இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்க ரூ.7 கோடி மதிப்பிலான NIDHI–PRAYAS மையம் அமைக்க கொங்கு பொறியியல் கல்லூரி TBI தேர்வு!

0

கொங்கு பொறியியல் கல்லூரியில் செயல்படும் Technology Business Incubator (TBI), இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் NIDHI-PRAYAS திட்டத்தின் கீழ் வழிகாட்டி மையம் அமைக்க ரு.7 கோடி மானியம் அளிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதன் முதல் தவணையாக ரு..1.76 கோடி நிதியுதவி பெற்றுள்ளது. இந்தியாவில் இயங்கும் 100 TBI-களுள் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 10 மையங்களுள் கொங்கு பொறியியல் கல்லூரியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இளம் கண்டுபிடிப்பாளர் மற்றும் ஆர்வலர்களின் புதுமையான யோசனைகளை ஒரு முன்மாதிரியாக்க, நிதியுதவியுடன் கூடிய மையம் அமைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம். 

மத்திய அரசிடம் இருந்து கிடைத்துள்ள இம்மானியத்தை பற்றி TBI, கொங்கு பொறியியல் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் பி.எஸ்.கண்ணன் விவரிக்கையில்,

"முதல் 10 TBI மையத்தில் நாங்கள் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறோம். 100 விண்ணப்பதாரர்களில் எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐசிடி துறையில் மெட்ரோ நகரத்தில் அல்லாது இரண்டாம் கட்ட நகரத்தில் இயங்கும் எங்களின் கடந்த ஆண்டுகளின் பணிகளின் அடிப்படையில் தேர்வு செய்தது எங்களின் வளர்ச்சியை காட்டியுள்ளது,” என்றார். 

மத்திய அரசின் நிதியுதவி மற்றும் கொங்கு கல்லூரி உதவியுடன் கூட்டு முயற்சியாக நிறுவப்பட்ட TBI, கடந்த 13 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக பணியாற்றி வருகிறது. நவீன தொழில்நுட்பக் கருத்துக்களுக்கு வடிவம் கொடுத்து சந்தைப்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வது TBI-இன் நோக்கமாகும். இது அளிக்கும் வசதிகள் மூலம் இதுவரை 49 நவீன தொழில்முனைவோர் பயன் பெற்றுள்ளனர். அதில் 11 பேர் கொங்கு கல்லூரி முன்னாள் மாணவர்கள். அதில் 76 அதிநவீன மின்னணு உபகரணங்கள் டிசைன் மற்றும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 190 பயிற்சி வகுப்புகள் நடத்தி, 6293 மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் தொழில்முனைவோர்கள் பயன்பட்டுள்ளனர். 

எண்ணத்தை செயல்வடிவில் வடிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளை செய்து கொடுப்பதுடன், தொழில்முனைவோருக்கு தேவையான நிதி உதவியையும் குறைந்த வட்டியில் 5% TBI அளிக்கிறது. இதுவரை தொழில்முனைவோருக்கு 3.67 கோடி ரூபாய் கடனுதவி அளித்துள்ளது.  

TBI Nidhi-Prayas திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்

புதுமையான யோசனையை ஒரு முன்மாதிரியாக மாற்ற தேவைப்படும் உபகரணங்களை அமைக்கவும் வசதிகளை நிறுவவும் ரூ.1 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட Nidhi-Prayas திட்டத்தின் கீழ் இளம் கண்டுபிடிப்பாளர் மற்றும் ஆர்வலர்களின் புதுமையான யோசனைகளை ஒரு முன்மாதிரியாக மாற்ற அவர்களின் திட்டத்திற்கு ஏற்ப 5 ஆண்டுகளுக்கு 10 நபர்கள் என 50 நபர்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் அளிக்கப்படும். இதனை பயன்படுத்தி அவர்கள் 18 மாதங்களுக்குள் புது பொருளை வடிவமைக்கவேண்டும். இத்திட்டத்தின் கீழ் நிதி, தனிப்பட்ட கண்டுபிடிப்பாளர்கள் அல்லது ஒரு அணியின் சார்பாக முன்னணி விண்ணப்பதாரர் மற்றும் TBI-இல் தற்போதுள்ள தொழில்முனைவோர் ஆகியவர்களுக்கு அளிக்கப்படும். 

இளம் தொழில்முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும். புதிய கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் சொந்த நிதி அல்லது இணை முதலீடு மூலம் வணிக ரீதியாக மாற்ற தெளிவான செயல் திட்டம் உடையவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். விவசாயம், உற்பத்தி, சுகாதாரம், மாசு இல்லா தொழில்நுட்பம், சக்தி, தண்ணீர் மற்றும் இணைய சாதனம் போன்ற மற்ற தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

மாணவர்கள் தங்களின் நீண்டகால ஆராய்ச்சிக்கும், பேராசிரியர்கள் அல்லது கல்வியாளர்கள், கற்பித்தலில் ஈடுபட்டுள்ளவர்களும் மற்றும் இரண்டாம் முறை விண்ணப்பிப்பவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது. கல்வி ஆராய்ச்சி திட்டம் மற்றும் மென்பொருள் தயாரிப்புகள் இதில் விண்ணப்பிக்க முடியாது. 

