சென்னை மழை: நீர் தேங்கியுள்ள பகுதி விவரங்களை படத்துடன் மக்கள் பதிவிட உதவும் தளம்!

0

ஒவ்வொரு ஆண்டும் கடைசி இரு மாதங்களை கடப்பது சென்னைக்கு ஒரு சவாலாகவே இருக்கிறது. அதேபோல் இந்த வாரம் முழுவதும் மழை சென்னையை புரட்டிப்போடுகிறது. வெள்ள அபாயம் இல்லை என்றாலும் கூட பல புறநகர பகுதிகளில் மழை நீர் அளவிற்கு அதிகமாக தேங்கி இயல்பு வாழ்க்கையை அதிகம் பாதித்துள்ளது.

இந்த நிலையில், மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரி (MIT) riskmap.in என்னும் தளத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் மூலம் சென்னை மக்கள் தங்கள் தெருவிலோ அல்லது ஏதேனும் குறிப்பிட்ட சாலையில் தண்ணீர் தேங்கியிருந்தால், இந்த தளத்தில் பதிவிடலாம். இது மக்களுக்கு உடனுக்குடன் தகவல்களை தெரிந்து கொள்ளவும், போக்குவரத்தை எளிதாக்கவும் உதவும். எந்த சாலைகளை தவிர்க்கலாம் என்ற விழிப்புணர்வையும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தும்.

MIT அர்பன் ரிஸ்க் லாப் தயாரித்த ’RiskMap India’ வலைத்தளம் புதன்கிழமை அன்று அரசு சாரா அமைப்பான சிட்டிசன் நுகர்வோர் சிவிக் செயல் குழுவால் (CAG) வெளியிடப்பட்டது.

“வெள்ளத்தால் அல்லது தண்ணீர் அதிகம் தேங்கிய பகுதி  மக்கள் இந்த வலைதளத்திற்குள் சென்று தண்ணீர் தேங்கி இருக்கும் இடத்தையும், எத்தனை அடி உயரம் நீர் உள்ளது என்று குறிப்பிடலாம். நீர் தேங்கிய இடத்தின் புகைப்படத்தையும் அதில் பதிவிடலாம்,” என்கிறது (CAG)

வலைதள அடிப்படையிலான இந்த ஆப், தற்போது ஃபேஸ்புக், ட்விட்டர் அல்லது டெலிகிராம் போன்ற சமூக ஊடகத்தின் மூலம் மட்டுமே பதிவிட அனுமதிக்கிறது. தற்போது இந்த வலைதளத்தை ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைத்தளம் வைத்திருப்பவர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும்.

சமூக ஊடகத்துடன் இணைக்கப்பட்டால் அவர்கள் இடும் பதிவை சரிபார்க்க முடியும் என்கின்றனர். இதுவரை 200-க்கும் மேற்பட்ட பதிவுகள் வந்துள்ளது.

“பதிவிடப்பட்ட பாதிக்கப்பட்ட இடத்தின் புகைப்படத்தை இதில் பார்க்கலாம். தகவல்களை சரிபார்த்ததும், சென்னை நகராட்சிக்கு தகவலை தெரிவிக்கிறோம். மேலும் இதை ட்விட்டரில் பகிர்ந்து காவல்துறையை tag செய்கிறோம்” என்கிறார் பூர்ணிமா சந்திரன், ஆராய்ச்சியாளர், (CAG)

இருப்பினும் இந்த பிரச்சனை குறித்து மேற்கொண்ட தகவல்கள் ஏதும் சென்னை நகராட்சி இடம் இருந்து வருவதில்லை. பாதிக்கப்பட்ட இடத்திற்கு உதவி போனதா இல்லையா என்ற தகவலும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை.

“நகராட்சியுடன் இணைய முயல்கிறோம், ஆனால் மழையால் முடியவில்லை. இருப்பினும் வெள்ளிக்கிழமை அன்று நகராட்சியிடம் இருந்து அழைப்பு வந்தது. இந்த ஆப் அதிகம் பரவியுள்ளது, நாங்களும் பயன்படுத்துகிறோம் என தெரிவித்துள்ளனர்” என்றார் பூர்ணிமா.  

வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தில் மக்களுக்கு இது போன்ற தளங்கள் மிகவும் உதவியாக அமையும்.