ஏழு இலக்க சம்பளப் பணியை மறுத்து கல்விப் பணியில் கலக்கும் எஞ்சினீயர்!

0
லெவிட் சோமராஜன் கண்ட கனவும் இலக்குகளும் இதுதான்: ஓர் அமெரிக்க வேலை, ஒரு ஜெர்மனி கார் மற்றும் அழகான இந்திய மனைவி. தன் இலக்குகளை எளிதில் அடைந்திடுவதற்காக அவர் தேர்ந்தெடுத்து பயணித்த பாதைதான் பொறியியல் படிப்பு. ஆனால், அவர் தனது படிப்பை முடிக்கும்போது எண்ணம் வேறு வடிவம் பெற்றது. அதுகுறித்து நினைவுகூர்ந்த லெவிட் கூறியது:


"வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மற்றொரு 'ஃபைவ் பாயின்ட் சம்ஒன்' கதைக்களம் போல மாறிவருகிறது. நம் நாட்டிலுள்ள 98 சதவீத எஞ்சினீயர்கள் தகுதியவற்றகள். இந்த உண்மை நிலைகுலைய வைத்து முக்கிய முடிவுகளை எடுக்கத் தீர்மானிக்கிறது."

லெவிட் சோமராஜன்
லெவிட் சோமராஜன்
ஏழு இலக்க எண்ணிக்கையில் சம்பளம் கிடைக்கும் வேலை வந்தபோது, அவர் அதை ஏற்க மனமின்றி தன் உண்மையான கனவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார். தனது 20-வது வயதில் ஜாக்ரிதி யாத்ராவில் பங்கு வகித்த லெவிட் இந்தியாவின் உண்மை முகத்தைக் கண்டறிந்தார். தாம் அங்கம் வகிக்க வேண்டிய துறை 'கல்வி' என்பதைக் கண்டுகொண்டார். தனது 23-வது வயதில் 2011-ல் 'டீச் ஃபார் இந்தியா'வியில் ஃபெல்லோ ஆக இணைந்தார். இரண்டு ஆண்டுகால பள்ளி வகுப்பறை அனுபவத்திலும், தனக்கு மாணவர்களாகக் கிடைத்த 30 சிறுவர்களை ஆழமாக அணுகியும் குழந்தைகளின் பார்வையில் உலகைப் பார்க்க ஆரம்பித்தார். "கற்றல் என்பது எந்தச் சூழலிலும் துன்புறுத்தலாக இருக்கக் கூடாது. ஓர் ஆசிரியர் என்பவர் ரிங் மாஸ்டர் அல்ல; வகுப்பறையை சர்க்கஸ் மேடையாக மாற்றக் கூடாது" என்று குறிப்பிடுகிறார் லெவிட்.


ஹேலெட் பபேக்கர்டின் 'எஜுகேஷன் இன்னொவேஷன் ஃபண்ட் ஃபார் இந்தியா கிராண்ட்' மூலம் உறுதுணை கிடைத்ததும் லைஃப் (LIFE Labs) ஆய்வகத்துக்கு உரிய வசதிகள் கிடைத்தன.

சீஃப் மாடல் டிசைனர் ஆன பிறகு, லெவிட்டின் படுக்கை அறைதான் ஆய்வகத்துக்கான இடமாக இருந்தது. இன்றோ 14 சிஎஸ்ஆர் பார்ட்னர்கள் மற்றும் அன்லிமிடட் இந்தியா, ஏக்யா போன்ற சமூக நிறுவனங்கள் மூலமாக 5,00,000 டாலர்கள் வரையிலான நிதியைத் திரட்டியிருக்கிறது 'லைஃப் லேப்ஸ்'.


செயல்முறைக் கற்றல் - லைஃப் ஆய்வகத்தின் தாரக மந்திரம்

லெவிட் இப்படி விவரிக்கிறார்...

இந்தியாவில் 10.4 லட்சத்துக்கும் மேலான பள்ளிகளில் படிக்கும் 44 கோடி பள்ளி மாணவர்களில் சுமார் 80 சதவீதம் பேருக்கு ஆய்வகங்களில் கற்பதற்கான அடிப்படை வசதியே இல்லை. கற்றலில் ஆர்வம் இல்லாத காரணத்தினாலேயே 37.2 சதவீத மாணவர்கள் தங்கள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். நாம் கற்பிக்கும் முறையே புரிதல்கள் இல்லாத வெறும் ஏட்டுக் கல்வியாக மட்டுமே இருக்கிறது. ஓஇசிடி-யால் நடத்தப்பட்ட PISA+ Test (2009) 15 வயதினருக்கான டெஸ்டில், உலகின் 74 மண்டலங்களில் இந்திய மாணவர்கள் கடைசி இரண்டாவது இடத்தையே பிடிக்க முடிந்ததுதான் இதற்குச் சான்று.

