'பொண்டாட்டி தேவை'- வைரலாகி வரும் மாணவிகள் தயாரித்துள்ள யூட்யூப் வீடியோ!

5

நல்ல நிறம். நல்ல படிப்பு. நல்ல வேலை. நல்ல உயரம். நல்ல மண(ன)ம், நிறம், குணம் கொண்ட அழகிய மணப்பெண் தேவை!

இப்படிப்பட்ட விளம்பரங்களை பல இடங்களில் பார்த்திருப்போம்...

ஆனால் இப்போது இணையத்தில் வைரலாகிக்கொண்டிருக்கும் மேட்ரிமோனியல் விளம்பரத்தை கேலி செய்யும் “பி அவர் பொண்டாட்டி" எனும் பாடல்தான் பலரின் கவனத்தை ஈர்த்துவருகிறது.

அப்படி இந்த பாடலில் என்ன இருக்கிறது என்கிறீர்களா? ஒரு அம்மா தன் அழகான(!) மகனுக்கு வரன் தேடுகிறார். தன் குடும்பத்தைப்பற்றியும் மகனைப் பற்றியும் அடுக்குகிறார்.

நான் ரொம்ப நாளாக என் மகனுக்கு வரன் தேடிக்கொண்டிருக்கிறேன்...

என்களுக்கு பெரிய வீடு. இரண்டு பென்ஸ் கார். கூட்டு குடும்பம். MBA படிப்பு, ஆறடி உயரம், அம்மா செல்லம், ஷூ சைஸ் பத்.....து(!)... என தொடங்கும் இப்பாடலை ஐஐடி மாணவிகள் மூன்று பேர் தயாரித்து வெளியிட்டுள்ளனர். அவர்கள் இந்த வீடியோவை தங்களது கல்லூரி போட்டி ஒன்றுக்காக, பிரபல பாடகர் கார்லி ரே ஜெஸ்பெனின் 'Call Me Maybe' என்ற பாடலைப் போல கேலியும் கிண்டலுடன் தயாரித்து அதை யூட்யூபிலும் வெளியிட்டனர்.

அஸ்மிதா கோஷ், க்ருபா வர்கீஸ் மற்றும் அனுக்ரிபா இளங்கோ ஆகிய மூன்று மாணவிகள் இந்த வீடியோவை தயாரிக்கும் போது இது இவ்வளவு பிரபலமடையும் என நினைக்கவில்லை என பிரபல நாளிதழின் பேட்டியில் கூறியுள்ளனர். 

மாணவி க்ருபா அழகிய சேலை உடுத்தி, நகைகளோடு ஜொலித்தபடி ஒரு மகனின் தாயாராக இந்த வீடியோவில் நடித்துள்ளார். அவர் தனது மகனுக்கு ஏற்ற வரனை தேட, தங்களது எதிர்ப்பார்ப்பை நகைச்சுவையோடு ஆங்கிலத்தில் பாடுகிறார்...

வரப்போகும் மருமகள் எப்படி இருக்கவேண்டும் என்று விவரிக்கிறார் பாருங்கள். நிஜத்தில் மேட்ரிமோனியல் விளம்பரங்களில் நாம் பார்ப்பவற்றை மறைமுகமாக ஏளனப்படுத்தும் தொனி அவரின் பாடலில் தெரிகிறது. 

அவரது எதிர்பார்ப்பை கேளுங்க...

தக தக என மின்னும் நிறம். உயரமான ஒல்லியான தேகம்...

ஹோம்லியாக இருக்கவேண்டும்...

ஃபேஸ்புக் கூடாது...

ஷார்ட்ஸ் போட கூடாது...

பார்ட் டைம் வேலை செய்யலாம் 5 மணிக்குள் வீடு வந்து சேரவேண்டும்...

மகனுக்கு சாம்பார் வடை செய்து தரவேண்டும்...

இந்த கன்டிஷனுக்கு நீங்கள் பொருத்தமானவரா? உடனே போனை எடுங்க. டயல் பண்ணுங்க. உங்களோட ஃபோட்டோ, பயோடெட்டா கூடவே 4-5 சேம்பில் வட்டமான சப்பாத்தியும் அனுப்பிவைங்க. பையனோட அம்மா சப்பாத்தியின் நடுவில் காம்பஸ் வைத்து சுற்றுவாராம். அந்த சப்பாத்தியின் விட்டம், ஆரம், சுற்றளவு எல்லாவற்றையும் கணக்கிட்டு பார்ப்பாராம். சப்பாத்தி வட்ட வடிவில் இருக்கவேண்டுமாம். என்ன கொடுமை சார் இது?

நான் குறிப்பிட்ட தகுதிகள் இருந்தால் என்னை தொடர்பு கொண்டு பேசுங்கள் என்று கூறிவிட்டு, என் வீட்டுக்கு, என் மகனுக்கு பொண்டாட்டியாக வந்து எங்கள் குடும்பத்தில் ஒருவராக ஆகிவிட்டு உன் சுய வாழ்க்கையை இழந்திடு என்று ஒரு ஆழ்ந்த அர்த்தத்தை கூறி சிரித்துக்கொண்டே வீடியோவை முடிக்கிறார். 

ஆக்கம்: ஸ்ரீவித்யா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

உழவர்களின் உன்னத உழைப்பை பேசும் 4 நிமிட வீடியோ படைப்பு

'India Tomorrow'- பாலியல் தொழிலாளியை முன்வைத்து வளர்ச்சிப் பாதை காட்டும் குறும்படம்

தி ஜங்கிள் புக்: யாழினி எனும் சுட்டியின் சூப்பர் வீடியோ விமர்சனம்!