இந்தியர்கள் தங்கள் தாய்மொழியில் ஸ்மார்ட்போனை பயன்படுத்த உதவும் 'ஃபர்ஸ்ட் டச்'

0

இந்தியாவில் 22 பிரதான மொழிகள் இருக்கின்றன. 720 பேச்சு வழக்கு மொழிகள் இருக்கின்றன. எனவே வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்த தேசத்தை எந்த ஒரு மொழியும் பிணைத்திருப்பதாக சொல்ல முடியாது. ஆனாலும் என்ன, அறிவு, வெற்றி மற்றும் முன்னேற்றம் என பலவற்றுக்கான நுழைவுச்சீட்டாக கருதப்படும் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கான இடைமுகம் முழுவதும் ஆங்கிலத்தில் தானே இருக்கிறது. இந்திய மக்களில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் 60 சதவீதம் பேரில், குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்களே ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் முழு அனுபவத்தை பெறும் வகையில் அதை ஆங்கிலத்தில் சரளமாக பயன்படுத்தும் திறன் பெற்றவர்களாக இருக்கின்றனர்.

ராகேஷ் தேஷ்முக், ஆகாஷ் டோங்ரே மற்றும் சுதீர் பாங்ரம்பண்டி ஆகிய மூவரும் இந்தப் பிரச்சனையை கண்டுணர்ந்து இதற்கான தீர்வையும் உருவாக்கும் ஊக்கம் பெற்றனர். ஐஐடி பாம்பே பட்டதாரிகளான இந்த மூவரும், தங்கள் சீனியர்களில் பலர் தொழில்நுட்ப ஐடியாவை துரத்திச்சென்று வெற்றிகரமாக நிறுவனங்களை உருவாக்கியதை பார்த்து வியந்தவர்கள் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண தங்கள் திறனை பயன்படுத்தத் தீர்மானித்தனர். அதன் பயன் தான் "ஃபர்ஸ்ட் டச்" (Firstouch).

"இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனாளிகள் பலரும் ஆங்கிலம் மூலம் அதை பயன்படுத்தத் தடுமாறுவதையும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் உள்ளூர் மொழி சார்ந்த உதவி இல்லாதததையும் பார்த்த போது ஃபர்ஸ்ட் டச்சுக்கான எண்ணம் உண்டானது. இதுவே ஸ்மார்ட்போன்கள் மேலும் எளிமையாக வடிவமைக்கப்பட வேண்டும் என்றும், இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் உள்ளூர் மொழி உதவி இருக்க வேண்டும் என்றும் யோசிக்க வைத்தது” என்று ராகேஷ் விளக்குகிறார்.

ராகேஷ், ஃபர்ஸ்ட் டச் பின்னால் இருக்கும் மோ பர்ஸ்ட் சொல்யூஷன்ஸ் (MoFirst Solutions Ltd) நிறுவன இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓவாக உருவானார். ஆகாஷ் சி.ஓ.ஓவாகவும் சுதீர் சி.டி.ஓவாகவும் உள்ளனர்.

"ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி தேவைகள் இருப்பதாலும் அவற்றுக்கேற்ப தொழில்நுட்பச் சேவைகள் அமைய வேண்டும் என்பதாலும் நமது நாட்டிற்கு நிச்சயம் ஃபரஸ்ட் டச் சேவை தேவை. ஸ்மார்ட்போன் பயன்பாட்டு விகிதம் மேலும் அதிகரிக்காமல் இருக்க பலமொழிகளில் பயன்படுத்தும் வசதி இல்லாததே காரணம்” என்று மேலும் விளக்குகிறார் ராகேஷ்.

இது போன்ற தேவைகளை நிறைவேற்ற புதுமையான அம்சங்கள் கொண்ட சேவையை உருவாக்கினர். ஸ்வைப் செய்தால் மொழிமாற்றம் பெறுவது உள்ளிட்ட வசதிகளை இதன் மூலம் வழங்கினர். இதன் மூலம் பயனாளிகளில் ஆங்கிலத்தில் பெறும் குறுஞ்செய்தியை பத்து இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்து படிக்கலாம். இதைப் போலவே திரையில் ஸ்வைப் செய்வதன் மூலம் ஆங்கில உள்ளடக்கத்தை இந்திய மொழிகளில் மாற்றிக்கொள்ளலாம்.

