வீட்டை விற்று முதலீடு செய்த அம்பிகாபதி: சென்னையின் முதல் கால் டாக்சி 'ஃபாஸ்ட் ட்ராக்' இன் வியத்தகு பயணம்!

4

உபெர், ஓலா, மேரு என இப்போது பல நிறுவனங்கள் கால்டாக்சி சந்தையை சென்னையில் பிரித்துக் கொண்டாலும், சென்னையில் முதன் முதலில் கால்டாக்சி தொழிலை ஆரம்பித்தவர்கள் ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனமே. இன்றும் தனது நிரந்தர வாடிக்கையாளர்களால் அசைக்க முடியாத சந்தையை வைத்துள்ளது. அதற்குக் காரணம் அந்த நிறுவனத்தின் ஆரம்ப கால செயல்பாடுகள். 2000 ஆம் ஆண்டில், ஃபாஸ்ட் ட்ராக் கால் டாக்சி நிறுவனத்தை ஆரம்பித்தவர் சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ரெட்சன்.சி.அம்பிகாபதி.

இப்போது நூறு கோடிக்கும் அதிகமான சந்தை மதிப்பை வைத்துள்ளது ஃபாஸ்ட் ட்ராக். ஆனால் தொடக்க முதலீட்டுக்கு தனது வீட்டை அடமானம் வைத்தேன் என்கிறார் அம்பிகாபதி. டாக்சி சந்தையில் தாங்கள் நிலையான இடத்தை பிடித்தது எப்படி? போட்டிகளை சமாளிக்க அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பன பல விஷயங்களை தமிழ் யுவர்ஸ்டோரியுடன் நடத்திய நேர்காணலில் அம்பிகாபதி பகிர்ந்து கொண்டார்.

"இந்தத் துறை எதிர்காலத்தில் வளரும் என்கிற நம்பிக்கை இருந்தது. சென்னையில் பிறந்து வளர்ந்தவன் நான். கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே சுய தொழில் முயற்சிகளில் இறங்கியிருக்கிறேன். அதில் ஓரளவு வருமானம் கிடைக்கும். அதைக் கொண்டுதான் எனது கல்லூரி செலவுகளை சமாளிப்பேன்,"

என்று தனது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். 

ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனர் அம்பிகாபதி
ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனர் அம்பிகாபதி

தொடக்கம்

எனது தொழில் முயற்சிகளில் எனக்கு அடையாளமாக நின்றது வீடியோ கேசட்டுகள் விற்பனை கடைதான். பரவலாக எல்லோரது வீடுகளிலும் டிவி வந்த காலத்தில் வீடியோ டெக் கேசட்டுகள்தான் ஒரே பொழுதுபோக்கு. வீடியோ டெக் வாங்க வசதி இருந்தாலும், ஒவ்வொரு படத்துக்கும் கேசட்டுகள் வாங்கி அடுக்க முடியாதே.. இதனால் வாடகை கேசட்டுகள் மிகப் பெரிய வரவேற்பை பெற்றன. கல்லூரி படிக்கும்போதே ஆரம்பித்த தொழில் என்பதால் கல்லூரி முடித்ததும், வாடகை இடத்தில் சிறிய அளவில் 'ரெட்சன்' என்கிற பெயரில் வீடியோ கேசட் வாடகை கடை தொடங்கினேன். ரெட்சன் என்கிற எனது கடை பெயரே எனது அடையாளமானதும் இப்படித்தான்.

அடுத்த சில வருடங்களில் வீடியோ டெக் வழக்கொழிந்து கேபிள் டிவி தொழில்நுட்பம் வளரத்தொடங்கியது. வீடியோ கேசட் வாடகைக்கு எடுத்து வந்தவர்கள் கேபிள் டிவிக்கு மாறியதால் நானும் தொழில் மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் கேபிள் டிவி தொடங்க முதலீடு கிடையாது. இதற்கு வங்கியில் கடனும் கிடைக்காது. கேபிள் டிவி கருவிகள், ஒயர்கள் என பெரிய தொகை முதலீடு தேவைப்பட்டது. இதனால் எனது கடையின் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் முதலீடு திரட்டலாம் என்கிற யோசனை வந்தது. வாடிக்கையாளர்களிடம் திரட்டப்படும் முதலீட்டை வைத்து கேபிள் டிவி தொடங்குவது. மாதா மாதம் கேபிள் கட்டணத்தில் கழித்துக் கொள்வது. இந்த எனது யோசனையை பல வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொண்டு முன்பணம் கொடுத்து உற்சாகப் படுத்தினர். இப்படி திரட்டிய முதலீட்டைக் கொண்டு நுங்கம்பாக்கம், சூளைமேடு பகுதிகளில் கேபிள் டிவி தொழிலில் இறங்கினேன். 

கால்டாக்சி தொழிலில் இறங்குவதற்கு முன்புவரை கேபிள் டிவியில் முழுமையாக கவனம் செலுத்தினேன்.

கால் டாக்சி தொழில் தொடங்கும் எண்ணம்

2000 ஆண்டு வாக்கில் பெங்களூருக்கு ஒரு வேலையாக சென்றிருந்தேன். அப்போதுதான் அங்கு கால்டாக்சி தொழிலை சிலர் மேற்கொண்டிருந்த விவரம் தெரிந்தது. அதுபோல ஏன் சென்னையில் நாம் தொடங்கக்கூடாது என்று யோசனை எழுந்தது. டிராவல்ஸ் நிறுவனங்கள் பல இருந்தாலும் அங்கு நான் பார்த்த டாக்சி தொழில் புதுமையாக இருந்தது. சென்னை திரும்பியதும் நண்பர்களிடன் இது பற்றி பேசினேன். அவர்களும் உற்சாகம் கொடுத்தனர். ஆனால் முதலீட்டுக்கு என்ன செய்வது. 

சென்னை போன்ற பெரிய நகரத்தில் போன் செய்தால் டாக்சி வரும் என்று கூறுகிறோம் என்றால் அதிகமான டாக்சி கையில் இருக்க வேண்டும். அதற்கு அதிக முதலீடு தேவைப்படும். இதற்காக நுங்கம்பாக்கத்தில் இருந்த எங்களது பூர்வீக வீட்டை விற்று முதலீட்டை எடுக்க முடிவு செய்தேன். ரிஸ்க் எடுக்கிறேன் என்று தெரிந்தும் எனது பாகத்தை விற்க வீட்டில் அனுமதி கொடுத்தனர். 

கிடைத்த தொகையை வைத்துக் கொண்டு முதற்கட்டமாக 50 கார்களை வங்கிக் கடன் மூலம் வாங்கினேன். நிறுவனத்துக்கு 'ஃபாஸ்ட் ட்ராக்' (Fast Track) என்று பெயர் வைத்தேன். டிவியில் விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு வசதியில்லை. இதனால் போஸ்டர்கள் துண்டு சீட்டுகள் மூலம் ஒவ்வொரு வீடாகச் சென்று விளக்கி போன் நம்பர் கொடுப்போம். இப்படித்தான் சென்னையில் எங்களது மார்கெட்டிங் முயற்சி இருந்தது. ஆனால் ஆறு மாதங்களில் மிகப் பெரிய நஷ்டம். எதிர்பார்த்த அளவுக்கு சவாரி இல்லை, வாகனங்களுக்கு தவணை கட்ட முடியவில்லை. நிர்வாக செலவுகள் என பல நெருக்கடிகள். பண நஷ்டத்திலிருந்து மீள முடியவில்லை என்றால் வேறு எந்த தொழிலும் பண்ண முடியாது என்கிற நிலைமையில், நிர்வாகத்தை மட்டும் வைத்துக் கொண்டு வாகனங்களை ஓட்டுநர்கள் பொறுப்பில் விடலாம் என திட்டமிட்டேன். 

