ஆரோக்கியம், இயற்கை என சுற்றுச் சூழலுக்கு உகந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும் நகரவாசி!

0

இது வாணி மூர்த்தி எழுதியுள்ள கட்டுரை. இவர் பெங்களூரில் வாழும் சுற்றுச்சூழல் ஆர்வலர். கழிவு மேலாண்மையில் வல்லுனரான இவர் பலருக்கு முன் உதாரணமாக திகழ்கிறார். 

நகர்புறங்கள் வளர்ச்சி காரணமாக கழிவுகள் நவீன நகர்புற வாழ்க்கையின் ஒரு அடையாளமாகவே மாறிவிட்டது.

பூமியில் வசிக்கும் ஒரு குடிமகனாக நான் இயற்கையின் ஒவ்வொரு அம்சத்துடனும் ஒன்றியிருக்கிறேன். இயற்கை எவ்வாறு நான் உண்ணும் உணவு வாயிலாகவும் நான் சுவாசிக்கும் காற்றின் மூலமாகவும் நான் குடிக்கும் தண்ணீரின் வாயிலாகவும் என்னுடைய ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அதே போல சுற்றுச்சூழலின் ஆரோக்கியமும் என்னுடைய நேர்மறையான பங்களிப்பை வெகுவாகச் சார்ந்துள்ளது. 

இந்த சுழற்சியே நான் இயற்கையை பாதுகாக்கவேண்டும் என்றும் என்னுடைய உடலை பராமரிக்கவேண்டும் என்றும் உந்துதலளிக்கிறது. நமது அன்றாட வாழ்க்கையின் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்துகொள்வதில் இருந்தே அனைத்தும் துவங்குகிறது.

நமது பழக்கங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து அதிகம் கற்றறிந்து நமது அன்றாட வாழ்க்கைமுறை குறித்த தகவல்கள் சார்ந்து நாம் தீர்மானிக்கலாம். 

நகர்புற வாழ்க்கையில் அன்றாடம் உற்பத்தியாகும் பெரும்பாலான கழிவுகள் நகர்புறத்திற்கு வெளியே இருக்கும் நிலப்பரப்புகளில் குப்பைகளாக நிரப்பப்படுகிறது. இதனால் இந்த நிலப்பரப்புகளில் நச்சுக்கள் அதிகரித்து மண், தண்ணீர், காற்று என இந்தப் பகுதிகளைச் சுற்றியுள்ள அனைத்தும் மாசுபடுகிறது. இதனால் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. அசுத்தமான தண்ணீராலும் இந்தப் பகுதிகளில் விளையும் காய்கறிகளை உண்பதாலும் நமக்கும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

ஆரோக்கியமான மண்ணில் உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. மண்ணிற்கும் நமது உடலிற்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய அதிகளவு ரசாயனங்களும் பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்படும் இடங்களிலேயே விளைக்கப்படுகிறது. என்னைப் பொருத்தவரை பூமியின் ஆரோக்கியமும் என்னுடைய ஆரோக்கியமும் ஒன்றோடொன்று தொடர்புடையது.

கழிவுகளற்ற நிலை என்றால் என்ன? இது சாத்தியமா?

என்னைப் பொருத்தவரை குப்பைகள் கொட்டப்படும் நிலப்பரப்பிற்கு எந்தவித கழிவுகளையும் அனுப்பாமல் இருப்பதே கழிவுகளற்ற நிலை. என்னால் உருவாகும் கழிவிற்கு நான் தான் பொறுப்பேற்கவேண்டும் என்பதே இதன் அடிப்படை கொள்கையாகும். ஒவ்வொரு நாளும் நாம் உருவாக்கும் கழிவுகளை குறைப்பதுதான் இந்த அணுகுமுறையின் அடிப்படையாகும். 

இன்றைய நகர்புற வாழ்க்கையில் சௌகரியம் என்கிற பெயரில் நம்மில் பலர் ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியும் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். இதை மாற்றுவது முக்கியமானதாகும். இந்தப் போக்கை மாற்ற நாம் ஒவ்வொரு நாளும் சின்னச் சின்ன நடவடிக்கைகளை மேற்கொண்டாலே போதுமானதாகும்.

நாம் ஒவ்வொருவரும் பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கியெறியக்கூடிய பொருட்களைத் தவிர்க்க சில பொருட்களை கையில் வைத்திருப்போம் என உறுதிமொழி எடுப்போம்.

1) பேக் செய்யப்பட்ட குடிநீருக்கு பதிலாக ஸ்டீல் தண்ணீர் பாட்டிலை வீட்டிலிருந்து எடுத்துச் செல்லவும்.

2) ப்ளாஸ்டிக் பைகளை மறுத்துவிட்டு துணிப்பையை எடுத்துச் செல்லவும்

3) ப்ளாஸ்டிக் ஸ்ட்ராக்களைத் தவிர்க்கவும்

4) ஸ்பூன், டம்ப்ளர், தட்டு, துணி நேப்கின் உள்ளிட்ட கட்லெரி பொருட்களை எடுத்துச்சென்றால் பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கியெறியும் பொருட்களைத் தவிர்க்கலாம்.

