இந்த ஆண்டு வீர தீர செயலுக்கு விருது பெற்ற 8 குழந்தைகளின் ஊக்கமிகு கதைகள்! 

ஏழு சிறுமிகள் உட்பட பதினெட்டு குழந்தைகள் தேசிய வீர தீர விருதுகள் 2017-க்கு தேர்ந்தெடுக்கப்பட்டு குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொண்டனர்...

1

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் வெவ்வேறு பதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் துணிச்சலான சாகச செயலுக்காக விருதுகள் வழங்கப்படும். 1957-ம் ஆண்டு நிறுவப்பட்ட ’தேசிய வீர தீர விருதுகள்’ இதுவரை 963 குழந்தைகளுக்கு (680 சிறுவர்கள் மற்றும் 283 சிறுமிகள்) வழங்கப்பட்டுள்ளது.

ஏழு சிறுமிகள் உட்பட 18 குழந்தைகள் தேசிய துணிச்சல்மிகு விருதுகள் 2017-க்கு தேர்வானார்கள். மூன்று பேருக்கு அவர்களது இறப்பிற்கு பிறகு இந்த விருது வழங்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியால் கௌரவிக்கப்பட்ட இந்தக் குழந்தைகள் ராஜ்பாத்தின் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்தக் குழந்தைகளில் எட்டு பேரின் வீர தீர செயல்களை இங்கு பார்ப்போம்.

1. மம்தா தலாய்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறு வயதான மம்தாவும் ஏழு வயதான அவரது சகோதரி அஷாந்தியும் ஒடிசாவின் கேந்திரபரா மாவட்டத்திலுள்ள அவர்களது வீட்டிற்கு அருகிலிருந்த ஒரு குளத்தில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது கிராமத்தினுள் புகுந்த ஐந்தடி நீளம் கொண்ட முதலை ஒன்று திடீரென்று தண்ணீரிலிருந்து வெளியே வந்து அஷாந்தியை தாக்கியது.

பயந்து அங்கிருந்து ஓடுவதற்கு பதிலாக மம்தா தனது சகோதரியை முதலையின் பிடியிலிருந்து விடுவிக்க அவரது இடது கையை பிடித்து இழுத்தார். மொத்த பலத்தையும் பிரயோகித்து பலமாக இழுத்தார். உரக்க கத்தி அருகிலிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனால் முதலை அஷாந்தி மீதிருந்த பிடியை தளர்த்தி தண்ணீருக்குள் சென்றது. பின்னர் பிதர்கானிகா தேசிய பூங்காவைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் அந்த முதலையை பிடித்தனர்.

இந்த ஆண்டின் வீர தீர விருது வாங்கியோரில் இளம் வயதினர் மம்தாதான்.

2. பெட்ஷ்வாஜான் லிங்டோ பெயின்லாங்

இவரது அம்மா அருகிலிருந்த ஆற்றில் துணி துவைக்கச் சென்றார். பெட்ஷ்வாஜான் அவரது மூன்று வயது சகோதரருடன் சேர்ந்து சமைத்துக்கொண்டிருந்தார். அப்போது சமையல் அறையில் தீப்பிடித்தது. உடனடியாக வீடு நெருப்பால் சூழந்தது. பதினான்கு வயதான பெட்ஷ்வாஜான் முதலில் தப்பித்து வெளியே வந்தார். தம்பி வெளியே வராததைக் கண்டு எரிந்துகொண்டிருக்கும் வீட்டினுள் மீண்டும் புகுந்து தனது தம்பியை காப்பாற்றினார். இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

3. லஷ்மி யாதவ்

லஷ்மியும் அவரது தோழியும் ராய்பூரின் சாலையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்கள். அவரது தோழி தாக்கப்பட்டார். லஷ்மி மோட்டார்சைக்கிளில் கடத்திச் செல்லப்பட்டார். அவரை கடத்தியவர்கள் பலாத்காரம் செய்யும் நோக்கத்துடன் ஒதுக்குப்புறமான இடத்தில் வண்டியை நிறுத்தினர். ஆனால் லஷ்மி சுதாரித்து பைக்கின் சாவியை தூக்கியெறிந்தார். காசநோயால் பாதிக்கப்பட்ட 16 வயதான லஷ்மி உடனடியாக அருகிலிருந்த காவல் நிலைத்திற்கு விரைந்தார். அன்றே அந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

4. சம்ரிதி சுஷீல் ஷர்மா

சம்ரிதியின் வீட்டினுள் முகமூடி அணிந்த நபர் ஒருவர் அத்துமீறி நுழைய முற்பட்டார். 17 வயதான சம்ரிதியின் கழுத்தில் கத்தியை வைத்தார். இருந்தும் துணிந்து அவரை தாக்கினார் சம்ரிதி. இந்தப் போராட்டத்தில் சம்ரிதியின் கையில் ஆழமான காயங்கள் ஏற்பட்டு ஒரு விரல் சேதமடைந்தது. கையில் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது.