இத்திட்டத்தின் கீழ் ஆதரவு பெறுபவர்கள் 18 மாதங்களுக்குள் கீழ் குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒன்றை சாதிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது:

* காப்புரிமை விண்ணப்பம் செய்வது

* தயாரித்த பொருளை வர்த்தகமாக்க பிறருடன் இணைந்து செயல்படுவது

* தானாகவே அந்த தயாரிப்பை வணிகம் செய்ய ஒரு தொடக்க நிறுவனம் அமைப்பது

* தொழிலை விரிவுபடுத்த மற்றவர்களிடம் இருந்து நிதி பெறுவது

கொங்கு பொறியியல் கல்லூரி TBI பின்னணி

அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் கொங்கு பொறியியல் கல்லூரி பல்துறைகள் கொண்டு சிறப்பாக இயங்கி வரும் கல்வி நிறுவனம். ஈரோடில் பெருந்துரையில் உள்ள இக்கல்லூரி ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு மாணவர்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. Technology Business Incubator (TBI) எனும் தொழில்நுட்ப அடைக்காக்கும் மையத்தை இக்கல்லூரி ஆகஸ்ட் மாதம் 2004-ம் ஆண்டு நிறுவியது. ரூ.3.95 கோடி செலவில் நிறுவப்பட்ட இம்மையத்துக்கு NSTEDB/DST/GoI ரூ.1.75 கோடி மானியத் தொகை வழங்கியுள்ளது. ஊரக தொழில்முனைவு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், அதில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் இந்த அடைக்காக்கும் மையம் வழி காட்டி வருகிறது.   

‘கருத்து முதல் வணிகமயமாக்கல் வரை’ (Concept to Commercialization) என்ற அடிப்படை நோக்கோடு செயல்பட்டு வரும் இம்மையம் எலக்ட்ரானிக்ஸ், ஐசிடி தொடர்பான தொழில்நுட்பம், எம்படட் சிஸ்டம்ஸ், டிஜிட்டல் சிக்னல் ப்ராசசிங், வயர்லெஸ் டெக்னாலஜி, IoT, அசெம்ப்ளி, டெஸ்டிங், மல்டிமீடியா என பலதுறைகளில் பணிகளை ஊக்குவிக்கிறது. இத்துறைகளில் பணிபுரியும் தொழில்முனைவோர்களின் ஐடியாக்களை செயல்வடிவம் கொடுத்து, நடைமுறைக்கு கொண்டுவர வழிகாட்டி வருகிறது. 

இந்தியாவில் பொறியியல் கண்டுபிடிப்புகளின் வருங்காலம் குறித்து விளக்கிய கண்ணன், அதன் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என்றும் ஸ்டார்ட்-அப் இந்தியா போன்ற பல மத்திய அரசின் திட்டங்கள் மூலம் ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் ஊக்குவிக்கப்படுகிறது என்றார்.

“மென்பொருள் தொடக்க நிறுவனங்களை போல் ஹார்ட்வேர் நிறுவனங்கள் குறைவாக இருந்தாலும், தற்போது அத்துறையும் மெல்ல வளர்ந்து வருகிறது. ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் ஹார்ட்வேர் ஸ்டார்ட்-அப்ஸ் வருங்காலத்தில் பிரகாசமாக இருக்கும் என்று நம்புகிறேன். இதுவே பொறியியல் துறையில் கண்டுபிடிப்புகளை இந்தியாவில் ஊக்குவிக்க உறுதுணையாக இருக்கும்.” 

இன்றைய இளைஞர்கள் தொழில்முனைவை நோக்கி சென்று கொண்டிருப்பது குறித்தும், பொறியியல் துறையில் இந்தியாவில் வளர்ச்சி பற்றியும் பேசிய கண்ணன், மாணவர்கள் தங்கள் தொழில்முனைவு பயணத்தை கல்லூரியில் இருக்கும் போது தொடங்குவது சிறப்பான நேரம் என்றார். 

“தங்களின் புதிய ஐடியாக்களை தொடங்க கல்லூரி ஒரு சிறந்த இடம். தகுதியான வழிகாட்டிகள், பேராசிரியர்கள் மற்றும் பல்துறை வல்லுனர்கள் கல்லூரி வளாகத்தில் இருப்பதால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கூடுதலாக நிதி வாய்ப்புகளும் தற்போது கல்லூரிகளால் செய்து தரப்படுகிறது. இளம் வயதில் தங்கள் எண்ணங்களை முயற்சிப்பதால் தவறுகள் செய்தாலும் அதை திருத்திக்கொண்டு செயல்பட நேரமும் வாய்ப்பும் கிடைக்கும்.”

மத்திய அரசின் நிதியுதவியுடன் கொங்கு பொறியியல் கல்லூரி கூட்டு முயற்சியோடு நிறுவியுள்ள இன்குபேட்டர் மையம் 13 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி, ஊரக தொல்முனைவோர் மற்றும் சிறு குறு தொழிற்சாலைகளுக்கு வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.   

இந்த திட்டத்தை பற்றிய முழு விவரங்களுக்கு:  TBI-KEC NIDHI PRAYAS