ஃபர்ஸ்ட் டச்சின் மற்றொரு முக்கிய அம்சம் அது தரும் விசைப்பலைகள் வசதியாகும். இவற்றை 10 இந்திய மொழிகளில் பயன்படுத்தலாம். இதையும் ஸ்வைப் செய்வதன் முலமே மொழிபெயர்ப்புக்குப் பயன்படுத்தலாம்.

பல போன் தயாரிப்பு நிறுவனங்கள் 15 இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வாய்ப்பை அளித்தாலும் தொழில்நுட்ப பரிட்சயம் இல்லாதவர்களும் பயன்படுத்தும் வகையில் இதை எளிதாக்கி இருக்கிறது.

காப்புரிமை பெறப்பட்ட ஃபர்ச்ட் டச் இயங்கு தளம் ஆண்ட்ராய்டை அடிப்படையாக கொண்டது. குஜராத்தி, மராத்தி, கன்னடம், வங்காளம் உள்ளிட்ட 12 பிராந்திய மொழிகளில் பயன்படுத்தலாம். "ஃபர்ஸ்ட் டச் பிராந்திய மொழி இயங்கு தள வசதியை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய கருத்தாக்கத்திற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கிராமப்புறம் மற்றும் சிறிய நகரங்களில் உள்ள பயனாளிகளுக்கு அவர்கள் மொழியில் ஸ்மார்ட்போனை சாத்தியமாக்கி உள்ளதோடு உள்ளூர் மொழி சார்ந்த அனுபவத்தை வழங்குகிறது” என்கிறார் ராகேஷ்.

விரிவாக்கம் மற்றும் தங்கள் தொழில்நுட்பத்தை மார்க்கெட்டிங் செய்வதற்காக மைக்ரோமேக்சின் மொபைல் போன்கள் தலைவர் மற்றும் ஜென் மொபைல்ஸ் தலைமை நிர்வாகியாக இருந்த வைபவ் சாஸ்திரியை நிறுவனம் பணிக்கு அமர்த்திக்கொண்டது. ஸ்னாப்டீலின் குணால் பால், ரோகித் பன்சல், குவிக்கரின் பிரனாய் சுலேட், இன்மொபியின் நவீ திவாரி மற்றும் அமீத் குப்தா உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப பிரமுகர்கள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். நிறுவனம் மொழி வல்லுனர்களையும் தனது குழுவில் கொண்டிருக்கிறது. தொடர்ந்து தனது சேவையின் மொழி வசதியை அப்டேட் செய்து வருகிறது.

இந்த ஆண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் பயனாளிகள் எண்ணிக்கை 200 மில்லியனை கடந்து, உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக மாறும் என இமார்க்கெட்டர் ஆய்வு தெரிவிக்கிறது. இதில் 60 சதவீத பயனாளிகள் ஆங்கிலம் அல்லாத மொழி பேசாதவர்களாக இருப்பார்கள். ஃபர்ஸ்ட் டச் 14 வாரங்களிலேயே கிராமப்புற இந்தியாவில் பத்து லட்சம் முதல் முறை ஸ்மார்ட்போன் பயனாளிகளை சென்றடைந்துள்ளது. ஃபர்ஸ்ட் டச் போன்கள் மற்றும் மைக்ரோமேக்சுடன் ஒருங்கிணைப்பு மூலம் இது சாத்தியமாகியுள்ளது. இதற்கான உரிமக்கட்டணம், செயலி மூலமான வருமானம் ஆகியவை நிறுவனத்திற்கு சீரான வருவாயை அளிக்கிறது.

“வளரும் சந்தைகளில் பயனாளிகள் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் அடுத்த 500 மில்லியன் பயனாளிகள் தங்கள் மொழியில் இணையத்தை அணுக வைப்பதை இலக்காக கொண்டுள்ளோம். 2018 வாக்கில் 100 மில்லியன் பயனாளிகளை டிஜிட்டல் முறையில் இணைக்க விரும்புகிறோம்” என்கிறார் ராகேஷ்.

“இந்த கட்டத்தில், சேவை, தொழில்நுட்பம், மார்கெட்டிங் மற்றும் விற்பனை ஆகிய பிரிவுகளில் குழுக்களை நியமித்து விழ்ப்புணர்வை உண்டாக்கி, இயங்கு தளத்தில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம்” என்கிறார் ராகேஷ். ஃபர்ஸ்ட் டச் சமீபத்தல் வங்கதேசத்தில் செயல்பாடுகளை துவக்கியுள்ளது. தெற்காசிய சந்தைகளில் விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

ஆக்கம்: பிஞ்சால் ஷா | தமிழில்: சைபர்சிம்மன்