நீங்கள் விவசாயம் செய்யாமலே விவசாயிகளுக்கு ஆதரவளித்து லாபம் அடைய ஒருங்கிணைக்கும் ’I support farming’

3

பொறியியல் படித்து முடித்து மென்பொருள் நிறுவனத்தில் மனிதவள அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார் விஜயகுமார் மணி. விவசாய குடும்பத்திலிருந்து வந்ததால் இயல்பாகவே அவருக்கு விவசாயம் மீது ஒரு அளவில்லா மரியாதை உண்டு என்கிறார்.

”நான் எப்போதும் நினைப்பதுண்டு... விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு உதவிட வேண்டும் என்று ஆனால் ஆதற்கு ஏற்ற நேரம் அமையவில்லை,” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சென்ற வருடம் பாண்டிச்சேரியில் உள்ள தனது கிராமத்திற்கு சென்றபோது, முன்பை விட நிறைய பேர் விவசாயத்தை விட்டு வேறு வேலையை தேடி நகரத்திற்கு சென்றுள்ளதை, அங்கு ரியல் எஸ்டேட் ப்ரோகர்களால் ஆக்கிரமித்து இருக்கும் விவசாய நிலங்களைக் கண்டு அறிந்தேன், என்றார்.

ஒரு புறம் இந்த கொடுமை என்றால் இன்னோரு புறத்தில் விவசாயம் செய்ய முடியாமல் தத்தளிக்கும் விவசாயிகளைகளையும் கண்டுள்ளார் விஜயகுமார். இந்த நிலைமையை மாற்ற விரும்பினேன். எனது நண்பர்களிடம் குடும்பத்தினரிடம் விவாதித்தேன் இதற்கு மாற்று வழியாக என்ன செய்யலாம் என்று?

பிறகு தனது சகோதரர், சகோதரி உடன் இணைந்து ‘ஐ சப்போர்ட் ஃபார்மிங்’ ’I support farming’ என்று ஒரு குழுவை உருவாக்கினார். அந்த குழுவின் மூலம் ஏழை விவசாயிகளை (5 ஏக்கருக்குள் நிலம் வைத்து இருக்கும்) கண்டறிந்து அவர்கள் கிராமத்திற்கு சென்று அவர்களிடம் பேசி, விவசாயம் செய்யத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொடுத்து, (நெல், உரம், மருந்து போன்றவதற்றை) அவர்களுக்கு துணையாக அறுவடை செய்யும் வரை இருப்போம் என்றார் விஜய்குமார்.

பின்னர் அந்த பொருட்களை மூன்றாம் தரகர் மூலம் சந்தையில் விற்காமல் இவர்களே நேரடி சந்தையில் விற்றுக் கொடுக்கிறார்கள். அதில் பெரும் லாபத்தில், விவசாயிகளுக்கு செலவு செய்த பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு I support farming மீதம் உள்ள பணத்தை விவசாயிகளிடமே கொடுத்து விடுவது சிறப்பு.

”நாம் செலவு செய்யும் பணம் சரியான விவசாயிகளுக்கே சென்று அடைய வேண்டும் என்று மிக கவனமாக இருப்போம். அதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து விவசாயம் செய்ய முடியாமல் இருக்கும் விவசாயிகளை கண்டெடுத்து, அவர்களுக்கு விவசாயம் செய்ய தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து, இறுதி வரை அந்த குழு அவர்களோடு பயனிப்பர்.”

விவசாயிகளுக்கு முதலீடுகள் பெரும் வழிகள்

I support farming சில பெருநிறுவனங்கள், விவசாயத்தில் முதலீடு செய்ய விரும்பும் நபர்களுடன் இணைந்து இந்த சேவையை செய்து வருகிறது. முதலீடு செய்ய விரும்புபவர்கள் தங்களால் முடிந்த பணத்தை எங்களிடம் கொடுப்பர். பிறகு எங்கள் குழு மூலம் கண்டறியப்பட்ட விவசாயிகளுக்கு அனைத்து உதவிகளை செய்வோம்.

இவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் சில பெருநிறுவனங்கள் சில விவசாயிகளுக்கு ஸ்பான்சராக செயல்படுவர். முழுக்க முழுக்க அவர்களே விவசாயிகள் விவசாயம் செய்யும் செலவை ஏற்றுக்கொள்வார்கள். இரு தரப்பினருக்கு மத்தயஸ்தராக (mediator) I support farming செயல்படும். விவசாயிகளுக்கு என்னென்ன பொருட்கள் வாங்க செலவு செய்தார்கள் என்ற வரவு செலவு கணக்குகளை இரு தரப்பினரிடமும் ஒப்படைத்து விடுகின்றனர்.

பிறகு அடையும் லாபத்தில் சிறு தொகையையோ, பெருந்தொகையையோ ஸ்பான்சர் செய்த அனைவருக்கும் அவர்கள் தந்த தொகைக்கு எற்ப பிரித்து கொடுக்கப்படும்.

“மென்பொருள் நிறுவனங்களில் வேலைப்பார்க்கும் 70% சதவீத உழியர்கள் விவசாய குடும்பத்தில் இருந்து வந்த மூன்றாம் தலைமுறையினரே. அதனாலே விவசாயிகளுக்கு உதவ பெருமளவு ஐ.டி உழியர்கள் முன் வருகின்றனர்,” என்கிறார் விஜய்குமார்.

விவசாயம் செய்வது சுலபமல்ல. பயிர் போட்ட நாளிலிருந்து அறுவடை செய்யும் நாள் வரை, அதை குழந்தையைப் போல் பார்த்து கொள்ள வேண்டும், இல்லையெனில் நாம் ஏதிர்பார்க்கும் விளைச்சல் கிடைக்காது. தேவையான நேரத்தில் தேவைப்படும் மருந்து, போதுமான நீர் என நாம் ஒவ்வொரு நொடியும் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற மருந்துகள் பயிரை கொல்லும். கடின உழைப்பாலும் விடா முயற்சியாலும் தான் விவசாயம் செய்ய முடியும். அப்படி உழைக்கும் விவசாயிகள் பலர் பணம் இல்லாமல் விவசாயத்தை விட்டு விடுகிறனார். அதை தடுக்க தான் எங்கள் குழு உழைத்து வருகிறது.

சந்திக்கும் சவால்கள்

ஐ சப்போர்ட் ஃபார்மிங் குழுவினர், எல்லாவித விவசாயிகளுக்கும் உதவி வருகிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த வருடமும் இந்த வருடமும் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை. விவசாயிகள் பெரும் அளவிற்கு பாதித்து உள்ளனர். நிலத்தடி நீரும் விவசாயிகளுக்கு கை கொடுக்கவில்லை. இந்த குறைபாட்டை தீர்க்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் விஜயாகுமார் மணி.

”எங்களுக்கு பிரச்சினை என்பது முதலில் நாங்கள் தொடர்பு கொள்ளும் விவசாயிகளிடமே ஏற்படும். அவர்கள் எங்களை நம்பவே சில வார காலமாகும். அதன் பிறகு அங்கு இருக்கும் அரசியல்வாதிகளிடம் இருந்து மறைமுகமாக பிரச்சினைகள் வரும் அதை எல்லாம் சமாளித்து, விவசாயிகளுக்கு இதன் நன்மையை புரியவைத்து பணிகளை தொடங்குவோம்.”

இருப்பினும் இதுவரை நேரடியான பிரச்சனைகள் வந்தது இல்லை என்றார் விஜய்குமார். நாங்கள் தேர்ந்தெடுத்த விவசாயிகளின் நிலவளத்தை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற மருந்துகளை மட்டுமே பயன்படுத்துவோம். மேலும் அந்த கிராமத்து விவசாய அதிகாரியை மக்களிடையே நேரடியாக பேச வழிவகுப்போம் என்றார்.

சிடிஎஸ் துணைத்தலைவர் லஷ்மி நாராயணன், விவசாயத்துறையை சேர்ந்த முருகேசன், மணி குமார் (shrimp cultivation) அகியோரின் அறிவுரைப்படியே இவர்கள் குழு செயல்பட்டு வருகிறது. இதுவரை 70-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உதவி புரிந்துள்ளனர். இந்த பயணம் மேலும் தொடரும் எனக்கூறி விடைப்பெற்றுக்கொண்டார் இந்த சமூக அக்கறைக்கொண்ட இளைஞர்.