அமெரிக்க நிதித்துறை பணியை விடுத்து நடிகர்களின் ஒப்பனைக் கலைஞர் ஆன சென்னை லலிதா ராஜ்!

0

இந்திய பெற்றோர்கள் தங்களது மகனுக்கோ அல்லது மகளுக்கோ எப்படிப்பட்ட வாழ்க்கை கிடைக்கவேண்டும் என விரும்புவார்களோ அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தார் லலிதா ராஜ். அமெரிக்காவில் ஒரு பிரபல பன்னாட்டு நிறுவனத்தில் கார்ப்பரேட் நிதித் துறையில் பணிபுரிந்து வந்தார். ஆனால் இப்படிப்பட்ட வாழ்க்கையைத் துறந்து மாற்று வேலையின்றி திடீரென இந்தியா திரும்பினார் லலிதா.

”என்னுடைய பணி வாழ்க்கையில் நான் திருப்தி அடையவில்லை. விசா பிரச்சனை காரணமாக அமெரிக்காவில் வேறு பணி வாய்ப்புகள் தேட முடியவில்லை,” என்றார் லலிதா. 

எனினும் அடுத்து எதில் ஈடுபடவேண்டும் என்கிற தீர்மானத்துடன் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அவ்வாறு ஈடுபாடு இல்லாத பணியைத் துறந்தபோதும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த தெளிவான முடிவு அவரிடம் இல்லை. 2010-ம் ஆண்டு இந்தியா திரும்பினார்.

நம்பிக்கையுடன் அதிகம் அறியாத துறையினுள் நுழைந்தார்

லலிதா; கணக்கியல் மற்றும் நிதிப்பிரிவில் படித்தபோதும் அவருக்கு ஃபேஷன் துறையிலேயே ஆர்வம் இருந்து வந்தது. சென்னை திரும்பியதும் ஃபேஷன் துறையில் செயல்படத் தீர்மானித்தார். அது எளிதான செயல் அல்ல. ஏனெனில் வெற்றிகரமான வாழ்க்கையை ஒதுக்கிவிட்டு இந்தத் துறையில் ஈடுபடுவதை சுற்றியிருப்பவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்கிற குழப்பம் ஏற்பட்டது. கதை சொல்வதில் ஆர்வம் இருந்த காரணத்தால் சிறிது காலம் குழந்தைகளுக்கு கதை சொல்லி வந்தார். எனினும் அவர் எதிர்பார்த்த அளவிலான திருப்தி அவருக்குக் கிடைக்கவில்லை. 

”எதிலும் திருப்தியடையாமல் ஃபேஷன் உலகில் நுழைந்து சிறப்பிக்கும் நோக்கத்துடன் மீண்டும் கார்ப்பரேட் துறைக்குத் திரும்பினேன்,” 

என்றார் லலிதா. 2011-2012-ம் ஆண்டில் துவங்கி கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு மேல் கார்ப்பரேட் பணியில் நீடித்தார்.

தனக்கான மாற்றத்தை நோக்கி

லலிதா யதேச்சையாக அவருக்கு அதீத ஆர்வம் இருந்த பகுதிக்குள் நுழைந்தார். மிகுந்த ரசனையுடன் நண்பர்களுக்கு சிறப்பு தருணங்களில் ஒப்பனை செய்வார். 

”பாரம்பரிய மேக் அப் கலைஞரிடம் செல்லத் தயங்கிய ஒரு தோழிக்கு மணப்பெண்ணுக்கு ஒப்பனை செய்தேன். அதற்காக எனக்கு அதிக பாராட்டுகள் கிடைத்தது,” என்றார் லலிதா. 

அதன் பிறகு மணப்பெண் ஒப்பனை செய்யக் கோரியும், போர்ட்ஃபோலியோ புகைப்படங்களுக்கான ஒப்பனைக்கும் விளம்பரத்திற்கும் நட்பு வட்டத்திலிருந்து பலர் அவரை அணுகினர்.

”பெற்றோரும் நண்பர்களும் ஒப்பனை செய்யும் திறன் இயற்கையிலேயே என்னிடம் இருப்பதாக நினைத்தனர். இந்தப் பிரிவில் நான் ஈடுபட என்னை சம்மதிக்கவைக்க அதிக பிரயத்தனப்பட்டனர்.” 

அவர்கள் ஊக்கமளித்ததால் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பணியை விடுத்து அதிகம் ஆராயாத இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தார் லலிதா.

2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் லண்டனில் ஒப்பனை சார்ந்த ஆறு மாத கால வகுப்பிற்கு விண்ணப்பித்தார். அழகு, ஃபேஷன், தியேட்டர் மற்றும் திரைப்பட ஒப்பனை, சிறப்பு தோற்றத்திற்கான ஒப்பனை உள்ளிட்டவை இதில் இடம்பெற்றிருந்தது. “அது ஒரு வியக்கத்தக்க அனுபவமாக இருந்தது. மீண்டும் பள்ளி நாட்களுக்கே சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்தியது,” என்று நினைவுகூர்ந்தார் லலிதா.

லண்டனில் இருந்து திரும்பிய ஒரு மாதத்திற்குள்ளாகவே லலிதா ஒரு நண்பரை சந்தித்தார். அவர் ஒரு திரைப்பட இயக்குனருக்காக ஒப்பனைக் கலைஞரை தேடிக்கொண்டிருந்தார். சில மணி நேரங்களுக்குள்ளாகவே அனைத்தும் பேசி முடிக்கப்பட்டது.

