தமிழகத்தின் 'அம்மா'- ஜெ. விட்டுச் சென்ற பெண்களுக்கான உத்வேகப் வழிகாட்டுதல்கள்! 

1

ஓலமிட்டு அழும் பெண்களுடனும் கலங்கிய கூட்டத்துடனும் மாநிலமே மீளாத்துயரக்கு தள்ளப்பட்டது. கடந்த ஆண்டு இதே தினம் தமிழ்நாடு அதன் சிங்கத்தை இழந்தது. பல நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதாவிற்கு  திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கவலைக்கிடமானார். அதை தொடர்ந்து அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.

’அம்மா’ என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் வாயிலும் வயிற்றிலும் அடித்தழும் பெருந்திரளான பெண்களையும், அதிர்ச்சியில் நிற்கதியாய் நிற்கும் கூட்டத்தையும் விடுத்து மாநிலத்தையே மீளாத்துயரில் விட்டுச்சென்றார்.

திரைப்பட கதாநாயகியாக இருந்தவர் ஆண்டுகள் செல்லச் செல்ல அரசியல்வாதியானார். ஒரு சிறந்த தலைவராக மற்ற பெண்களை ஊக்கப்படுத்தினார். கட்சியினருக்கும் ஆதரவாளர்களுக்கும் தாய்மையுள்ளம் கொண்ட கடவுளாகவே காட்சியளித்தார். அஇஅதிமுக உறுப்பினரான 37 வயது அனுஜா ஜெயலலிதாவை நினைவு கூறுகையில்,

”அவர் போராட்டங்களை எதிர்த்துச் சண்டையிடப் பிறந்த இரும்புப் பெண்மணி. நாட்டு மக்கள் அனைவராலும் ‘அம்மா’ என்று அழைக்கப்படும் புரட்சித்தலைவியான அவர், அன்பு நிறைந்த தாய்க்கான அனைத்து அம்சங்களும் கொண்டவர். தமிழகத்தை இந்த அளவிற்கு தரம் உயர்த்திய பெருமை துணிச்சலான பெண்மணியான இவரையே சாரும். இவரது வாழ்க்கை மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்றார். 

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி படிப்படியாக உயர்ந்த இவர் தனது திறமையாலும் கவர்ச்சியான தோற்றத்தாலும் வெள்ளித்திரையில் மிளிர்ந்தார். படிப்பில் சிறந்த மாணவியான இவர் சட்டம் படிக்க விரும்பினார். ஆனால் விதி வேறு திட்டமிட்டது. திரைப்படத்தில் தொடர்ந்து நடிக்க அவரது தாய் கட்டாயப்படுத்தினார். இருந்தும் இந்த முடிவிற்காக அவர் வருந்தவில்லை. திரையில் பல வேடங்களிட்டு நடித்ததுபோல தமிழக முதல்வராக நிஜ வாழ்வில் அவர் வேடம் தரித்தார். 

இந்தப் பயணம் பல பரபரப்பூட்டும் நிகழ்வுகளால் நிரம்பிய ஒரு நாடகம் போலவே அமைந்தது. திரைப்படங்களில் காட்சியளித்த பல திரைப்பட நட்சத்திரங்களை கடவுளை போல பாவிக்கும் சுபாவம் தமிழக மக்களிடையே எப்பொழுதும் இருந்த ஒன்று. அதே போன்ற ஒரு பிரம்மாண்ட பிம்பத்தை நிஜ வாழ்விலும் ஏற்படுத்தியவர் ஜெயலலிதா.  

கலைஞர் மற்றும் திருநங்கைகள் ஆர்வலரான கல்கி சுப்ரமணியம் ஜெயலலிதா பற்றி கூறுகையில், 

“அவரது மனோதிடம், திடநம்பிக்கை, போராட்டங்களை எதிர்கொள்ளும் தைரியம் போன்றவை மிகவும் அரிதான குணாதிசயமாகும். தலைமைப்பண்பில் ஒவ்வொரு பெண்ணுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்தார். ஒரு உண்மையான பெண்ணியவாதி, அழகான, தைரியமான புத்திசாலியான இவர் தனிமையில் இருந்தாலும் அரசியம் வாயிலாக மக்களுக்கு சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தார். சுயமாக போராடும் என்னைப் போன்றோருக்கு அவர் ஒரு உண்மையான முன்னுதாரணமாக இருந்து வந்தார்.”

அவரது இழப்பு ஈடு செய்யமுடியாதது. அடுத்த நூறாண்டுகளில் அவரைப் போன்ற ஒரு பெண் தலைவர் நமக்கு கிடைப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு இது ஒரு பெரும் இழப்பாகும். இதே போன்ற மனநிலை அன்னை தெரசா மற்றும் லேடி டயானா மறைந்தபோது எனக்கு ஏற்பட்டது, என்றார் கல்கி.

