10 வயது சிஇஓ,12 வயது சிடிஓ… ஆச்சரியப்படுத்தும் குழந்தைகள்!

0

பத்து வயது குழந்தை, ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அதேப் போல் 12 வயதில், ஒருவர் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த சாதனையை கேரளாவைச் சேர்ந்த சகோதரர்கள் அபிஜித் பிரேம்ஜியும் (10 வயது) அமர்ஜித் பிரேம்ஜியும் (12 வயது) நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்த வயதிலேயே அவர்கள் தொழில் முனைவர் பயணத்தைத் தொடங்கி விட்டனர். டெல்லியில் நடந்த ஸ்டார்ட் அப் இந்தியா நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக இந்தக் குழந்தைகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

அபிஜித் பிரேம்ஜி(10), அமர்ஜித் பிரேம்ஜி(12)
அபிஜித் பிரேம்ஜி(10), அமர்ஜித் பிரேம்ஜி(12)

அவர்களுக்கு தொழில்முனைவராக வேண்டும் என்ற எண்ணம் 2015ல்தான் முளை விட்டது. ஸ்டார்ட் அப் இந்தியா பற்றி பிரதமர் நரேந்திரமோடி பேசியது அவர்களை ஈர்த்தது. அவர்கள் தங்களின் தந்தை பிரேம்ஜித் பிரபாகரனிடம் ஸ்டார்ட் அப் இந்தியா என்றால் என்ன அர்த்தம் என்று ஆர்வத்துடன் கேட்டனர். முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதத்தில் ஒரு தொழிலுக்கான யோசனையை உருவாக்குவதுதான் ஸ்டார்ட் அப் இந்தியா என்று விளக்கம் சொன்னார் பிரேம்ஜி.

இதைக் கேட்ட குழந்தைகளுக்கு ஒரு தொழிலுக்கான திட்டத்தை வகுக்க அதிக காலம் பிடிக்கவில்லை. விளையாட்டுப் பொருட்களுக்கான தொழில் ஒன்றைத் திட்டமிட்டனர். அதைப் பற்றி பெற்றோரிடம் சொன்னவுடன், அவர்களும் ஊக்கப்படுத்தினர். 'இன்டியன் ஹோம்மேட் டாய்ஸ்' (ஐஎச்டி) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இனிமேல் சீன விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யாதீர்கள். இந்தியாவில் தயாரிக்கப்படும் விளையாட்டுப் பொருட்களையே விற்பனை செய்யுங்கள் என அவர்கள் வலியுறுத்தினர்.

2022க்குள் 4 கோடி இந்திய இளைஞர்களை (இவர்களில் பாதிப்பேர் பள்ளிக் குழந்தைகள்) திறன் மிக்கவர்களாக வளர்க்க வேண்டும். மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, குளோபல் இந்தியா, ஸ்கில் இந்தியா, ட்ரீம் இந்தியா மற்றும் டிசைன் இந்தியா திட்டங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து ஸ்மார்ட் அப் இந்தியாவை நோக்கி நடை போட வேண்டும் என்பது இந்திய அரசின் திட்டம். இந்தத் திட்டத்தை மனதில் வைத்து செயல்படுகிறது குழந்தைச் சகோதரர்களின் ஐஎச்டி நிறுவனம்.

இந்த இளம் தொழில் முனைவர்களின் முயற்சிக்கு அவர்களின் பெற்றோர் பூரண ஒத்துழைப்பு அளிக்கின்றனர். அவர்களின் தந்தை பிரேம்ஜித், இந்தியாவில் விளையாட்டுப் பொருட்களின் இறக்குமதியை தமது ஐஎச்டி நிறுவனம் பெருமளவில் குறைக்க உதவும் எனக் கருதுகிறார். வெளிநாடுகளில் இருந்து அன்னியச் செலாவணியில் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள விளையாட்டு பொருட்கள் இந்தியாவில் இறக்குமதியாகின்றன. இதில் பிரதானமான இறக்குமதியாளர் சீனா. சீனாவின் தயாரிப்புகள் பல நேரங்களில் குழந்தைகளின் உடலைப் பாதிக்கக் கூடியவையாகவும் இருக்கின்றன. 

________________________________________________________________________

தொடர்பு கட்டுரைகள்:

உலகின் முதல் ஸ்மார்ட்-வாட்ச் நிறுவனம் நிறுவிய 19 வயது இளைஞர்!

________________________________________________________________________

பிரேம்ஜித் ஒரு எந்திரவியல் பொறியாளர். டிஜிட்டல் இந்தியா பிரசாரத்திற்கு அவர் செய்த பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு அவருக்கு பரிசு வழங்கியிருக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் புதுமையைக் கண்டுபிடிப்பதற்கான தகுதி உடையவர்கள்தான் என்று உறுதியான நம்பிக்கை கொண்டவர் பிரேம்ஜித். இன்றைய பொம்மை செய்பவர்கள் நாளைய தொழில்நுட்பக் கண்டுபிடிப்பாளர்களாக வருவார்கள் என்பது பிரேம்ஜித்தின் கருத்து.

தனது குழந்தைகள் முதன் முதலாக உருவாக்கிய விளையாட்டுப் பொருட்கள் பற்றிச் சொல்கிறார் பிரேம்ஜித். இரண்டு வருடங்களுக்கு முன் அமர்ஜித் தனது உடைந்து போன பொம்மை விமானத்தை சரி செய்வதற்கு ஒரு மோட்டாரைப் பயன்படுத்தினான்.

“உண்மையில் ஒரு பத்து வயது பையன் மோட்டாரில் இயங்கும் விளையாட்டுப் பொருள் ஒன்றை உருவாக்கியதைப் பார்த்து நான் உற்சாகத்தின் உச்சிக்கே சென்று விட்டேன்” என்கிறார் அவர்.

ஐஎச்டி நிறுவனத்தின் சிஇஓ அபிஜித், தங்களின் நிறுவனம் வெறுமனே ஒரு ஆன்லைன் ஸ்டோராக இருக்காது. குழந்தைகளின் படைப்புத் திறனுக்கான களமாக இருக்கும் என்கிறார். குழந்தைகள் கண்டுபிடிப்பாளர்களாக உருவாக ஊக்கப்படுத்துவதாகச் சொல்லும் அவர் தங்களின் நிறுவனம் ஒரு ‘ஸ்டார்ட் அப்’ அல்ல ‘ஸ்மார்ட் அப்’ என்கிறார்.

தங்களது இணையதளம், குழந்தைகள் கண்டுபிடிப்பாளர்களாக உருவாக ஊக்கப்படுத்தும் என்கிறார் பிரேம்ஜித். தற்போது விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக்கான தளத்தை தொடங்கவில்லை. எனினும் அப்படிச் செய்வீர்களா என்று நிறையப் பேர் விசாரிக்கின்றனர் என்று கூறும் பிரேம்ஜித், அந்தத் தளத்தின் மூலம் விற்பனை செய்வது பற்றியும் பரிசீலிப்போம் என்கிறார்.

விளையாட்டுப் பொருட்களைத் தயாரிப்பதற்கான பிளாஸ்டிக் சக்கரங்கள், எலக்ட்ரானிக் சர்க்யூட், கியர் பாக்ஸ், கனெக்டர் போன்ற உதிரிபாகங்களைத் தயாரித்து சுமார் 1000 நிறுவனங்களை ஏற்படுத்துவதற்கான வர்த்தக வாய்ப்பைப் பற்றி யோசிக்கிறது ஐஎச்டி என்கிறார் பிரேம்ஜித். அவற்றின் மூலம் குழந்தைகளுக்குத் தேவையான சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்காத விளையாட்டுப் பொருட்களை தயாரிப்பது அவரது திட்டம்.

இந்த விஷயத்தில் கல்வி நிறுவனங்கள் பெருமளவில் உதவ முடியும் என நம்புகிறார் அமர்ஜித். அவரது சகோதரர் அபிஜித், பள்ளிகளில் விளையாட்டுப் பொருள் செய்வதை மாணவர்களின் படைப்பாக்கத் திறனுக்கான கூடுதல் படிப்பாக கொண்டு வரலாம் என யோசனை தெரிவிக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருள் செய்வது பற்றிச் சொல்லிக் கொடுக்கப்பட்டால், அவர்கள் ரோபோடிக்சை பயன்படுத்தி அற்புதமான தொழில் நுட்பத்தை உருவாக்கும் அளவுக்கு வளர முடியும் என்கிறார் அவர். தனது தொழில்நுட்பம் சார்ந்த முன் முயற்சியை தனது பள்ளி நன்கு ஊக்கப்படுத்துகிறது என்கிறார். இந்தத் தொழிலில் வரும் லாபத்தின் ஒரு பகுதியை நாட்டில் உள்ள ஏழைக் குழந்தைகளின் கல்விக்குப் பயன்படுத்த வேண்டும் என பிரேம்ஜித்தும் அவரது குழந்தைகளும் விரும்புகின்றனர்.

ஆக்கம்: தௌசிஃப் ஆலம் | தமிழில்: சிவா தமிழ்ச் செல்வா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்இது போன்ற இளம் வயது மாணவர்களின் தொழில்முனைவு தொடர்பு கட்டுரைகள்:

16 வயது கோடிங் நிபுணர்: தானே கோதாரி!

மேப் மை ஷாப்’- சென்னை உள்ளூர் கடைகளை டிஜிட்டல் மயமாக்கும் செயலி!