போட்டோகிராபியை தேர்வு செய்த சென்னை பொறியாளர்கள்!

1

“சிறிய வயதில் பொம்மைகளை உடைப்பது எனக்குப் பிடிக்கும். அது எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம். உடைத்த பொம்மைகளை மீண்டும் ஒரு தேர்ந்த நிபுணரைப் போல ஒட்ட வைப்பதும் எனக்குப் பிடிக்கும். என்னைச் சுற்றி உள்ள ஒவ்வொன்றைப் பற்றியும் அறிந்து கொள்ள நான் ஆர்வமாக இருந்தது இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. எதைப்பார்த்தாலும் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பேன். ஒவ்வொரு பொருளும் எப்படி வேலை செய்கிறது என்று அறிந்து கொள்வது எனது அறிவை வளர்த்தது.” என்கிறார் சந்துரு பாரதி. சென்னையில் உள்ள ‘ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ்’ (Focuz Studios) நிறுவனர். திருமண புகைப்படங்கள் எடுக்கும் ஸ்டுடியோ அது. ஆனால் வழக்கமான திருமண புகைப்படங்கள் இல்லை. கேன்டிட் போட்டோகிராபி (candid photography) எனப்படும் செயற்கையாக போஸ் கொடுக்காமல் இயல்பு நிலை புகைப்படங்கள் எடுக்கும் ஸ்டுடியோ. சரண்ராஜ் அண்ணாமலை என்பவருடன் சேர்ந்து இந்த ஸ்டுடியோவை உருவாக்கியுள்ளார் சந்துரு பாரதி.

இயல்புநிலை புகைப்படங்களை எடுப்பதில் இருவருக்குமே ஆர்வம். இருவருமே இந்த விஷயத்தில் ஒரே பார்வையைக் கொண்டவர்கள். தங்களுக்குள் இது பற்றிப் பேசிக் கொண்டிருந்த போதுதான் அவர்கள் புகைப்படக் கலையில் அடியெடுத்து வைத்தனர். ஃபோக்கஸ் ஸ்டுடியோவின் பயணம் மிக நீண்டது. ஆரம்பத்தில் ஒரு திருமணத்திற்கு 15 ஆயிரம் கட்டணம் வசூலித்த ஸ்டுடியோ இன்றைக்கு 1 லட்சத்து 25 ஆயிரத்தில் இருந்து 15 லட்சம் வரையில் வசூலிக்கிறது. இந்த இரட்டையர்கள் இன்றைக்கு சென்னையின் சிறந்த இயல்பு புகைப்படக் கலைஞர்கள்.

சந்துருவின் பயணம்

சந்துரு ஒரு சாதாரண நடுத்தர குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தந்தை பிரகாசம் ராஜூ, ஒரு கார் மெக்கானிக். அம்மா தேன்மொழி இல்லத்தரசி. பத்தாம் வகுப்புப் படிக்கும் போதுதான் சந்துரு போட்டோஷாப்பைக் கண்டுபிடித்தார். “போட்டோஷாப் எனக்கு மிகவும் பிடிக்கும். போட்டோ வடிவமைப்பு, எடிட்டிங் என்று எல்லாவற்றையும் நானே சொந்தமாகக் கற்றுக் கொள்ள அதன் அடிப்படை பற்றித் தெரிந்து கொள்வதற்காக அது பற்றிய புத்தகங்களை வாங்கினேன். அன்பான நண்பன் ஒருவன் தனது கம்ப்யூட்டரைக் கொடுத்து உதவினான். மணிக்கணக்கில் அதில் உட்கார்ந்து பயிற்சி எடுத்தேன். நேரம் காலம் தெரியாமல் நான் கற்றுக் கொண்டதில் ஒரு நல்ல டிசைனராக மாறினேன்.” என்கிறார் சந்துரு

சேலத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார் சந்துரு. நிறைய பன்னாட்டு நிறுவனங்களில் (எம்என்சி) இருந்து வேலை வாய்ப்பு வந்தது. ஆனால் அவர் தன்னிடம் இருக்கும் படைப்பார்வத்தை கார்ப்பரெட் உலகத்திற்கு காவு கொடுக்க விரும்பவில்லை. டிஜிட்டல் கம்ப்யூட்டர் அனிமேஷனைத் தேர்வு செய்தார். ஒரு வழக்கமான போட்டோ ஸ்டுடியோவில் போட்டோஷாப் டிசைனராக சேர்ந்தார். அதுதான் அவரது முதல் வேலை.

