மண் குடிசை வீட்டில் வளர்ந்த சந்தீப் லாபகரமான நானோ தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவிய கதை!

0

இன்றைய உலகில் புற்றுநோய் கண்டறிதல், ஆப்டிகல் சென்சார், ஏர் ஃபில்ட்ரேஷன் என நானோ இழைகளின் பயன்பாடுகள் பெருகியுள்ளன. எனினும் நானோ இழைகளின் ஆய்வு மற்றும் உருவாக்கவும் தொடர்பான விலை மலிவான தீர்வுகளை உருவாக்குவது சவால் நிறைந்ததாகவே காணப்படுகிறது. இதற்குக் காரணம் தரம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ஊழியர்கள் பிரச்சனைகளாகும்.

மஹாராஷ்டிராவின் ஷிந்த்கேடா மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி கிராமத்தைச் சேர்ந்த 32 வயது சந்தீப் பாடில் E-Spin Nanotech என்கிற தனது நிறுவனத்தின் மூலம் இதற்கு தீர்வுகாணும் பணியில் ஈடுபட்டுள்ள்ளார். தரத்தை உறுதிசெய்தும் அதன் ஆய்வக தொழில்நுட்பத்தை தொழிற்சாலைகளுக்கு எடுத்துச் செல்வதன் மூலமும் E-Spin மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்து படீலை அவரது கிராமத்தில் பிரபலப்படுத்தியுள்ளது.

”என்னுடைய கிராமத்தில் எனக்கு மிகுந்த மரியாதை கிடைத்துள்ளது. திருமணங்களிலும் விழாக்களிலும் என்னை சிறப்பு விருந்தினராக அழைக்கின்றனர்,” என்றார் புன்னகையுடன்.

”பெரும்பாலானோர் அதிக சம்பளத்துடன் கூடிய பணி வாய்ப்பையே தேர்வு செய்வார்கள். ஆனால் என்னைப் போன்றோர் ஆபத்தை துணிந்து எதிர்கொள்பவர்கள் தொழில்முனைவுப் பாதையை தேர்வு செய்வதை எங்கள் உறுதியை சோதனை செய்யும் முயற்சியாகவே கருதுகிறோம். இது சிறப்பான பலனை அளிக்கிறது,” என்றார் சந்தீப்.

இவர் 2010-ம் ஆண்டு கான்பூரில் இந்த நிறுவனத்தைத் துவங்க ஐந்து லட்ச ரூபாய் முதலீடு செய்தார். தற்போது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஆராய்ச்சி ஆய்வகங்கள் E-Spin நிறுவனத்தின் க்ளையண்டுகள். இதன் ஆண்டு வருவாய் 2.2 கோடி ரூபாயாகும்.

கடினமான குழந்தைப்பருவம்

சந்தீப்பின் பயணம் எந்த வகையிலும் எளிதாக இருக்கவில்லை. ரசாயன பொறியியலில் டாக்டரேட் பெற்றிருக்கும் இவர் தனது கிராமத்தில் ஒரு சிறிய மண் வீட்டில் பிறந்து வளர்ந்துள்ளார்.

”என்னுடைய கிராமத்தில் பள்ளி, சுகாதார மருந்தகங்கள், தபால் நிலையம், சாலைகள், போக்குவரத்து என எந்த அடிப்படை வசதியும் இல்லை. இப்போதும் பிம்ப்ரி கிராமத்தில் வசிப்போருக்கும் இவை எட்டாக்கனியாகவே உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த எழுபத்தைந்து சதவீதம் பேர் பழங்குடியினர்,” என்றார்.

சந்தீப் கடினமான குழந்தைப்பருவத்தையே கடந்து வந்துள்ளார். ”என் பெற்றோர் படிக்கவில்லை. அவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்தனர்,” என விவரித்தார்.

”என் உடன்பிறந்தோர் இரண்டு பேர் உட்பட மொத்த குடும்பமும் பட்டினியாக இருந்த நாட்கள்கூட உண்டு. இத்தகைய மோசமான சூழலிலும் படிக்கவேண்டும் என்பதே என் கனவாக இருந்தது,” என்றார்.

அவரது மாமா தாந்திரா என்கிற வேறொரு கிராமத்திற்கு அவரை அழைத்துச் சென்றபோது அவரது நிலை மாறியது. இந்த கிராமத்தில் கல்வியறிவு விகிதம் அதிகமாகவே இருந்தது. அங்கிருந்த பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்குச் சென்றனர். “நான் அங்கிருந்த சமயத்தில் பள்ளிக்குச் சென்றேன். அறிவியலில் ஈடுபட்டிருந்த சந்தீப் சகோதரர்கள் பற்றிய கதைகளைக் கேட்டேன். எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. என்னையும் அறியாமல் அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் மீது ஈடுபாடு அதிகமானது,” என்றார்.

மேலும், “தொலைக்காட்சி மற்றும் டீசல் என்ஜின்களின் மெக்கானிக்கல் பழுதுபார்க்கும் பணிகளைப் பார்க்கும்போது நான் அதிக உற்சாகமடைவேன்,” என்றார்.

சந்தீப் பள்ளிப்படிப்பு முடிந்ததும் பிம்ப்ரி திரும்பினார். படிப்பைத் தொடர்ந்தார். அவரது அம்மா கிராமத்தில் சிறு கடை ஒன்றைத் துவங்கினார். சந்தீப் அவரது அம்மாவிற்கும் உதவினார். 