இவற்றைப் பின்பற்றுவது எனக்கு பழக்கமாகிவிட்டது. என்னுடைய பர்ஸ் அல்லது சாவியை மறக்காமல் எடுத்துச் செல்வதுபோல மறு பயன்பாட்டிற்கு உகந்த பொருட்களை மறக்காமல் எடுத்துச் செல்கிறேன்.

தனிநபராக நாம் பின்பற்றும் இத்தகைய நடவடிக்கைகளை நமது குடும்பம் மற்றும் சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றால் அது கழிவுகளற்ற நிலையை உண்டாக்குவதற்கு வழிவகுக்கும். திருமண நிகழ்வு உள்ளிட்ட கொண்டாட்டங்கள், பண்டிகைகள் என ஒவ்வொரு முறை மக்கள் ஒன்றுகூடும்போதும் பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கியெறியக்கூடிய பொருட்களுக்கு பதிலாக மறுபயன்பாட்டிற்கு உகந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்த திட்டமிடலாம்.

ப்ளாஸ்டிக், தெர்மாகோல், மறுசுழற்சிக்கு உட்படுத்தமுடியாத அலங்காரப்பொருட்கள், பரிசுப்பொருட்கள், தாம்பூலங்கள் போன்றவற்றையும் தவிர்க்கலாம். கழிவுகளற்ற நிலையை ஏற்படுத்த நீங்கள் திட்டமிடும்போது சில கேள்விகளை மனதில் கேட்டுக்கொள்ளலாம். நாம் பயன்படுத்தும் பொருள் மக்கி உரமாகுமா? அதை மறுசுழற்சி செய்ய இயலுமா? இந்த கேள்விகளுக்கான விடை ’இல்லை’ என்றால் அந்தப் பொருட்களை தவிர்க்கவேண்டும்.

நிலப்பரப்புகளில் கொட்டப்படும் அசுத்தமான சானிட்டரி கழிவுகளைக் குறைக்க சுற்றுச்சூழலுக்கு உகந்த மாதவிடாய் சிறந்த வழியாகும். துணியாலான பேட்கள், மாதவிடாயின்போது பயன்படுத்தப்படும் கப்கள் போன்ற மாற்றுப்பொருட்கள் ஆரோக்கியமான மாதவிடாயை உறுதி செய்யும்.

பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கியெறியக்கூடிய கழிவுகளைக் குறைத்த பிறகு மீதமிருக்கும் கழிவுகள் மூன்று வகையாக பிரிக்கப்படவேண்டும். 

நகர்புறங்களில் 2Bin1Bag என்பது ஒரு எளிமையான முறையாகும். இதில் வெவ்வேறு நிறத்திலான தொட்டிகளில் கழிவுகள் வகைப்படுத்தப்படும். ஒவ்வொரு நாளும் உருவாகும் கழிவுகளில் 60 சதவீதம் சமையலறையிலேயே உருவாகிறது. இவை உரமாகக்கூடியது. வீட்டிலேயே உரமாக்கும் எளிமையான வழிகளைப் பின்பற்றுவது கழிவுகள் நிலப்பரப்பில் நிரப்பப்படுவதைக் குறைக்கும். இதனால் உணவுப்பொருட்களை விளைவிக்க ஆரோக்கியமான மண்ணும் உருவாகும். ’ஸ்வச்சாகிரஹா’ போன்ற பிரச்சாரங்கள் நகர்புறங்களில் உருவாகும் பிரச்சனைகளைக் குறைத்து பசுமையாக்கும் வழிமுறைகளைப் புரிந்துகொள்ள உதவும்.

நமகு உடலின் ஊட்டச்சத்துக்கு பாதுகாப்பான உணவு அவசியம்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளை நோக்கிய என்னுடைய பயணத்தில் ரசாயனங்களற்ற உணவை உற்பத்தி செய்யும் உள்ளூர் விவசாயிகளை ஆதரிக்கவேண்டியது அவசியம் என்பதை அறிந்தேன். என்னுடைய குடும்பத்திற்கு வாரந்தோறும் தேவைப்படும் காய்கறிகள், பழங்கள், மளிகைபொருட்கள் போன்றவற்றிற்கு சமூகத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் விவசாய முயற்சிக்கு ஆதரவளித்தேன்.

ரசாயனங்களற்ற சுத்தப்படுத்தும் பொருட்கள், பராமரிப்புப் பொருட்கள் போன்றவற்றிற்கு மாறி என்னுடைய அன்றாட வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டேன்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கைமுறையை பின்பற்றும் ஒவ்வொரு நாளும் சுற்றுச்சூழலுக்கு நேர்மறையான வகையில் பங்களித்தது குறித்து பெருமை கொள்கிறேன். இவ்வாறு மாறுவதற்கான வாய்ப்பு நம் ஒவ்வொருக்கும் கிடைக்கும்போது எதற்காக காத்திருக்கவேண்டும்?

ஆங்கில கட்டுரையாளர் : வாணி மூர்த்தி | தமிழில் : ஸ்ரீவித்யா