சுதந்திரத்திற்கு முன் உருவான இந்திய பிராண்டுகள்...

0

இந்தியா சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகின்றன. ஏகாதிபத்தியவாதிகளால் இந்தியா பிரிக்கப்பட்டாலும், அதிலிருந்து மீண்டெழுந்து, இந்தியா தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டது. இந்த 72 ஆண்டுகளில், தொழில்முனைவு மற்றும் அறிவுசார் துறைகளில் இந்தியா தனக்கான இடத்தை உருவாக்கி கொண்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்சஸ் அறிவியல் ஆய்வுக்கான இடமாக டாடா குழுமத்தால் உருவாக்கப்பட்டது. 
பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்சஸ் அறிவியல் ஆய்வுக்கான இடமாக டாடா குழுமத்தால் உருவாக்கப்பட்டது. 

இந்த தருணத்தில், சற்று திரும்பி பார்த்து, இந்தியாவுடன் அடையாளமாக அறியப்படும் நிறுவனங்களை நினைத்துப்பார்க்கலாம். சுதந்திரத்திற்கு முன் சிக்கலான கால கட்டத்தில் துவங்கப்பட்ட இந்த பிராண்ட்கள் காலத்தின் சவாலை வென்று, இன்றளவும் வெற்றிகரமாக தொடர்கின்றன.

டாடா குழுமம் – 1868

கையில் 21,000 மற்றும் தந்தை நிறுவனத்தில் 9 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தில், 29 வயது இளைஞர் ஒருவர் ஆங்கிலேய இந்தியாவில் வர்த்தக நிறுவனம் ஒன்றை துவக்குகிறார். அதன் பிறகு அவர், சிங்க்போக்லியில், திவாலான எண்ணெய் ஆலை ஒன்றை விலைக்கு வாங்கி அதை பருத்தி ஆலையாக மாற்றுகிறார். இரண்டு ஆண்டுகளுக்குப்பின் அந்த ஆலையை லாபத்திற்கு விற்றுவிட்டார். விரைவிலேயே அவர் நாக்பூரில் இன்னொரு ஆலையை அமைத்தார். அந்த இளைஞர் தான் ஜாம்ஷெத்ஜி டாடா. தொலைநோக்கு மற்றும் அசாரதரனமான திறன் கொண்ட அவர், தான் டாடா குழுமம் சர்வதேச வர்த்தக குழுமமாக உருவானதற்கான மூலவித்தாக இருக்கிறார்.

ஜாம்ஷெத்ஜி டாடா நான்கு இலக்குகளை கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. நீர்மின் நிலையம் அமைப்பது, எஃகு ஆலை நிறுவுவது, உலகத்தரம் வாய்ந்த மகத்தான கல்வி நிறுவனம் மற்றும் ஆடம்பரமான ஓட்டல் கட்டுவது அவரது இலக்குகளாக இருந்தன. அவர் தனது வாழ்நாளில் தாஜ்மகால் ஓட்டலை நிறுவினார், அவர்து வாரிசுகள் மற்ற மூன்று கனவுகளையும் நிறைவேற்றினர். அந்த காலத்தில் தாஜ் மகால் ஒட்டல் தான் நாட்டில் மின்வசதி பெற்ற ஒரே ஓட்டலாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று டாடா குழுமம், 100 நாடுகளில் செயல்பாடுகளை கொண்டிருக்கிறது. 150 நாடுகளுக்கு எற்றுமதி செய்கிறது. குழுமத்தின் மொத்த வருவாய், 2014 -15ல் , 108.78 பில்லியன் டாலராக இருந்தது.

டாபர் – 1884

‘டாக்டர் பர்மன்’ என்றே அவர் மதிப்புடன் அழைக்கப்பட்டார். கொல்கத்தா அருகே அமைந்த சிறிய கிராமத்தில் இருந்த படி, டாக்டர்.எஸ்.கே.பர்மன், இந்திய கிராமங்களில் இருந்த எண்ணற்றவர்களின் நோய்களை தனது ஆயுர்வேத மருந்துகள் மூலம் குணமாக்கினார். அவரது அற்புதமான மருந்துகளின் புகழ் பல இடங்களுக்கு பரவி, டாக்டர் பர்மன் இந்த பிராந்தியம் முழுவதும் அறியப்பட்டார். டாக்டர் பர்மன் என்பதில் இருந்து டாபர் எனும் பெயர் உண்டானது.

