வெள்ளி வென்ற இந்திய பெண்கள் கபடி அணி: தங்கத்தை கைப்பற்றியது ஈரான்!

0

வெள்ளிகிழமை இந்தோனேசியா, ஜகர்தாவில் நடைப்பெற்ற பெண்கள் கபடி இறுதிச் சுற்றில் இந்திய பெண்கள் அணி ஈரானிடம் தோற்று தங்கத்தை நூலிழையில் தவறவிட்டு வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 18வது ஆசிய விளையாட்டின் கபடி இறுதிச் சுற்று இன்று நடைப்பெற்றது, இதில் எதிர்கொண்ட இந்தியா மற்றும் ஈரான் அணி மிக விறுவிறுப்பாக விளையாடி 24-27 புள்ளிகளில் முடித்தனர். 27 புள்ளிகள் பெற்று ஈரான் இந்தியாவை வீழ்த்தி இந்தியாவின் ஹாட்ரிக் தங்கத்தை பறித்தது.

இந்திய கபடி அணி; பட உதவி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
இந்திய கபடி அணி; பட உதவி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஆசியப்போட்டி கபடியில் இதுவரை தோல்வியே சந்திக்காத இந்திய பெண்கள் அணி 2010 மற்றும் 2014 நடந்த போட்டிகளில் இருமுறையும் தங்கம் வென்றிருந்தது. அதனால் மூன்றாவது தங்கம் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த நிலையில் ஈரான் அணி அபாரமாக விளையாடி வென்றது.

இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனையான பாயல் சௌத்ரி மற்றும் சோனாலி ஷிங்காட் சிறப்பாக ஆடி இந்தியாவுக்கு புள்ளிகளை சேர்த்ததாள் இந்திய அணி 7-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

மிகவும் திறமையான ஈரான் வீராங்கனை அசாத் சைதிசிஹாபிடி இந்திய அணிக்கு ஆபத்தாக இருந்தநிலையில், இந்திய பெண்கள் அணி மிக நுணுக்கமாக விளையாடி அவரை வெளியேற்றியது.

அடுத்ததாக ரைட் சென்ற இந்திய வீராங்கனை ரந்தீப் கௌர் வெற்றிகரமாக முடிக்கவில்லை, இருப்பினும் மீண்டும் களம் இறங்கிய ரந்தீப் அபாரமாக விளையாடி 13-8 என்று புள்ளிகளை உயர்த்தினார்.

இந்நிலையில் முதல் பாதி இறுதியில் ஈரான் அணியில் இருந்து மீண்டும் ரைட் வந்த அசாத் இந்திய அணியின் ரித்து, மன்ப்ரீத் மற்றும் கேப்டன் பாயலை அவுட் செய்து வெளியேற்றினார். இதனால் ஈரான் புள்ளிகள் உயர்ந்தாலும், 13-11 என்று முதல் பாதியில் இந்தியா முன்னிலை வகித்தது. 

அதனை தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஈரான் தொடர்ந்து 6 புள்ளிகள் பெற்று 17-13 என்று இந்தியாவை பின்னுக்கு தள்ளியது.

ஈரான் அணியின் வெற்றி; பட உதவி: தி ஹிந்து
ஈரான் அணியின் வெற்றி; பட உதவி: தி ஹிந்து

கடைசி இரண்டு நிமிடத்தில் சாக்ஷி குமாரி இந்திய அணிக்கு 2 புள்ளிகளை சேர்த்து 24 புள்ளிகளாக அதிகரித்தார். ஆனால் ஈரான் 3 புள்ளிகள் முன்னிலை பெற்று வெற்றிப்பெற்றது.

இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி குழு தங்கம் இன்றி வீடு திரும்புவது இதுவே முதல் முறையாகும்

கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின் | தகவல் உதவி: NDTV விளையாட்டு

Related Stories

Stories by YS TEAM TAMIL