”அடுத்த நாள் அந்த இயக்குனரை சந்தித்து என்னுடைய பணியை அவரிடம் காட்டினேன். ஒரு மணி நேரத்தில் தலைமை ஒப்பனை கலைஞராக என்னுடைய முதல் திரைப்படம் கையெழுத்தானது. நம்பமுடியாத தருணமாக அது அமைந்தது,” 

என்றார் லலிதா. இது சாதாரண சாதனையல்ல. ஏனெனில் இந்தியத் திரைப்படத் துறை பெரும்பாலும் ஆண் ஆதிக்கம் நிறைந்த பிரிவாகும்.

செட்டில் சோதனை முறையில் ஒப்பனை செய்ய ஒரு தொலைதூரப் பகுதிக்கு படப்பிடிப்பிற்கு செல்லவேண்டியிருந்ததால் தேவையான பொருட்களை வாங்குவதற்குக்கூட அவருக்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை. “படத்திற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் படப்பிடிப்பிற்கும் இடையே மிகக்குறைவான நேரமே இருந்தது. ஆனால் செட்டில் இருந்த அனைவரும் ஆதரவாக இருந்தனர்,” என்று தனது முதல் திரைப்படமான ‘யாமிருக்க பயமேன்’ என்கிற திகில் நகைச்சுவை திரைப்படப் பணி குறித்து குறிப்பிட்டார்.

பொருத்தமான துறையைத் தேர்ந்தெடுத்தல்

அவர் பயின்ற ஒப்பனை பிரிவில் சிறப்புப்பாடமாக எஸ்எஃப்எக்ஸ் (SFX) இடம்பெற்றிருந்தது. இது வழக்கமான ஒப்பனை பயிற்சிகளைக் காட்டிலும் சிறப்பம்சம் பொருந்தியதாகும். இதற்கென குறிப்பிட்டத் திறன் அவசியம். அதாவது சிலிக்கான், ஜெலட்டின் போன்ற பொருட்கள் இந்த வகை ஒப்பனைக்கு பயன்படுத்தப்படும். அவரது திறன்களை மொத்தமாக பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு முதல் திரைப்படத்திலேயே கிடைத்தது.

துறையில் இருப்பவர்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தபோதும் அவரது பணி நிமித்தமாக தொடர்ந்து அதிகமானோருடன் ஒருங்கிணையவேண்டிய கட்டாயம் இருந்தது. “சமூக ஊடகங்களைக் காட்டிலும் ஒருவர் அடுத்தவருக்கு பரிந்துரை செய்வதன் மூலம் கிடைக்கும் அங்கீகாரமே சிறந்தது,” என்றார்.

திரைப்பட ஒப்பனைக் கலைஞராக மக்களின் தோற்றத்தை முழுமையாக மாற்றினாலும் இயற்கையான அழகே சிறந்தது என்கிறார் லலிதா. 

“என்னைப் பொருத்தவரை குறைவான ஒப்பனையே அதிகமாக விரும்பப்படும். மக்கள் வேறொருவரைப் போல காட்சியளிக்க விரும்பாமல் அவர்களது சுய தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒப்பனை செய்துகொள்வதே சிறந்தது.” 

ஃப்ரான்சிஸ்கோ நார்ஸ், மெக் க்ராத், பாபி ப்ரௌன் போன்றோரிடமிருந்தும் அவரது ஒப்பனைப் பள்ளியில் இருந்தும் லலிதாவிற்கு உந்துதல் கிடைத்தது. மற்ற பிரிவுகளைச் சேர்ந்த கலைஞர்களைப் போலவே தனது பணியில் தனித்துவமாக விளங்கவே விரும்புகிறார். 

”ஒவ்வொரு கலைஞருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். மற்றவர்களைப் போல செயல்பட முயற்சித்தால் அது தோல்வியில் மட்டுமே முடியும்,” என்றார்.

ஆர்வம் இருந்த துறையையே பணியாக மாற்றினார்

லலிதா ஒப்பனை செய்யும் நபரின் தோற்றத்தை அவர் மாற்றியதும் அந்த நபரிடம் காணப்படும் மகிழ்ச்சியானது அவரது ஆர்வத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. “இந்தப் பணியில் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி கிடைக்கிறது. நிதித்துறை சார்ந்த அனுபவம் தொழில் ரீதியாக உதவியது,” என்றார்.

பல முயற்சிகளுக்குப் பிறகு வெற்றிக்கான மந்திரத்தைக் கண்டறிந்தார் லலிதா. 

“உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அதில் தெளிவாக இருங்கள். அந்த இடத்தை சென்றடையத் தேவையான அனுபவங்களை வாழ்க்கை உங்களுக்குக் கொடுக்கும்.”

உங்களுக்கு ஒரு பிரிவில் ஆர்வம் உள்ளது. ஆனால் அது குறித்து அதிகம் ஆராயப்படவில்லை. அந்த பயம் காரணமாக உங்களுக்கு தயக்கம் ஏற்பட்டால் முதலில் அதில் பகுதி நேரமாக முயற்சிக்கலாம். அது உங்களுக்கு உற்சாகமளித்தால் நீங்கள் மாறலாம். இல்லையெனில் பணியின் எந்த அம்சம் உங்களைக் கவர்ந்துள்ளது என்பது குறித்து சிந்திக்கவும். நீங்கள் ஈடுபடும் பணியானது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கவேண்டும். பெயர், புகழ், கவர்ச்சி, பணம் போன்ற அம்சங்கள் உங்களைக் கவர்ந்திருக்குமானால் அது உங்களுக்கு ஏற்றதல்ல,” என்கிறார் இந்த இளம் மேக் அப் வல்லுனர்.

ஆங்கில கட்டுரையாளர் : அனிலா எஸ் கே