5. கரன்பீர் சிங்

2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ம் தேதி அட்டாரி கிராமத்திற்கு அருகில் ஒரு பள்ளி பேருந்து பாலத்தை கடக்கும்போது சுவற்றில் மோதி நீரில் விழுந்து விபத்துக்குள்ளானது. 25 குழந்தைகள் உயிருக்கு போராடினர். பேருந்தின் ஓட்டுனர் விரைவாக பேருந்தை செலுத்தியதே விபத்துக்கு காரணம்.

விரைவில் பேருந்து நீரில் மூழ்கியது. குழந்தைகள் மூச்சு விடவே சிரமப்பட்டனர். பதினாறு வயதான கரன்பீர் பதற்றமின்றி செயலில் ஈடுபட்டார். கதவை உடைத்து பேருந்திற்கு வெளியே ஓடினார். பல குழந்தைகள் பேருந்தினுள் சிக்கியிருப்பதை உணர்ந்து மறுபடி பேருந்திற்குள் சென்றார். அந்த சமயத்தில் தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்திருந்தது.

இருந்தும் நண்பர்களைக் காப்பாற்ற தீர்மானித்தார். மற்ற குழந்தைகளும் தப்பிக்க உதவினார். நெற்றியில் ஆழமான காயத்துடன் 15 குழந்தைகளின் உயிரை காப்பாற்றினார்.

6. நேத்ராவதி எம். சவான்

2017-ம் ஆண்டு மே 13-ம் தேதி கல் குவாரிக்கு அருகிலிருந்த ஒரு குளத்தில் துணி துவைத்துக்கொண்டிருந்தார் 14 வயதான நேத்ராவதி. குளத்தில் மூழ்கிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டார். மழை காரணமாக அந்த குளம் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. கணேஷ், முத்து இரு சிறுவர்களையும் காப்பாற்ற தனது பாதுகாப்பு குறித்து சற்றும் கவலைப்படாமல் 30 அடி ஆழமிருந்த அந்தக் குளத்தில் குதித்தார்.

16 வயதான முத்துவை காப்பாற்றி கரை சேர்த்துவிட்டு 10 வயது கணேஷை மீட்க மீண்டும் தண்ணீரில் குதித்தார். எனினும் கணேஷ் பயத்தில் நேத்ராவதியின் கழுத்தை இறுக்கி பற்றிக்கொண்டார். இதனால் நேத்ராவதி மூச்சுத் திணறி உயிரிழந்தார். கணேஷும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

7. நசியா கான்

ஆக்ராவில் சட்டவிரோத சூதாட்டம் பல ஆண்டுகளாக பரவலாக இருந்தது. இது குறித்து அதிகாரிகளிடம் புகாரளிக்க தீர்மானித்தார் நசியா. 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ம் தேதி சூதாட்ட கும்பல் குறித்து காவல் துறையினருக்கு துப்பு கொடுத்தார். இதனால் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அன்று முதல் சட்டவிரோத சூதாட்டம் நிறுத்தப்பட்டது.

இதற்கு பழி வாங்கும் விதமாக நசியாவிற்கு பல கொலை மிரட்டல்கள் வந்தது. இவரது குடும்பத்தினரும் தாக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவரால் வீட்டை விட்டு வெளியே வரவோ பள்ளிக்கு செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டது. உடனே இந்தப் பிரச்சனையை சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுவெளிக்கு எடுத்துச்சென்றார். அப்போதைய முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அவர்களிடம் உதவி கோரி ட்வீட் செய்தார். அந்த சூதாட்ட கும்பலுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

8. செபஸ்டியன் வின்செண்ட்

ஒரு நாள் பதிமூன்று வயது செபஸ்டியன் தனது நண்பர்களுடன் பள்ளிக்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். ஒரு ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து செல்லும்போது அவரது நண்பர் அபிஜீத்தின் ஷூ மாட்டிக்கொண்டதால் அபிஜீத் தண்டவாளத்தில் விழுந்தார். சைக்கிள் மற்றும் பேக் இரண்டின் கனமும் சேர்ந்து அவர் மீது விழுந்தது.

அங்கு நடந்த விபரீதத்தை மற்ற குழந்தைகள் உணர்வதற்குள் ஒரு ரயில் வந்துகொண்டிருப்பதைப் பார்த்தனர். அனைவரும் பயந்து ஓடினர். ஆனால் அபிஜீத்தை காப்பாற்ற முயற்சித்தார் செபஸ்டியன். எனினும் கூடுதல் கனம் காரணமாக அவரை நகர்த்துவது கடினமாக இருந்தது.

செபஸ்டியன் பல முயற்சிகளுக்குப் பிறகு அபிஜீத்தை தண்டவாளத்திலிருந்து சற்று தொலைவில் தள்ளிவிட்டு தானும் குதித்து உயிர்தப்பினார்.

செபஸ்டியனின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தனது துணிச்சலாலும் சமயோஜித புத்தியாலும் நண்பரைக் காப்பாற்றினார்.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா

Related Stories

Stories by YS TEAM TAMIL