ஜெயலலிதா கடுமையானவர் என்பதை பல முறை நிரூபித்துள்ளார். மற்றவரை ஈர்க்கும் விஷயமே அவரது தைரியம்தான். அவரது தாய் தனியாக குடும்பத்தை நடத்தி இவரை வளர்த்தார். அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த அவர், புகழ்பெற்ற மூத்த நடிகரான எம்ஜிஆர் அறைக்குள் நுழையும்போது அனைவரும் எழுந்து நிற்கையில், அவர் மட்டும் அலட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து புத்தகத்தை  படித்துக்கொண்டிருப்பார். 

வயதுவந்த பிறகும் அரசியல் வாழ்க்கையையும் இதே தைரியத்துடன் தொடர்ந்து மேற்கொண்டார். எம்ஜிஆருடனான உறவாகட்டும், அவரது இறுதி ஊர்வலத்தின் போது எம்ஜிஆரின் மனைவி ஜானகியின் ஆதரவாளர்களால் தள்ளிவிடப்பட்டு ஒதுக்கிய சந்தர்ப்பம் ஆகட்டும் சிறிதளவும் அடங்கிச்செல்லாமல் தன்னை கடுமையானவராகவே வெளிப்படுத்திக் கொண்டார்.

இதே மனோபாவம்தான் அவரை மிகப்பெரிய ஸ்தானத்திற்கு உயரவைத்தது. 1989-ல் சட்டசபையில் கருணாநிதியின் பட்ஜெட் தாக்கலை எதிர்த்தபோது உடைகளைக் கிழித்தும் முடியைப் பற்றி இழுத்தும்  தவறாக நடத்தப்பட்டார். இது போன்ற நிகழ்வுகள் அவரை மேலும் உறுதியாக்கியது. 

தொழில்முனைவோர் மற்றும் க்ரியாடிவ் எஜுகேஷன்ஸ் நிறுவனரான ஜெ.ஜெயப்ரியா கூறுகையில், 

“முதலில் திரைப்படங்களில் நடித்து மக்களின் மனதைக் கவர்ந்தார். பிறகு மறைந்த எம்ஜிஆருடன் அரசியலில் நுழைந்தார். அதன் பின்னர் தனது கொள்கை முடிவுகளால் உயர்ந்த ஆற்றல் வாய்ந்தவராக வெளிப்படுத்திக்கொண்டார். அவரது அரசியல் எப்போதும் மக்களைச் சார்ந்ததாகவே இருந்தது. நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத செயல்களை செய்பவராகவே பெண்களுக்குத் தோன்றினார்.”

அம்மா உணவகம், உணவுப்பொருள், உப்பு, மின்சார சாதனங்கள், சத்திரங்கள் என எங்கும் நிறைந்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தார். எழுத்தாளர், தொழில்முனைவோர் மற்றும் லோக்பரித்ரன் கட்சியின் முன்னாள் மாநில பொது செயலாளருமான ஹேமாசந்திரன் ஜெயலலிதாவை இரண்டு முறை நேரில் சந்தித்துள்ளார். அவர் கூறுகையில், 

“அவரது தலைமைப்பண்பால் பெண்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இந்திராகாந்தி, சோனியாகாந்தி போன்றோருக்கு இருந்த அரசியல் பின்னணியில்லாமல், ஒரு சிறந்த பெண் தலைவராக உருவெடுத்தார். பெண்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கும்போது ஒரு வலிமையான பெண்ணான இவரையே பின்பற்றி பிரச்சனைகளை துணிந்து எதிர்கொள்கின்றனர்.”

அவரைச் சுற்றி அவர் உருவாக்கிய ப்ராண்டும், தாக்கத்தை ஏற்படுத்தியவர்களும் அவரது பண்புகளை முன்னோக்கி எடுத்துச்செல்வார்கள். அம்மா அழிவற்றவர், நீங்காமல் நினைவிலிருப்பவர், மதிப்பிற்குரியவர் என்பதை காலம்தான் சொல்லவேண்டும் என்கிறார்.

இந்த தருணத்தில் அவரது இழப்பையும் வருத்தத்தையும் உணரமுடிகிறது. பல பெண்களுக்கு உத்வேகத்தை அளித்து முன்மாதிரியாக இருந்தார். சென்னையைச் சேர்ந்த முன்னணி கல்வியாளரான மாலதி குமார் கூறுகையில், 

“இந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். நம்மிடமுள்ள தன்னம்பிக்கையை உணர வைத்துள்ளார். ஆணாதிக்க உலகில் ஒரு பெண் தனியாக சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளார்.” 

சூரியன் மறைந்து வெகுநேரமானாலும் தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் தொடர்ந்து தங்களை மேம்படுத்திக்கொள்வது குறித்து உணர்ந்துகொண்டே தான் இருப்பார்கள்.

Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Stories by Induja Ragunathan