அதாவது வாகனத்தை ஓட்டுநர்களுக்கு சொந்தமாக்கி விடுவது. மாதா மாதம் தவணையை அவர்களே கட்டுவது. தவணை முடிந்ததும் வாகனம் அவருக்கு சொந்தமாகி விடும். அவர்கள் எந்தெந்த ஏரியாவில் இருக்கிறார்களோ அங்கிருந்தே சவாரி ஏற்றிக் கொள்வது. இதற்கேற்ப வாடிக்கையாளர் எந்த ஏரியாவிலிருந்து போன் செய்தாலும், அந்த ஏரியாவில் டிரைவர் இருப்பார். இந்த திட்டம் நல்ல பலனை தந்தது. ஓட்டுநர்கள் அவர்களே அடுத்தடுத்து கார்களை வாங்கி எங்களுடன் இணைத்துக் கொண்டனர். ஒரு வாகனம் வைத்துள்ளவர் தனியாக தொழில் செய்ய முடியாது. 

எங்களுடன் இணைத்துக் கொண்டால் நாங்கள் சவாரி தருகிறோம். இதற்கு எங்களுக்கு புக்கிங் கட்டணம் மட்டும் கொடுத்தால் போதும் என அடுத்த திட்டத்தையும் அறிவித்தேன். இதன் மூலம் இரண்டாண்டுகளில் சுமார் 600 வாகனங்கள் எங்கள் நிறுவனத்தில் இணைந்தது. அதற்கடுத்து வாகன உரிமையாளர்கள் வாகனத்தை எங்களது நிறுவனத்தில் இணைத்தால் நாங்களே டிரைவர் நியமித்து ஓட்டுகிறோம் என்று அறிவித்தேன். இதுவும் நல்ல பலன் கொடுத்தது. இந்த திட்டத்தின் மூலம் ஓட்டுநர்களுக்கு மிகப் பெரிய வேலை வாய்ப்பை உருவாக்க முடிந்தது.

பட உதவி: chennainews.com
பட உதவி: chennainews.com

வளர்ச்சி மற்றும் போட்டி

இப்படியாக சென்னையில் கால்டாக்சி என்றால் ஃபாஸ்ட் ட்ராக்தான் என்கிற மிகப் பெரிய நெட்வொர்க்கை விரிவாக்க முடிந்தது. ஒவ்வொரு வீடாக துண்டு பிரசுரம், போன் நம்பர் என விநியோகித்து உருவாக்கிய சந்தை. சென்னைக்கு அடுத்து கோவை, மதுரை திருச்சி, திருநெல்வேலி, வேலூர் என தமிழ்நாட்டிலும், பெங்களூர், ஹைதராபாத், விசாகப்பட்டினம் என தென்னிந்தியாவிலும் விரிவாக்கம் செய்துள்ளோம்.

இப்போது இந்த மார்க்கெட்டை பகிர்ந்து கொள்ள பல நிறுவனங்கள் போட்டி போட்டாலும், இந்த சந்தையை சென்னையில் நாங்கள்தான் முதலில் உருவாக்கினோம் என்பதில் பெருமிதப்படுகிறோம். வாடிக்கையாளர்களுக்கு ஓட்டுநர்களுக்கும் தேவையில்லாத கவர்ச்சி வாக்குறுதிகளை கொடுத்து குழப்புவதில்லை. இப்போதும் சரிபாதி சந்தையை கையில் வைத்துள்ளோம் என்றால் அதற்குக் காரணம் ஓட்டுநர்களை உரிமையாளர்கள் என்கிற நிலைக்கு உயர்த்தும் எங்களது திட்டங்கள்தான். ஆரம்பத்தில் ஒரு கார் வைத்து ஓட்டிய ஓட்டுநர்கள் பலரும் இப்போது பத்து கார்களுக்கு உரிமையாளர்களாக வளர்ந்துள்ளனர். இது போன்ற ஓட்டுநர்கள்தான் எனது பலம். அவர்களையும் சேர்த்துதான் எனது வெற்றி அடங்கியுள்ளது என்கிறார்.

சென்னையின் வாகன அடையாளங்களின் ஒன்றாக ஃபாஸ்ட் ட்ராக் வளர்ந்துள்ளதற்கு பின்னே சென்னை மைந்தர்களின் உழைப்பு உள்ளது. இதை உணர வேண்டும் என்பதுதான் எனது ஆவல் என்று நமக்கு விடைக் கொடுத்தார் ரெட்சன்.சி.அம்பிகாபதி.  

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

பாரம்பரிய சத்துணவு வகைகளை 'மன்னா' மூலம் உயிரூட்டிய ஐசக் நாசர்!