்பார்வையிடும் இந்திராணி

இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு பெரிய நிறுவனங்கள், அரசு நிறுவனங்களை அணுகி அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது பெரிய பிரச்சனையாக இருந்தது , இதனை சமாளிக்க வேண்டியிருந்தது. நிறுவனத்தில் முடிவெடுப்பது முதல் நிதி மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை சென்றடையும் வரை எல்லாவற்றையும் இந்திராணி தனி ஒரு ஆளாய் பார்க்க வேண்டியிருந்தது. ஒரு பெண் தொழில்முனைவராக இருந்தது ஒரு பெரும் சவாலாக இருந்தது.

மூங்கிலை ஒரு கட்டுமானப் பொருளாகப் பயன்டுத்தும் யோசனை

"அழகாகக் காட்சியளிப்பதோடு, மூங்கில் ஸ்திரத்தன்மை கொண்ட ஒரு உறுதியான கட்டுமானப்பொருள். நூறு வருடம் வரை தாங்கி நிற்கும் உறுதியான ஒன்று. பூகம்பப் பிரதேசங்களுக்கு மிக பொருத்தமானது” என்கிறார் இந்திராணி. இப்போது சுற்றிலும் சுவர் இல்லாத மேற்கூரை மட்டும் அமைந்த ஓய்விடம் (gazebo), ரிசார்ட்டுகள், மேற்கூரைகள், காட்டேஜூகள், உணவகங்கள், வாகன நிறுத்துமிடம் போன்ற பலவற்றுக்கு மூங்கில்களைப் பயன்படுத்துகிறார்கள். இதற்காக பாம்பூசா பால்கோ (Bambusa Balcoa) மூங்கில்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். இந்த வகை மூங்கில்கள் உறுதித்தன்மைக்குப் பேர்போனவை.

கட்டுமான தொழிலில் தொடர்ந்து மாற்றங்களை கொண்டுவந்ததற்கு விருது பெறுகிறார் இந்திராணி
கட்டுமான தொழிலில் தொடர்ந்து மாற்றங்களை கொண்டுவந்ததற்கு விருது பெறுகிறார் இந்திராணி

வாகனங்கள் தயாரிப்பில் மூங்கில்களைப் பயன்படுத்தும் பாம்பூ மேட் போர்டுகளை ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருக்கிறது பாம்பூஸ் நிறுவனம் என்பது மற்றொரு சுவாரஸ்யமான விஷயம். பேருந்துகளில் தரைத்தளம், இருக்கைகள், தடுப்புகளைத் தயாரிக்க வழக்கமாகப் பயன்படுத்தும் ப்ளைவுட்டுகளுக்குப் பதிலாக பாம்பூ மேட் போர்டுகளைப் பயன்படுத்த, இந்திய அரசுக்குச் சொந்தமான சாலைப் போக்குவரத்துக் கழகத்திடமிருந்து (Association Of State Road Transport) உரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது பாம்பூஸ்.

இந்திராணியின் முன்மாதிரி மனிதர்கள்

இந்திராணி அவரது அம்மாவையும், சுவாமி விவேகாநந்தரையும் தனது முன்மாதிரி வழிகாட்டிகளாகக் கருதுகிறார். குடும்ப நிர்வாகியான அம்மாவிடமிருந்து, பொறுமை, பரிவு, எப்போதும் எதார்த்தத்தைப் புரிந்து நடக்கும் பாங்கு ஆகியவற்றைக் கற்றுக் கொண்டார் அவர். அம்மா தனது இரண்டு பெண் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காக தனது சொந்த வேலையைக் கூட விட்டு விட்டார்.

சுவாமி விவேகானந்தரின் வாழ்வும், வாக்கும் இந்திராணியின் வாழ்க்கையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. அவரிடமிருந்து தன்னம்பிக்கையையும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொண்டார் அவர்.

பரஸ்பர பாராட்டு

பாம்பூஸ் நிறுவனத்தின் நிறுவனர்களான இந்திராணியும் அவரது கணவர் சாம்ராட்டும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் வாழ்த்தி பாராட்டிக் கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள். “எனது திறமை மீதும் முடிவெடுக்கும் திறன் மீதும் அவருக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்தது. அவருடைய ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. அவரோடு பணியாற்றுவது மகத்தானது.” என்று பெருமிதப்படுகிறார் இந்திராணி. பாம்பூஸ் 2010ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தை அவர்கள் சொந்தப் பணத்தில் ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.