அதன்பிறகு மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மீடியா வொர்க்ஸ் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஆர்ட்டிஸ்ட்டாக வேலை கிடைத்தது. “எனது பேகைத் தூக்கிக் கொண்டு, மும்பைக்கு கிளம்பினேன். அந்தப் புதிய வேலையில் வெகு சுவாரஸ்யமான அனுபவங்கள் எல்லாம் எனக்குக் கிடைத்தன. மாதாமாதம் ஒரு கணிசமான வருமானம் வர ஆரம்பித்தது. எங்கள் குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியை கொஞ்சம் கொஞ்சமாகப் போக்குவதற்கு அது உதவியது. இந்த நேரத்தில் புகைப்படக்கலை மீதிருந்த எனது ஆர்வமும் வளர்ந்தது” என்று விவரிக்கிறார் சந்துரு.

கடைசியாக தனக்கு உண்மையில் எதில் ஆர்வம் என்பதை சந்துரு கண்டறிந்தார். வேலையை விட்டு விட்டு ஒரு ஸ்டுடியோவை ஆரம்பித்தார். இயல்பான கலை நயமிக்க திருமண புகைப்படங்களை எடுக்கும் ஸ்டுடியோ. “வேலையை விட வேண்டும் என்ற தைரியம் திடீரென்று ஒரு கணத்தில் தோன்றியதுதான். முதலாளி பதவி என்னை இதமான புன்னகையுடன் அதே சமயம் ஒரு இறுக்கமான பட்ஜெட்டுடன் ஆரத் தழுவி வரவேற்றது.” என்கிறார். தொழிலைத் தொடங்கியவுடன் முதலில் கிடைத்த வாய்ப்பு நண்பனின் திருமணம். லைட், கலர், ஆங்கிள் என்று போட்டோகிராபி பற்றி பயிற்சி எடுப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது அந்தத் திருமணம்.

போக்கஸ் ஸ்டுடியோஸ் குழு
போக்கஸ் ஸ்டுடியோஸ் குழு

சரண்ராஜின் போட்டோகிராபி காதல்

சரண்ராஜ் பயணம் சற்றே மாறுபட்டது. இவர் ஒரு எலக்ட்ரானிக் என்ஜினியர். அவரது நண்பர் டிஎஸ்எல்ஆர் கேமரா வாங்கிய போதுதான் போட்டோகிராபி மீது சரண்ராஜூக்கு ஆர்வம் வந்தது. “போகிற போக்கில் ஏற்பட்ட அந்த ஆர்வம் பிறகு ஒரு வெறியாகவே மாறிவிட்டது. அதில் கிடைத்த சந்தோஷத்திற்காவே நானே சொந்தமாக போட்டோகிராபி கற்றுக் கொண்டேன். விதவிதமான கேமராக்கள் பற்றித் தெரிந்து கொண்டேன். போட்டோ எடிட்டிங் சாஃப்ட்வேரிலும் நானே சொந்தமாகப் பயிற்சி எடுத்துக் கொண்டேன்.” என்கிறார் சரண்ராஜ். அவரது தோழி ஒருத்தியின் திருமணத்தில் ஒரு சில படங்களை எடுத்த போதுதான் போட்டோகிராபியில் நுழைந்து விட்டோம் என்று அவருக்குத் தெரிந்தது. ஒன்றைத் தொட்டு ஒன்று தொடர்ந்து கடைசியாக இந்த நண்பர்கள் ஃபோக்கஸ் ஸ்டுடியோவை தொடங்கினர்.