மேற்குவங்கத்தில் சிறிய கிளினிக்கில் துவங்கியது இன்று, நாட்டின் நான்காவது பெரிய நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனமாக உருவாகி இருக்கிறது. 2013-14 ல் இக்குழுமத்தின் வருவாய் ரூ.7,800 கோடியாக இருந்தது. உலகின் மிகப்பெரிய ஆயுர்வேத மற்றும் இயற்கை நல நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நிறுவனம் 21 பிரிவுகளில் 382 பொருட்களை வழங்கு வருகிறது.

கோத்ரெஜ் – 1897

வழக்கறிஞர் ஒருவர், சட்டத்தை விட்டுவிட்டு, பூட்டு தயாரிப்பில் ஈடுபட்ட போது, உலக பிராண்ட் ஒன்றை உருவாக்குவதை அவர் அறிந்திருக்கவில்ல. அந்த காலத்தின் தொடர் தொழில்முனைவோரான அவர், குளியல் சோப் மற்றும் சமையல் எண்ணெய் தயாரிப்பிலும் ஈடுபட்டார். உலகின் பாதுகாப்பான பெட்டகம் மற்றும் பாதுகாப்பு வசதியை உருவாக்கிய பிறகு அவர் பல தொழில்களில் ஈடுபட்டார். ஆர்தேஷிர் கோத்ரெஜின் கனவு உலகளாவிய பிராண்டை உருவாக்குவதாக இருந்தது. பிரோஷ்ஜா கோத்ரெஜ் இதை தொடர்ந்து மேற்கொண்டார்.

தொழிற்சாலை பொறியியல், பர்னீச்சர், பாதுகாப்பு, விவசாய பொருட்கள், வீட்டு உபயோக சாதனங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் நுகர்பொருட்களில் குழுமம் செயல்பட்டு வருகிறது.

நீல்கிரிஸ் – 1905

பெங்களூருவின் பிரிகேட் சாலை துவக்கத்தில் அமைதியாக உள்ள விற்பனை நிலையம் தான் தென்னிந்தியாவின் பழமையான சங்கிலித்தொடர் சூப்பர் மார்க்கெட் என்பது எத்தனை பேருக்குத்தெரியும்? 

ஆங்கிலேயர்களுக்கு மெயில் ரன்னராக இருந்த, தமிழகத்தின், ஈரோடு மாவட்டத்தைச்சேர்ந்த ஆறுமுக முதலியார் என்பவரால் நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட் துவக்கப்பட்டது. ஆங்கிலேயர்களுக்காக, கோவையில் இருந்து ஊட்டி மற்றும் குன்னூருக்கு அவர் கடிதங்கள் மற்றும் காசோலைகளை கொண்டு செல்வார். பால் பண்ணை பொருட்களை கொண்டு வருமாறும் அவர் கேட்டுக்கொள்ளப்படுவதுண்டு. அவற்றை வண்ணாரப்பேட்டையில் இருந்த ஆங்கிலேயர் ஒருவரிடம் இருந்து வாங்கி வருவார். இதுவே நீலகிரி டைரி பார்மாக அமைந்தது.

பால் மற்றும் பால்பண்ணை பொருட்களில் இந்நிறுவனம் கவனம் செலுத்தியது. ஆறுமுகத்தின் மகன், சென்னியப்பன், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு சென்று வந்த பிறகு, சூப்பர் மார்க்கெட்டை அமைக்க தீர்மானித்தார். பிரிகெட் சாலை சூப்பர் மார்க்கெட் 1936ல் அமைக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு இந்த குடும்பம் ஈரோட்டில் உற்பத்தி மையம் அமைத்தது. நீல்கிரிஸ் பிராண்ட் தென்னியந்திய குடும்பங்கள் நன்கறிந்த பிராண்டாக வளர்ந்தது.

2008 ல், யுகேவின் முதலீட்டு நிறுவனமான, ஆக்டிஸ் இந்த குழுமத்தில் ரூ.65 மில்லியன் முதலீடு செய்தது. 2014 நவம்பர் மாதம், பியூச்சர் கன்ஸ்யூமர் எண்டர்பிரைசஸ், ஆக்டிஸ் மற்றும் இதர புரமோட்டர்களிடம் இருந்து 98 சதவீத பங்குகளை வாங்கியது. தற்போது நீல்கிரிஸ், பியூச்சர் கன்ஸ்யூமர் எண்டர்பிரைசஸ் துணை நிறுவனமாக இருக்கிறது.

