இந்துலேகா'வுக்கு 330 கோடி..!

0

'ஒரு பெயரில் என்ன இருக்கிறது..?' - இது வில்லியம் ஷேக்ஸ்பியர் ஒரு முறை எழுப்பிய கேள்வி.

ஆனால், தலசேரி மோசன்ஸ் நிறுவனத்திடம் கேட்டால் சொல்வார்கள் - மக்கள் மனதில் இலகுவாக பதியக்கூடிய, பொருளின் கருத்தை புரிய வைக்கக் கூடிய பொருத்தமான பெயர் வணிகத்தில் தவிர்க்க முடியாதது என்று. இதனை யதார்த்தம் ஆக்கும் விதமாக முன்னணி நிறுவனமான இந்துஸ்தான் யூனிலிவர் 'இந்துலேகா' தலைமுடி ஆயில் தயாரிக்கும் மோசன்ஸ் நிறுவனத்தை வாங்கியுள்ளது. அதுவும் 330 கோடி ரூபாய்க்கு. கேரளாவில் இந்த அளவுக்கு அதிக தொகைக்கு ஒரு நிறுவனம் விற்கப்படுவது இதுவே முதல் முறை என்கிறார்கள்..!

1976 - ல் தலசேரியை சேர்ந்த ஏ.சி .மூஸா தொடங்கிய மோசன்ஸ் நிறுவனம் தேங்காய் எண்ணெய் உற்ப்பத்தி, ஏற்றுமதி, பொறியியல், கட்டுமானம், பேக்கரி என்று பல துறைகளில் கால் பதித்தவர்கள்.

2009 ஆம் ஆண்டு ஹேர் ஆயில் உற்பத்தி தொடங்கும் போது அதற்கு பெயரிடுவது ஒரு பிரச்சனையாக இருந்திருக்கிறது. இறுதியில் தங்களது சொந்த ஊர் காரரான எழுத்தாளர் ஓ.சந்து மேனன் எழுதிய இந்துலேகா நாவல் மனதில் தோன்ற அந்த பெயரே இறுதி செய்யப்பட்டதாக கூறுகிறார், நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம்.பி.பயாஸ்.

1889-ம் ஆண்டு வெளியான அந்த இந்துலேகா நாவல் நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் தலைமுறைகள் தாண்டி கேரளாவில் பிரபலம். படித்த முற்போக்கு எண்ணம் கொண்ட அழகான 18 வயது நாயர் பெண்தான் அதன் நாயகி. அவளுடைய பெயர் கூந்தல் எண்ணெய்க்கும் சூட்டப்பட்டு இன்று அதுவும் பிரபலமடைந்துள்ளது. 

விற்பனை ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்..!

1994 - ல் ஆர்.கல்யாணராமன் என்கிற 'குட்நைட்' மோகன் உற்பத்தி செய்த 'குட்நைட்' கொசுவத்தியை கோத்ரேஜ் நிறுவனம் 126 கோடிக்கு வாங்கிய சம்பவம் கேரளாவையே அதிர வைத்த பிசினஸ். இப்போது, இதெல்லாம் சாதாரணமாகி விட்டது. வட இந்திய கேஷ் கிங் தலைமுடி ஆயிலை இமாமி நிறுவனம் 1651 கோடி ரூபாய்க்கு அண்மையில் வாங்கியுள்ளது.

ஹேர் ஆயில் மட்டுமல்லாது, ஷாம்பு, ஸ்கின் கேர், பேஸ் பேக் என்று பல அழகு பொருள்களை உற்பத்தி செய்துவரும் 'இந்துலேகா' பிராண்டுகளை அடுத்த ஒராண்டுக்கு தலசேரி தொழிற்சாலையிலேயே உற்பத்தி செய்ய இந்துஸ்தான் யூனிலிவர் முடிவு செய்துள்ளது. 

அகில இந்திய அளவில் 2017 ஆம் ஆண்டு உற்பத்தி தொடங்கும் போது இந்துலேகாவின் முதல் சொந்தக்காரரான மோசன்ஸ் நிறுவனத்துக்கு விற்பனையில் பத்து சதவீதம் ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கவும் ஒப்பந்தம் இடப்பட்டுள்ளதாம். ஒரு பொருளின் விற்பனையை உச்சத்துக்கு கொண்டு செல்ல தரம் மட்டுமே முதலீடு அல்ல பெயரும்தான்..!

மலையாளத்தில்: கோவிந்தன் நம்பூத்ரி | தமிழில்: ஜெனிட்டா