இவர்கள் இப்போது வரையில் பல்வேறு விதமான கலாச்சராம் கொண்டவர்களின் திருமணங்களை தங்களது புகைப்படங்களில் பதிவு செய்துள்ளனர். அவர்களது வேலை வெளிநாட்டிற்கும் அவர்களை கூட்டிச் சென்றது. பாரீஸ், லண்டன், பாங்காங், சிங்கப்பூர் எல்லாம் சென்று திருமணங்களைப் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். சந்தோஷமான வாடிக்கையாளர்கள்தான் எங்களது நம்பிக்கை. தரத்தில் சமரசம் செய்து கொள்ளவே மாட்டோம். “போட்டோகிராபி ஒரு கலை. எங்கள் சோதனை முயற்சிகளுக்கு நாங்கள் பெரும் மதிப்பளிக்கிறோம்” என்கிறார் சந்துரு.

ஃபோக்கஸ் ஸ்டுடியோ உருவானது

சந்தையில் நாங்கள்தான் பெஸ்ட் என்று சொல்லுமளவுக்கு நல்ல பெயர் வாங்கி வைத்திருக்கிறோம் என்கிறார் சந்துரு. போட்டோ எடுத்தற்குப் பிறகு இவர்கள் செய்யும் எடிட்டிங் வேலை தனித்துவமானது. அதற்கென அவ்வப்போது சந்தைக்கு வரும் புத்தம் புதிய சாப்ட்வேரில் இருந்து உபகரணங்கள் வரை அத்தனையும் வாங்கி வைத்து விடுவார்கள். “ஆரம்பிக்கும் போது எங்களுக்கென்று இணைய தளம் எதுவும் இல்லை. இப்போதும் எங்களுக்கு வரும் ஆர்டர்கள் எல்லாம் வாய்மொழி மூலம் வருவதுதான். மிக நீண்ட பயணம் செய்து இந்த இடத்தை அடைந்திருக்கிறோம். இப்போது சென்னையில் உள்ள மிகச் சிறந்த மூன்று திருமண போட்டோகிராபர்களில் எங்கள் நிறுவனமும் ஒன்று. எங்களது வேலை குறித்து வாடிக்கையாளர்கள் சொல்லும் கருத்துக்களும் அவர்கள் தரும் பாராட்டுகளும் எங்களை ஊக்கப்படுத்துகின்றன. எங்கள் வர்த்தகத்தை மேலும் வளர்ப்பதற்கான புதிய வழிகளைச் சிந்திக்கத் தூண்டுகின்றன.” என்கிறார் சந்துரு.

போக்கஸ் ஸ்டுடியோவின் திருமண போட்டோ
போக்கஸ் ஸ்டுடியோவின் திருமண போட்டோ

இயல்பான கலை நயமிக்க திருமண போட்டோ என்ற கருத்தாக்கம் இந்தியாவிற்குப் புதிது. போஸ் கொடுக்காமல் சாதாரணமாக இருங்கள் என்று மக்களுக்கு சொல்லிப் புரிய வைப்பது ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது, சந்துருவும் சரண்ராஜும் எதிர்நீச்சல் போட வேண்டியிருந்தது.

இப்போது நிலைமையே வேறு. இதுவரையில் இவர்கள் 150 திருமணங்களைப் புகைப்படம் எடுத்துள்ளனர். “எங்கள் டீம் சின்னதுதான். பேரார்வம் கொண்ட 10 பேர் கொண்ட குழு அது. ஆனால் எங்கள் சோதனைக் கூடத்தில் இருந்து வெளிவரும் படைப்பு உலகத் தரம் வாய்ந்தது” என பெருமை பொங்கக் கூறுகிறார் சந்துரு.

இணையதள முகவர்: Focuz Studios