ஊழலுக்கு எதிரான மக்கள் புரட்சி தேவை!

0

ஊழல் என்பது இந்தியாவை அழிக்கும் புற்ற்நோய் போன்றது என மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த புற்றுநோய் மறைவதாக இல்லை. இப்போது புதிதாக வந்து நிற்பது அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் ஊழல். இது புதிய ஊழல் இல்லை தான். முந்திய ஐ.மு.கூ ஆட்சியின் போதும் 2014 தேர்தலுக்கு முன் இது கவனத்தை ஈர்த்தது. ஆனால் தற்போது மிலன் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக இது மீண்டும் முன்னிலைப் பெற்றிருக்கிறது. கடந்த சில நாட்களாக தேசம் இது பற்றி விவாதிக்கிறது. ஆளும் கட்சியான பா.ஜ.க, காங்கிரஸ் கட்சியை குற்றம் சொல்கிறது. காங்கிரஸ், பா.ஜ.க வை தாக்குகிறது. முந்தைய காலங்கள் போலவே இதற்கான தீர்வு இருப்பதாக தெரியவில்லை.

நம்முடைய அமைப்பில் என்ன பிரச்சனை என்பதை, நாட்டின் அரசியலை எது பாதித்து வருகிறது என்பதை உணர்த்தும் அழகான உதாரணமாக இது இருக்கிறது. 

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஒப்பந்தம் வாஜ்பாய் அரசு காலத்தில் போடப்பட்டு, இந்த விவிஐபி ஹெலிகாப்டருக்கான அம்சங்கள் தொடர்பான மாற்றங்கள் 2003 ல் தே.ஜ.கூ அரசின் கீழ் அளிக்கப்பட்டன. அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திற்கு ஆதரவாக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும், இதற்காக பெருந்தொகை யூரோக்களில் கைமாறியதாகவும் கூறப்படுகிறது. 2004 வாஜ்பாய் அரசு பதவி இழந்து, மன்மோகன் சிங் பிரதமரானார். அவரது காலத்தில் ஒப்பந்தம் முடிவானது. 2014 தேர்தலின் போது ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது. மிலன் நீதிமன்ற தீர்ப்பு, ஐந்து மாநில தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரசை நெருக்கடியில் ஆழ்த்துவதற்கான வாய்ப்பை பா.ஜ.கவுக்கு அளித்திருக்கிறது. தீர்ப்பில் சோனியா காந்தி மற்றும் அகமது பட்டேல் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் மீதோ வேறு எந்த அரசியல் தலைவர் மீதோ எதுவும் குற்றம்சாட்டப்படவில்லை. இருப்பினும் இது தொடர்பாக இன்னும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பா.ஜ.க இதை பயன்படுத்திக்கொண்டு காங்கிரசை வீழ்த்தப்பார்க்கிறது. ஆனால் சில கேள்விகள் இருக்கின்றன. முதல் கேள்வி- அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் வெளிச்சத்திற்கு வந்த பிறகு இத்தாலி விரைவாக செயல்பட்டுள்ளது. துரிதமாக விசாரணை நடந்து, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கீழ் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. நிறுவனத்தின் இரண்டு அதிகாரிகள் லஞ்சம் அளித்ததாக, மிலன் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு நிரூபிக்கப்பட்டு இருவரும் சிறையில் இருக்கின்றனர். ஆனால், இந்தியாவில், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை கூட விட்டுவிடுங்கள், இன்னமும் முறையான விசாரணை கூட துவங்கவில்லை என்பது தான் சோகம்.

இந்த வழக்கில் முந்திய மன்மோகன் சிங் காட்டிய சோம்பலை கூட என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மோடி அரசு இது தொடர்பாக செயல்படாமல் இருப்பது ஏன்? கடந்த 2 ஆண்டுகளாக எதுவும் செய்யாமல் இருப்பது ஏன்? சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு இது தொடர்பாக விசாரணையை விரைவுபடுத்தவில்லை. நடவடிக்கை எடுக்கப்படுவதை தடுப்பது யார்? ஏன்? ஊழலை பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்றும், ஊழலில் தான் ஈடுபட்டதில்லை என்றும் ஊழலில் ஈடுபடுபவர்களை தப்பிக்கவிட மாட்டேன் என்றும் மோடி கூறி வருகிறார். அவர் தனது கொள்கையில் உறுதியாக இருந்திருந்தால் இந்த ஊழலில் உண்மையான குற்றவாளிகள் யார் என்பது மக்களுக்கு தெரியவந்திருக்கும். எனவே இது குறித்து நாட்டு மக்களுக்கு அவர் விளக்கம் அளிக்க கடமைப்பட்டிருக்கிறார்.

