நோபல் பரிசு பெற்ற முதல் வானியல் இயற்பியலாளர் சுப்ரமணியன் சந்திரசேகர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! 

0

சுப்ரமணியன் சந்திரசேகர் 1910-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ம் தேதி பிரிவினைக்கு முன்பான பஞ்சாபில் (தற்போது பாகிஸ்தானின் லாகூரில்) பிறந்தவர். நோபல் பரிசு பெற்ற முதல் வானியல் இயற்பியலாளரான இவரது 107-வது பிறந்தநாளையொட்டி அவரை போற்றும் விதத்தில் அவரது புகைப்படத்தைக் கொண்ட ’டூடுல்’ மூலம் கூகுள் கொண்டாடியது.

சந்திரா என்று அன்புடன் அழைக்கப்படும் இவர் சி சுப்ரமணியன் ஐயருக்கு பிறந்த 10 குழந்தைகளில் ஒருவர். குழந்தை மேதையான இவர் தனது சித்தப்பாவான சி வி ராமனின் பாதையை பின்பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பினார். பதின் வயதில் தெர்மோடைனமிக்ஸ் குறித்த தனது முதல் ஆய்வுக்கட்டுரையை (Thermodynamics of Compton Scattering with Reference to the Interior of Stars) சமர்ப்பித்தார். 

வீட்டிலேயே ஆரம்பக்கல்வி பயின்றார். சென்னை மாநிலக்கல்லூரியில் இயற்பியல் பிரிவில் இளங்கலை படிப்பை மேற்கொண்டார். உதவித் தொகை பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று பிஎச்டி முடித்தார்.

26 வயதில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டு தனது பணிவாழ்க்கை முழுவதையும் இங்கேயே கழித்தார்.

1944-ம் ஆண்டு அவருக்கு 30 வயதிருக்கையில் லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சமயத்தில் ஹிரோஷிமா மற்றும் நாகசகி பகுதியை சூறையாடிய அணுகுண்டு உருவாக்கப்பட்ட மன்ஹட்டன் ப்ராஜெக்டில் இணைந்துகொள்ளவும் அவருக்கு அழைப்பு வந்தது. எனினும் இந்தியா டுடே தகவல்படி எஃப்பிஐ அனுமதி தாமதிக்கப்பட்டதால் அதில் பங்குகொள்ள முடியவில்லை.

1983-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வில்லியம் ஆல்ஃபர்ட் ஃபௌலர் அவர்களுடன் பகிர்ந்துகொண்டார். விண்மீன்களின் கட்டமைப்பு மற்றும் பரிணாமம் குறித்த ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றார்.

1952 – 1971 வரை வெளியிடப்பட்ட பழம்பெரும் பத்திரிக்கையான ’தி ஆஸ்ட்ரோஃபிசிக்ஸ் ஜர்னல்’ எடிட்டராக பணியாற்றினார். 1953-ம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றதும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். 1995-ம் ஆண்டு 86-ம் வயதில் இறக்கும்வரை அங்கேயே பணிபுரிந்தார்.

”இந்த உண்மையான நட்சத்திர மனிதரின் உலகளாவிய கோட்பாடுகள் தற்போதைய விண்வெளி ஆராய்ச்சி மற்றும் நவீன வானியல் ஆய்வாளர்களின் லட்சியப் பணிகளுக்கு உந்துதலளிக்கிறது. அத்தகைய மனிதருக்கு நாங்கள் மரியாதை செலுத்துகிறோம்,”

என்று கூகுள் அவருக்கு மரியாதை செலுத்தி குறிப்பிட்டதாக ‘மிரர்’ தெரிவிக்கிறது.

கட்டுரை : Think Change India