ரூஹ் அப்ஸா – 1907 (ஹம்டார்ட்)

ஹக்கீம் ஹபீஸ் அப்துல் மஜீத் என்பவர், மூலிகைகள், காய்கறி மற்றும் பழங்களின் சாறு கொண்டு உருவாக்கிய ஸ்குவாஷ், ரூஹ் அப்ஸா என அழைக்கப்பட்டு ஒவ்வொரு வீடுகளிலும் பிரபலமானது. இயற்கையான குளிரூட்டிகளை கொண்டதாக கருதப்பட்ட இந்த ஸ்குவாஷ், கடுமையான வட இந்திய கோடை காலத்தில் நிவாரணம் அளித்தது. இன்று எந்த பலூடாவும், ரூஹ் அப்ஸ் இல்லாமல் பூர்த்தி ஆவதில்லை.

ஹகீம் மஹீத், யூனானி மருத்துவ முறையின் புகழ்பெற்ற மருத்துவராக அறியப்படுகிறார். பழைய தில்லியில் உள்ள தனது கிளினிக்கில் இருந்து இதை அவர் அறிமுகம் செய்தார். பிரிவினைக்குப்பிறகு கராச்சி மற்றும் தில்லியில் என இரண்டு ஹம்டார்ட் கிளைகள் உண்டாயின.

ரூஹ் அப்ஸ் எனும் பெயர் காரணம் புரியாத புதிராக இருக்கிறது. பழைய கால புத்தகத்தில் இந்த பெயரை ஹக்கீம் கண்டறிந்ததாகவும் ஒரு கதை கூறபப்டுகிறது.

வாடிலால் – 1907

1907 ல் வாடிலால் காந்தியால் சோடா பவுண்டனாக துவக்கப்பட்டது இன்று இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐஸ்கிரீம் நிறுவனமாக இருக்கிறது. ஆர்ம்ப நாட்களில், வாடிலால் கையால் இயக்கும் இயந்திரம் கொண்டு ஐஸ்கிரீமை தயாரித்தார். பால், உப்பு மற்றும் ஐஸ் கொண்டு இந்த இயந்திரம் செயல்பட்டது. ஐஸ்கிரீம்கள் தர்மோ பெட்டிகளில் இல்லங்களுக்கு விநியோகிக்கப்படும். வாடிலாலின் மகனான ரன்சோத் லாலுக்கு சோடா பவுண்டன் மாற்றப்பட்டு அவர் 1926 ல் சில்லறை விற்பனையை துவக்கினார்.

அதன் பிறகு அவர் இயந்திரங்களை இறக்குமதி செய்து வரித்தகத்தை விரிவாக்கம் செய்தார்.

எம்டிஆர் – 1924

யஜ்நாராயண மையா மற்றும் அவரது சகோதரர்களால் நிறுவப்பட்ட எம்டிஆர், பெங்களூருவில் ஜேசி சாலையில் இன்றும் உயர்ந்து நிற்கும் ரெஸ்டாரண்டில் இருந்து துவங்கியது. எம்டிஆரில் கிடைக்கும் மொறுமொறு மசாலா தோசைக்காக கர்நாடக முதல்வர் ஒருவர் வரிசையில் காத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ரவா இட்லியை கண்டுபிடித்த நிறுவனமாகவும் அறியப்படுகிறது. இரண்டாம் உலக்கப்போரின் போது, இட்லியின் முக்கிய பொருளான அரிசிக்கு தட்டுப்பாடு உண்டானது. எம்டிஆர் செமோலினாவை சோதனையாக முயன்று பார்க்க, அதிலிருந்து ரவா இட்லி உருவானது.

எம்டிஆர், ரெஸ்டாரண்ட் மற்றும் பேக் செய்த உணவு ஆகிய வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளது.

பார்லே ஜி – 1929

இந்தியாவில் தேநீர் என்பது பார்லே ஜி பிஸ்கட்களுடன் சேர்த்து சுவைக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய பிஸ்கெட் பிராண்டாக கருதப்படும் பார்லே ஜி, 1929 ல் மும்பையில் வைலே பார்லேவாக துவக்கப்பட்டது. 1939 ல் பிஸ்கெட் தயாரிப்பு துவங்கியது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, முதல் விளம்பரத்தில் ஆங்கில பிஸ்கெட்களுக்கு போட்டியாக இந்திய குளுகோஸ் பிஸ்கெட் பிராண்டாக அடையாளம் காணப்பட்டது. 2013 ல் ரூ.5,000 கோடியை கடந்த முதல் இந்திய நுகர்வோர் பிராண்டானது.

ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்; சைபர்சிம்மன்