இரண்டாவதாக, இந்த விவகாரத்தில் சோனியா காந்தி பணம் பெற்றதாக பா.ஜ.க தலைவர்கள் உரத்த குரலில் குற்றம் சாட்டியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? தமிழகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் கூட அவர் மீது இதே குற்றச்சாட்டை கூறினார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கேள்விகளுக்கு பதில் சொல்ல அவரை அழைப்பதற்கான நோட்டீஸ் கூட அனுப்பபடவில்லை. விசாரணை மற்றும் தண்டனைக்கான பேச்சுக்கே இடமில்லை. வேடிக்கை என்ன என்றால், பா.ஜ.க தலைவர் லஞ்சம் வாங்கியவர்களின் பெயர்களை வெளியிடுமாறு சோனியாவை கேட்டிருக்கிறார். இது திருடனிடம் கூட்டாக இருந்தவர்கள் பெயர்களை சொல்லும்படி கேட்பது போல இருக்கிறது. காங்கிரஸ் கட்சி கூட தனது தலைவர்கள் மீது களங்கம் இருந்தால் ஓட்டுமொத்த விசாரணையையும் இரண்டு மாதங்களில் முடிக்க மோடி அரசுக்கு சவால் விடுத்துள்ளது. ஆனால் அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

இந்த பின்னணியில் இந்த ஊழல் நமது அமைப்பு மற்றும் ஊழலை எதிர்கொள்வதில் அதன் உறுதி குறித்த கவலை தரும் கேள்விகள் எழுகின்றன.

1. முன்னணி அரசியல் கட்சிகள் உண்மையில் ஊழலை ஒழிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனவா? இதற்கான பதில் இல்லை என்பது தான். இது உண்மையில் அரசியல் எதிரிகள் மீதான ஆயுதமாகவே பயன்படுகிறது. தேர்தலின் போது இந்த விவகாரத்தை தேர்தல் ஆதாயத்திற்காக காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.க பயன்படுத்திக்கொண்டது. இதில் பா.ஜ.கவுக்கு அக்கறை இருந்திருந்தால் இத்தாலியில் நடைபெற்றது போல் இங்கும் விசாரணை நடந்து முடிந்து, ஊழல் செய்தவர்கள் சிறையில் இருந்திருப்பார்கள்.

2. ஊழல் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவைவையா? இதற்கான பதிலும் இல்லை என்பது தான். காங்கிரஸ் தவறிழைத்தது என்றால், பா.ஜ.க அகஸ்டா வெஸ்ட்லாண்டிற்கு சாதகமான ஹெலிகாப்டருக்கான அம்சங்களை மாற்றி அமைத்தது.

3. இந்த நிலைக்காக விசாரணை அமைப்புகளை குற்றம் சாட்டலாமா? இதற்கான பதிலும் முடியாது என்பது தான். நம்முடைய நாட்டில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க தேவையான அமைப்புச் சூழல் இல்லை என்பதை இந்த விவகாரம் உணர்த்துகிறது. விசாரணை அமைப்புகள் அரசியல் கட்சிகளின் கைப்பாவையாக இருக்கின்றன. எனவே சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவை குறை சொல்ல முடியாது. ஊழலால் ஆதாயம் பெறும் ஆட்சியில் உள்ளவர்களே இதற்கு பொறுப்பு.

4. இதற்கான தீர்வு என்ன? ஊழலை எதிர்த்து போராடுவது எப்படி? இதற்கான பதில் எளிமையானது. விசாரணை முறையாக நடைபெற விசாரணை அமைப்புகள் அரசின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். அவை சுயேட்சையாக செயல்பட அனுமதிக்கப்பட்டு, விசாரணை குறித்த காலத்தில் நிறைவடைய வேண்டும்.

5. இது நடைபெறும் சாத்தியம் இருக்கிறதா? இதற்கான பதிலும் இல்லை என்பது தான். அந்த இயக்கத்தின் போதுதான் ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் உருவாக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது. மிகுந்த நெருக்கடிக்கு பிறகு பலவீனமான லோக்பால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நியமனமும் செய்யப்படவில்லை. ஊழலை எதிர்ப்பதில் மோடி ஆர்வம் கொண்டிருந்தால் அவர் லோக்பால் நியமனங்களை மேற்கொண்டு அதை நிருபித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லையே!

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழலும் போபர்ஸ் வழியில் சென்று, எதுவுமே வெளியே வராமல் போகும் என நான் அஞ்சுகிறேன். குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவார்கள். மக்கள் பணம் முன்போல கொள்ளையடிக்கப்படும். இந்த நிலையை சீராக்க நமது அரசியல் சாசனம் வாயிலாக ஒரு மக்கள் புரட்சி நடைபெற வேண்டும். இது சாத்தியமா? மிகப்பெரிய கேள்வி இது. ஏனெனில் ஊழல் புற்றுநோய்க்கு நிரந்தர தீர்வு தேவை. கோஷங்களால் அதை ஒழிக்க முடியாது.

ஆக்கம்: அசுடோஷ் | தமிழில்: சைபர்சிம்மன்

(பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)

முந்தைய கட்டுரைகள்:

ஆம் அத்மியின் ‘ஒற்றை-இரட்டை’ வழிமுறை டெல்லியின் சுற்றுச்சூழலை காப்பாற்றுமா?

தொழில் என்பது உற்பத்தியே தவிர லாபம் அல்ல!