மாதிரிகளுக்கு உதவும் செருப்பு தையல் நிபுணர் அமித்
மாதிரிகளுக்கு உதவும் செருப்பு தையல் நிபுணர் அமித்
குருட்டாம் போக்கில் கற்பதால் மாணவர்களுக்கு பட்டங்கள் கிட்டுமே தவிர, தொழில் ரீதியான திறன்கள் மேம்பாடாது. இந்தியாவில் தொழில்நுட்பம் பயின்றவர்களில் 25 சதவீதத்தினரும், பட்டப்படிப்பு முடித்தவர்களில் 15 சதவீதத்தினர் மட்டுமே பணிக்குத் தகுதியாக இருப்பதாக சமீபத்திய நாஸ்காம் - மெக்கன்சி ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகிறது. எம்.பி.ஏ. பட்டதாரிகளில் 10 சதவீதம் பேர் மட்டுமே பணிக்குத் தயார் நிலையில் இருப்பதாக ஏ.சி.சி.ஐ.ஐ. ஆய்வு சொல்கிறது.
லைஃப் தலைமை டிசைனர் புருசோத்தமன்
லைஃப் தலைமை டிசைனர் புருசோத்தமன்
அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு போதுமான கால இடைவெளியில் உரிய பயிற்சிகளை அளித்து, கற்பித்தல் திறனை மேம்படுத்த வேண்டும் என்பதும், பள்ளிகளில் புதுமையான தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்பதே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்கிறார் லெவிட்.
லைஃப் (லேர்னிங் இஸ் ஃபன் அண்ட் எக்ஸ்பிரிமென்ட் - கற்றல் என்பது கேளிக்கையுடன் கூடிய சோதனை முயற்சியே) ஆய்வகமானது, பள்ளிக் கல்வியை ஜாலியானதாக மாற்றுகிறது. குழந்தைகளின் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்த துணைபுரிகிறது என்கிறார் லெவிட். மேலும் அவர் கூறியது:


கல்வியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் முழுமையான பலன் கிடைத்திட அறிவியல் பாடத்தில் லைஃப் ஆய்வகம் கவனம் செலுத்துகிறது. பள்ளி வகுப்பறைகளிலேயே மேடைகளை உருவாக்கி புதுமைகள் படைக்க வழிவகுக்கிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் புத்தாக்கத்திலும் படைப்புகளிலும் ஈடுபட வித்திடுகிறது.

மூன்றாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை ஒட்டிய 180-க்கும் மேற்பட்ட மாதிரிகளை லைஃப் லேப் உருவாக்கியுள்ளது. இந்த மாதிரிகள் அனைத்துமே நம் அன்றாட வாழ்க்கையில் கிடைக்கக் கூடிய பொருட்களில் இருந்தே உருவாக்கப்பட்டது என்பதால், பள்ளிகளும் மாணவர்களும் லைஃப் ஆய்வகத்தை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. புது யோசனைகளைப் பரப்பி பலரையும் புதுமை படைப்பாளிகளாக மாற்றுவதே முக்கிய நோக்கமாகும்.

குழந்தைகள் தங்கள் படைப்பாற்றலை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு டி.ஐ.ஒய். அறிவியல் கற்றல் உபகரணங்கள் வழங்கப்படும். ஆசிரியர்களுக்கு செயல்வழி கற்பித்தலுக்கு உரிய வழிமுறைகள் தரப்படும். இதன்மூலம் கற்றலிலும் கற்பித்தலும் ஆர்வம் மிகுதியாக வகை செய்யப்படுகிறது.

தாக்கம்

மூன்று மாநிலங்களில் உள்ள 76 பள்ளிகளைச் சேர்ந்த 36,500 குழந்தைகளிடம் லைஃப் லேப் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 10 சி.எஸ்.ஆர். அறக்கட்டளைகளின் துணையுடன் இது சாத்தியமாகியிருக்கிறது. இந்தப் பள்ளிகளில் லைஃப் லேப் தாக்கத்தின் எதிரொலியாக, 65 சதவீத ஆசிரியர்கள் செயல்வழி கற்றலுக்கு மாறியிருக்கிறார்கள்; அறிவியல் பாடத்தில் 69 சதவீத மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றுள்ளனர்; அனைத்து வகுப்பு மாணவர்களில் அறிவியல் மதிப்பெண் சராசரி 44 சதவீத அளவில் கூடியுள்ளது என்பது பிபிசிஎல் நடத்திய மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது.

எதிர்காலத் திட்டங்கள்

குழந்தைகள் புத்தாக்கமானதும் கலந்துரையாடலாகவும் கற்கும் வசதிகளைப் பெறுவதற்காக காமிக் அட்டைகள், கார்ட்டூன்கள் முதலானவற்றை வழங்க லைஃப் லேப் திட்டமிட்டுள்ளது. அத்துடன், லைஃப் லேபின் டெமோ மாதிரிகள் மற்றும் செயல்வழிக் கல்வி உபகரணங்களை குழந்தைகள் நேரடியாகவே பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆக்யூமென் ஃபெல்லோவாகவும் இருக்கிறார் லெவிட். கடந்த ஜனவரியில் அசோகா ஃபெல்லோஷிப் இவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. "லைஃப் லேப் குழுவின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே இதைக் கருதுகிறேன்" என்றார் அவர்.

இனி வரும் ஆண்டுகளில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 1,000 பள்ளிகளுடன் நேரடியாக இணைந்து பணியாற்றுவதே லைஃப் லேபின் இலக்கு என்கிறார் லெவிட்.

ஆக்கம்: ஸ்னிக்தா சின்ஹா | தமிழில்: கீட்சவன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


தொடர்பு கட்டுரைகள்:

கீழ்தட்டு குழந்தைகளை கலை மூலம் செம்மைப்படுத்தும் ஸ்ரீராம் ஐயர்!

தன் சகாக்கள் கல்வி கற்க உதவும் 13 வயது சிறுவன் அமன்