’நடிகர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஸ்டார்ட் அப் தொடங்குவது போல்’- ரானா டகுபதி

“நாம் ஸ்டார்ட் அப் சூழலில் வாழ்கிறோம். நாங்கள் வாழ்க்கை முழுவதும் ஸ்டார்ட் அப்பில் ஈடுபடுகிறோம்,” என்று டெக்ஸ்பார்க்ஸ்2017-ல் நடிகர்களின் பணிசார்ந்த அணுகுமுறையை விவரித்தார் ரானா...

0

செப்டம்பர் 22-ம் தேதி டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வின் முதல் நாள் இறுதியில் யுவர் ஸ்டோரியின் நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரத்தா ஷர்மாவுடன் பிரபல நடிகரான ரானா தகுபதி உரையாடினார். அவருக்கு பலரிடமிருந்து காஃபிக்கான அழைப்புகளும் பரிசுகளும் வந்தது. நடிகர், தொழில்முனைவோர், ஆக்மெண்டட் ரியாலிட்டி (AR), விர்சுவல் ரியாலிட்டி (VR) ஆர்வலர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட ரானா தகுபதி தனது அடுத்த படத்தின் பணியைத் துவங்கியுள்ளார். இதனிடையில் தனது சமீபத்திய வென்சரான Kwan பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

”என்னைப் பற்றியும் என்னுடைய வாழ்க்கையைப் பற்றியும் நீங்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் பெரும்பாலான தகவல்கள் கிசுகிசு பகுதிகளிலிருந்தும் சிறுபத்திரிக்கைகளிலிருந்துமே பெறப்படுகிறது. சிறுபத்திரிக்கைகளில் என்னைப் பற்றி படிக்கும் தகவல்களை நம்பாதீர்கள்,” என்றார். 

இதைத்தாண்டி 32 வயதான இந்த நடிகர் மிகவும் தெளிவாக ஈடுபட்டுள்ள ஒரு விஷயம் கதை சொல்லுதல். தனது பணியே கதை சொல்லுவதுதான் என்று விவரிக்கிறார்.

கிசுகிசுக்களும் சிறுபத்திரிக்கைகளும் முக்கியம் என்று நினைக்கும் திரைப்படத் துறையினர் நிலைத்திருப்பதில்லை என்று விவரித்தார், ஆனால் இங்கே சரியான காரணத்துக்காக இருப்பவர்கள் நிலைத்திருப்பார்கள். நாங்கள் இங்கே கதை சொல்வதற்காக இருக்கிறோம்,” என்றார்.

கதையை சிறப்பாக சொல்லமுடியுமா?

தெலுங்கு திரைப்பட உலகில் பிரபலமான குடும்பத்திலிருந்து வந்தவர் ரானா. அவர் ஸ்பிரிட் மீடியா பி. லிமிடெட் என்கிற தனது விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனத்தை 12 வருடங்களுக்கு முன்பு துவங்கினார். இந்நிறுவனம் ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’, கமலஹாசன் நடித்த ‘தசாவதாரம்’ உள்ளிட்ட 80-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் அளித்துள்ளது. அதன் பிறகு AppStar அமைத்தார். அவரது சமீபத்திய வென்சர் Kwan.

திரைப்படத் தொழிலின் பரிணாம வளர்ச்சி குறித்து விவரிக்கையில் அரசர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் கலாச்சாரம் வளம் பெறவேண்டும் என்பதற்காக கலைஞர்களுக்கு அதிக பணம் கொடுக்கப்பட்டது. இப்போது கலைஞர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக உழைக்கின்றனர் என்றார்.

கலைஞர்கள் ஒன்றிணைந்து தொழில்நுட்பத்தின் உதவியுடன் சினிமா வாயிலாக சிறப்பான கதைகளை சொல்கின்றனர். “ஒவ்வொருவரும் கதை சொல்பவர்தான். ஒவ்வொருவரிடமும் பகிர்ந்துகொள்ள ஒரு கதை இருக்கும்,” என்றார் ரானா.

”கதை சொல்வதுதான் என்னுடைய பணி. திரைப்படம், வெப், தொலைக்காட்சி, அனிமேஷன், VR, AR ஆகியவற்றில் கதைகளைச் சொல்வேன். என்னுடைய கவனம் கதை சொல்வதில்தான் உள்ளது.”

விதியை நிர்ணயிக்கும் வெள்ளிக்கிழமை

நடிகர் என்கிற தனது பங்கை ஸ்டார்ட் அப் நிறுவனருடன் ஒப்பிடுகிறார் ரானா. நடிகர்கள் ஸ்டார்ட் அப்பில் ஈடுபடுவதை எப்போதும் நிறுத்திக்கொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வெளியாகும் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் இதற்கான சான்றாகும்.

பாகுபலி திரைப்படத்திற்கு நாங்கள் VR பயன்படுத்தினோம். அது ஒரு மிகச்சிறந்த வாழ்நாள் அனுபவத்தை எனக்கு வழங்கியது. ஆனால் இந்தத் தொழில்நுட்பம் விலையுயர்ந்தது. எனவே இந்த அனுபவத்தை எப்படி தினசரி வாழ்க்கையில் கொண்டுவர முடியும்? அப்போதுதான் AR-ஐ பயன்படுத்த ஹாலோகிராம் தொழில்நுட்பத்தையும் 3D-ஐயும் இணைக்கலாம் என்று சிந்தித்தோம். இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் ஸ்மார்ட்ஃபோன் உள்ளது. எனவே அதைப் பயன்படுத்தி ஏன் அனுபவத்தைப் பெறக்கூடாது,” என்று கேட்டார் ரானா.