“மூத்த மகன் என்பதால் நான் சில பொறுப்புகளை சுமக்கவேண்டியிருந்தது. காலை வேளையில் பள்ளியில் நேரம் செலவிடுவேன். மாலை நேரத்தில் கடையில் இருப்பேன். இரவில் படிப்பேன். உயர்நிலைப் படிப்பை முடிக்க தாந்திரா திரும்பினேன். பின்னர் பிடெக் ப்ரோக்ராமில் சேர்ந்தேன்,” என்றார்.

திருப்புமுனை

சந்தீப் முதல் ஆண்டு தோல்வியுற்றபோதும் தொடர்ந்து முயற்சி செய்து ஐஐடி கான்பூரில் பிஎச்டி ப்ரோக்ராமில் இணைந்தார். 

”இங்கு என்னுடன் இருந்த ஒருவர் E-Spin இயந்திரத்தை வடிவமைக்கவும் இணைக்கவும் போராடியதைக் கவனித்தேன். இதுவே திருப்புமுனையாக அமைந்தது. எனக்கு அந்தப் பணி ஒதுக்கப்பட்டது. நான் அதை வெற்றிகரமாக நிறைவுசெய்தபோது என்னுடைய பலத்தை தெரிந்துகொண்டேன். தொழில்நுட்பத்தை தயாரிப்பாக மாற்றும் பகுதியில் எனக்கு ஆர்வம் அதிகம் இருப்பதை உணர்ந்தேன். அதுவே நானோ தொழில்நுட்ப தயாரிப்புகளில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. 

“பல மாதங்கள் தீவிரமாக ஆய்வு செய்த பிறகு இந்தியாவில் நானோ தயாரிப்புகளுக்கு மிகப்பெரிய சந்தை இருப்பதை கண்டறிந்தேன். என்னுடைய சொந்த நிறுவனத்தை துவங்க விரும்பினேன்,” என்றார்.

தனிப்பட்ட ப்ராஜெக்டுகள் சிலவற்றை முடித்தார். நண்பர்களிடம் ஆலோசனை கேட்டார். அதன்பிறகு ஐஐடி கான்பூரில் உள்ள SIDBI இன்குபேஷன் மற்றும் இன்னோவேஷன் மையத்தின் (SIIC) உதவியுடன் 2010-ம் ஆண்டு சந்தீப் E-Spin அறிமுகப்படுத்தினார். ”உயர்தரமான, விலைமலிவான நானோ இழைகள் யூனிட் குறித்து ஆய்வு செய்வது மகிழ்ச்சியாக இருந்தது. இதன் பயன்பாடுகள் பரந்து விரிந்திருந்தது,” என்றார்.

இதை அறிமுகப்படுத்தியபோது இந்தியாவில் பயன்பாட்டில் இருந்த பெரும்பாலான நானோ இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. அதிக திறன்வாய்ந்த மலிவு விலை தயாரிப்புகளை சிறப்பான பேக்-அப் சேவைகளுடன் வழங்கி இந்த இறக்குமதியை குறைக்கவும் மற்ற நிறுவனங்களை ஒற்றை தளத்தில் இணைக்கவும் விரும்பினார் சந்தீப்.

இடமும் வளங்களும் மிகப்பெரிய தடைகளாக இருந்தது. “என்னிடம் சொந்தமாக தொழிற்சாலை இல்லாததால் உற்பத்தி பகுதியை அவுட்சோர்ஸ் செய்யவேண்டியிருந்தது. சிறந்த தரத்துடன்கூடிய பொருட்களை வழங்கும் உற்பத்தியாளர்கள் கான்பூரில் இல்லை. எனவே உற்பத்தியாளர்களைத் தேடி டெல்லி செல்லவேண்டியிருந்தது. அதேபோல் கான்பூரில் பயிற்சிபெற்ற ஊக்கம் நிறைந்த தொழிலாளர்களைக் கண்டறிவதும் கடினமாக இருந்தது. எனினும் ஊழியர்கள் அவர்களுடைய குடும்பங்களுக்கு அருகில் வசித்தால் அவர்கள் கடினமாக உழைத்து பணம் சேமிக்கலாம் என நம்பினேன். எனவே நகரில் இருக்கும் இளைஞர்களை பணியிலமர்த்தி பயிற்சி அளிக்க தீர்மானித்தேன்,” என்றார்.

”எங்களது வணிகம் முழுமையாக டிஜிட்டல் மார்கெட்டிங் சார்ந்தும் ஒருவர் அடுத்தவருக்கு பரிந்துரைப்பதன் மூலமும் செயல்பட்டது,” என்றார்.

”தற்போது நாங்கள் ஃபேஸ் மாஸ்க், கேபின் ஏர் ஃபில்டர்கள் போன்ற தயாரிப்புகளுடன் நானோ இழைகள் சார்ந்த ஏர்-ஃபில்ட்ரேஷன் பகுதியிலும் செயல்பட உள்ளோம்,” என சந்தீப் விவரித்தார்.

E-Spin நிறுவனத்தை ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாற்றவும் விரும்புகிறார்.

”சிறப்பான உற்பத்தி அமைப்பு மற்றும் தனித்துவமான செயல்முறை வடிவமைப்புடன் மற்ற நிறுவனங்களும் இந்தப் பகுதியில் செயல்படலாம். என்னுடைய நிறுவனமும் என்னைப் போன்ற மற்ற நிறுவனங்களும் அதிக டெண்டர்கள் பெற மாநில அளவில் ஆதரவு தெரிவித்தால் எங்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும்,” என்றார்.

10 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாயை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளேன். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் இந்தத் தொகையை முதலீடு செய்யவும் ஹெல்த்கேர் துறையில் செயல்படவும் விரும்புகிறேன்,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : ரிஷப் மன்சூர் | தமிழில் : ஸ்ரீவித்யா