தமிழ் பற்றால் மதுரையில் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட ஜப்பான் தம்பதியர்கள்!

0

பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் மற்றும் தமிழ் கலாச்சாரத்தை நம் மக்கள் மறக்க, அயல் நாட்டவர் தூக்கிப் பிடிக்கின்றனர். ஜப்பானைச் சேர்ந்த தம்பதியர்கள் தமிழ் மீதும் தமிழ் கலாச்சாரம் மீதும் பற்றுக்கொண்டு மதுரையில் தமிழ் முறைப்படி திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.

சிஹாறு ஒபாத்தா மற்றும் யுடோ நினகா கடந்த ஏப்ரல் மாதம் ஜப்பானில் குறுகிய வட்டத்தோடு திருமணம் செய்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து சிஹாறுக்கு தமிழ் மீது கொண்ட பற்றினால் மதுரையில் அனைத்து சடங்குகளோடு கோலாகலமாக மீண்டும் திருமணம் செய்துக்கொண்டார். வரவேற்பு, திருமணம், நலங்கு என அனைத்தையும் செய்து முடித்தனர் இந்த ஜப்பான் தம்பதியர்.

ஜப்பானில், கல்லூரியில் மொழியியல் படித்த சிஹாறு தமிழையே தேர்ந்தெடுத்தார். தமிழை பற்றி அவர் அதிகம் படிக்க தமிழ் மீது அதீத பற்றும் அவருடன் தொற்றிக்கொண்டது. மதுரையில் திருமணம் முடிந்தவுடன் ஊடகத்திடம் தமிழில் பேசிய சிஹாறு,

“படிப்பிற்கு தமிழை தேர்ந்தெடுத்து தமிழ் மொழி பற்றி ஆராய்ச்சி செய்ய வந்த எனக்கு இந்த கலாச்சாரமும் இந்த நாடும் பிடித்து விட்டது,” என தெரிவித்தார் அழகிய தமிழில்.

ஜப்பானில் வசிக்கும் வினோதினி மற்றும் அவரது கணவர் வெங்கடேஷ் மதுரையில் சிஹாறுவிர்காக இந்த திருமணத்தை முழுவதுமாக ஏற்பாடு செய்துள்ளனர். தமிழ் முறைப்படி அனைத்து சம்பிரதாயங்களுடன் திருமணம் நடைபெற்றது. சிஹாறு பட்டுப்புடவையும், யுடோ வேஷ்டியும் அணிதிருந்தனர். அதுமட்டுமின்றி இந்த தம்பதியர்களின் உறவினர்களும் ஜப்பானில் இருந்து வந்து திருமணத்தில் கலந்து கொண்டனர்.

“இந்திய முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். அதனால் கலாச்சார மையமாக இருக்கும் மதுரையில் என் திருமணம் நடக்க வேண்டும் என முடிவு செய்தேன்...”

என மதுரையை தேர்ந்தெடுத்த காரணத்தை விளக்கினார் சிஹாறு.

பாரம்பரிய மஞ்சள் திருமண பத்திரிக்கையில் துவங்கி, காசி யாத்திரை, கண்ணியாதானம் என சகலத்தையும் சிறப்பாக செய்து முடித்தனர். திருமணம் முடிந்த கையுடன் குடும்பத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றனர். அதனை தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்வு நடந்தது.

திருமணத்தின் காணொளி, நன்றி: யூட்யூப்
திருமணத்தின் காணொளி, நன்றி: யூட்யூப்

Related Stories

Stories by Mahmoodha Nowshin