பங்கேற்பாளர்களின் கேள்விகளை மிகவும் லாவகமாகவும் சுலபமாகவும் எதிர்கொண்டார். தொழில்நுட்பம், பாகுபலி திரைப்படத்தின் வெற்றி உள்ளிட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருத்தல் குறித்து குறிப்பிடுகையில், “அதுதான் என்னுடைய அலுவலகப் பணி,” என்றார்.

அதிகளவிலான நிலையற்ற தன்மை காணப்படும் இந்தத் துறையில் எவ்வாறு வளர்ச்சியடைவது? ஆனால் அனைவரும் விரும்பியே இதில் இணைந்துள்ளதாக குறிப்பிட்டார் ரானா. உலகம் முழுவதும் திரைப்படத் தொழில் ஐந்து சதவீத வெற்றி விகிதத்தை சந்தித்துள்ளது. ஒருவர் சிறந்த திரைப்பட தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இருக்கலாம். இருந்தும் பார்வையாளர் ஒருவரே திரைப்படத்தின் விதியை நிர்ணயிப்பவர்.

ஆனால் எப்படிப்பட்ட கதையை சொல்கிறீர்கள் என்பதும் அதை எதன் வாயிலாக சொல்கிறீர்கள் என்பதும்தான் மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. ஒருவர் திரைப்படத்தில் சிறப்பான கதையையும் AR வாயிலாக மோசமான கதையையும் சொல்லலாம். இறுதியில் நல்ல கதையே வெற்றியடையும்,” என்றார் ரானா.

’நோக்கத்தில் உறுதியாக இருந்தால் அனைத்தும் சாத்தியமே’

ரானா 2005-ம் ஆண்டு விஷுவல் எஃபெக்ட்ஸ் பகுதியில் களமிறங்கினார். அதன் பிறகு FX லேப்ஸில் கேமிங் பிரிவில் பணியாற்றினார். தற்போது AR மற்றும் VR பகுதியில் கவனம் செலுத்துகிறார். ஆனால் இன்று ஒரு தொழில்முனைவோராக முதலீட்டாளரை அணுகுகிறாரா என்று கேட்கையில்,

”இந்தப் பகுதியில் அதிக லாபத்தை எதிர்பார்க்க முடியாது. இது அதிகம் கண்டறியப்படாத ஒரு பகுதி. இந்த காரணங்களால் VC-க்கள் எங்களிடம் வருவதில்லை. கதை சொல்லுதல் ஒரு வடிவமைக்கப்பட்ட தொழில் அல்ல. VC-க்கள் இதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம். என்னால் இதை VC-க்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை.”

திரைப்படத்தை உருவாக்குவது என்பது கலையின் கூட்டு வடிவமாகும். அது ஒரு தனிநபரைச் சார்ந்ததல்ல. பாகுபலியில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பங்களிப்பு இருந்தது. இன்று அந்த திரைப்படம் சிறப்பான வரவேற்பைப் பெற்ற காரணத்தால் இத்திரைப்படம் பிரபலமாக பேசப்படுகிறது.

”பாகுபலி முதல் பாகம் முடியும் முன்பே எங்களுக்கு 195 கோடி ரூபாய் கடன் இருந்தது. யாருக்கும் ஊதியம் வழங்கவில்லை. எங்கள் வாழ்க்கையில் ஐந்து வருட காலத்தை இதில் செலவிட்டோம். எங்களுக்கு பணி இல்லை. அந்தத் திரைப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைக்காமல் போயிருந்தால் எங்களை எவ்வாறு நிலைநிறுத்திக்கொண்டிருப்போம் என்பது தெரியவில்லை. ஆனால் நாங்கள் கவலை கொள்ளவில்லை. ஏனெனில் இதுவரை யாரும் ஈடுபடாத பணியில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம் என்பது எங்களுக்குத் தெரியும். 

நோக்கத்தில் உறுதியாக இருந்ததால் மட்டுமே இந்தத் திரைப்படத்தின் வெற்றி சாத்தியமானது. அடிப்படையில் உறுதியாக இருப்பது எப்போதும் எளிதானதாகும். கதை சொல்பவர்களாக ஒரு ஸ்கிரிப்டையோ அல்லது கதையையோ நாங்கள் தேர்ந்தெடுக்கும்போது அதை மக்களுக்கு சொல்வது அவசியமா என்பதே நாங்கள் கவனிக்கும் முதல் விஷயமாகும். திரைப்படத்தில் இப்படி ஒரு கதை வெளியாவது நன்மை பயக்குமா என்பதிலும் கவனம் செலுத்துவோம். விமர்சகர்கள் குறித்து அவர் குறிப்பிடுகையில், 

”எதிர்மறையாக பேசுவோருக்கு செவி சாய்க்கக்கூடாது. மற்றவர்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது அவர்களுடைய பிரச்சனை. உங்களுடையதல்ல,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப்