வீடுவீடாக மருந்துகளை சேகரித்து, ஏழைகளுக்கு இலவசமாக வழங்கும் 80 வயது ‘மெடிசன் பாபா’  

2

80 வயதாகும் ஓம்கார் நாத் சர்மா டெல்லிவாசி. அவருக்கு ‘மெடிசன் பாபா’ என்ற புனைப்பெயரும் உண்டு. அவர் பயன்படுத்தாத மருந்து மாத்திரைகளை சேகரித்து தேவைப்படும் ஏழைகளுக்கு இலவசமாக கொடுத்துவருகிறார். இதை அவர் சுமார் 7 ஆண்டுகளாக தன்னார்வமாக செய்துவருகிறார். 

ஓம்கார், நொய்டாவில் உள்ள கைலாஷ் மருத்துவமனை ரத்த வங்கி ஒன்றின் டெக்னிசனாக பணிபுரிந்து ரிடையர் ஆன பின் இந்த பணியை செய்துவருகிறார். 2008 இல் நிகழ்ந்த ஒரு சம்பவத்துக்குப்பின் இதுபோன்று மருந்துகளை ஏழைகளுக்கு கொடுக்கும் பணியை செய்யத் தொடங்கினார் ஓம்கார். கட்டுமானத்தில் இருந்த மெட்ரோ ப்ரிட்ஜ் ஒன்று கிழக்கு டெல்லியில் இடிந்து விழுந்து இரண்டு தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். மேலும் பலர் கடுமையான காயங்களுடன் உயிருக்கு போராடினர். ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் சரியான வசதி இல்லாததும், இதுபோன்ற கூலித்தொழிலாளர்கள் தகுந்த சிகிச்சை பெற போதிய பணமும் இல்லாமல் அவதிப்படுவதை அந்த சமயத்தில் உணர்ந்தார் ஓம்கார். அன்றிலிருந்து தன்னால் ஆன உதவிகளை செய்ய முடிவெடித்தார். 

“இவர் எங்கள் இடத்துக்கு வந்து தேவை இல்லாத மருந்து, மாத்திரிகளை கேட்டு பெற்றுச்செல்வது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. இவர் செய்யும் இந்த சேவை அற்புதமான ஒன்று, அதை வேறு யாரும் செய்வதாக தெரியவில்லை,”

என்று மால்வியா நகரில் வசிக்கும் ரிச்சா ஜெயின் கூறினார். மேலும் தன் பணியை பற்றி பேசிய ஓம்கார்,

“நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் அரசு காலனிகளுக்கு சென்று பயன்படுத்தாத மருந்துகளை சேகரிப்பேன். பணக்கார பகுதிகளில் வாழும் மக்கள் இதுபோன்று மருந்துகளை தானம் செய்வதில்லை,” என்று தன் அனுபவத்தை பகிர்கிறார். 

தன் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் சூழலில் தான் ஓம்கார் இந்த சேவைகளை செய்கிறார். அவர் ஒரு வாடகை வீட்டில் தனது மனைவி மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட 45 வயது மகனுடன் வாழ்ந்துவருகிறார். 12 வயதில் முடமான ஓம்கார், இந்த சேவையை செய்ய தினமும் சுமார் 5-6 கிலோமீட்டர் தூரம் நடக்கிறார். அவரால் மெட்ரோவில் செலவு செய்ய முடியாததால் நடந்தே செல்கிறார். காலை 6 மணிக்கு தன் வீட்டில் இருந்து புறப்பட்டு, டெல்லி முழுதும், நடை, பஸ் என்று அலைவார். முதியோர் பேருந்து பாஸ் வைத்துக்கொண்டு தன் பயணங்களை மேற்கொள்கிறார். பஸ்கள் செல்லமுடியாத உட்பகுதிகளுக்கும் சென்று மருந்துகள் சேகரிக்கிறார் ஓம்கார். 

“நான் ஒரு மாதத்தில் 4-6 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகளை ஏழைகளுக்கு அளித்து வருகிறேன்,” என்று டிஎன்ஏ பேட்டியில் கூறியுள்ளார் ஓம்கார்.

‘மெடிசன் பாபா’ தற்போது பிரபலம் ஆகியுள்ளார். நல்லுள்ளம் படைத்த குடிமக்கள் சிலர், தாங்களே ஒரு பெட்டியை அவர்கள் வசிக்கும் காலனியின் பொது இடத்தில் வைத்து மருந்துகளை சேகரித்து ஓம்காரிடம் கொடுக்கின்றனர். அதேபோல், கல்லூரிகள், கோவில்களில் பெட்டிகள் வைத்து அங்கே மருந்துகளை சேகரித்தும் தருகின்றனர். ஓம்காருக்கு உதவியாக அவரது மகனும் ஒரு ஊழியரும் உள்ளனர். இந்த சேவையில் ஓம்காருக்கு வருமானம் ஏதும் கிடைப்பதில்லை இருப்பினும் ஒருவித மன நிம்மதியுடன் இதை செய்கிறார். டெல்லியை ஒரு அன்பான நகரமாக மாற்ற ஓம்கார் உழைத்துவருகிறார்.

கட்டுரை: Think Change India