ஆசிரியராகப் பணியைத் துவங்கி இன்று 3 பள்ளிகளின் இயக்குனரான நிஷா ஜெய்ஸ்வால்!

தன்னுடைய குழந்தைகளுக்குப் பாடம் கற்றுக்கொடுக்கத் துவங்கி, மூன்று பள்ளிகளின் இயக்குனராக வளர்ச்சியடைந்துள்ளார்.

0

”எதிர்காலத்தில் படைப்பாற்றல்தான் வெற்றிக்கான முக்கியக் காரணியாக இருக்கும். ஆரம்பநிலைக் கல்வி ஆசிரியர்களால் மாணவர்களிடையே படைப்பாற்றலை எளிதாகக் கொண்டு செல்ல முடியும்,” என்றார் மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம். 

இந்த வார்த்தைகளின் மதிப்பை நன்குணர்ந்தார் 46 வயதான நிஷா ஜெய்ஸ்வால். இவர் ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் பகுதியிலுள்ள ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்தவர். கடந்த 20 வருடங்களாக இந்த திசையை நோக்கி பணியாற்றி வருகிறார். அவரது குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கத் துவங்கிய இவர் மூன்று பள்ளிகளுக்கு இயக்குனராவதற்கு முன்பு ஒரு சிறிய கேரேஜ் பள்ளியில் பணியாற்றினார். அவரது சிறிய நகரத்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்தவேண்டும் என்கிற நோக்கத்தில் செயல்பட்டார்.

எவ்வாறு துவங்கியது?

ஜார்கண்டின் மற்றொரு சிறிய நகரமான கிர்தி பகுதியில் பிறந்து வளர்ந்தார் நிஷா. மூன்று சகோதரிகளில் மூத்தவர். அவரது குடும்பம் குறித்து பேசுகையில், 

”என்னுடைய அம்மா இல்லத்தரசி. அவர் மிகப்பெரிய உந்துதலளித்தார். என்னுடைய அப்பா ஹிந்தி திரைப்பட இயக்குனர். எனவே என்னுடைய குழந்தைப் பருவத்தில் பல முறை திரைப்பட செட்களுக்கு சென்றுள்ளேன். சில நடிகர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.” என்றார்.

18 வயதில் திருமணம் முடிந்துவிட்டதால் திருமணத்திற்குப் பிறகே படிப்பை முடித்தார். அவரது கணவரும் புகுந்த வீட்டினரும் முழுமையாக ஆதரவளித்தனர். இளம் தாயாக இருந்த காலகட்டம் குறித்து பகிர்ந்துகொள்கையில், “எனக்கு முதலில் ஆண் குழந்தை பிறந்தது. என் மகனுக்குப் பாடம் கற்றுக்கொடுப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். ஒவ்வொரு முறை அவனை பள்ளியில் விடும்போதும் சற்று நேரம் காத்திருந்து அவனது பள்ளி முதல்வரான திருமதி.வர்மாவிடம் (வொண்டர்லாண்ட் பள்ளியின் உரிமையாளர்) கற்பித்தலில் எனக்கு இருந்த ஆர்வம் குறித்து பகிர்ந்துகொள்வேன். பின்னர் 1995-ம் ஆண்டு என்னுடைய மகள் பிறந்தாள். என்னுடைய இரண்டு குழந்தைகளும் ஓரளவிற்கு வளர்ந்த பின்பும் நான் இளம் வயதிலேயே இருந்தேன். அதிகமான ஓய்வு நேரம் கிடைத்தது. 1998-ம் ஆண்டு துவக்கத்தில் ஆசிரியாகப் பணிபுரியும் வாய்ப்பு குறித்து திருமதி வர்மாவிடம் கேட்டேன். அவர் உடனே சம்மதித்தார். அதுதான் ஆசிரியாக என்னுடைய முதல் அனுபவம்.”

வர்மாவின், மாண்டசரி பள்ளியான வொண்டர்லாண்ட் பள்ளி, பின்புறத்தில் ஒரு சிறிய கேரேஜ் பகுதியில் இருந்தது. இங்குதான் நிஷா ஒரு வருடத்திற்கும் மேலாக பணியாற்றி தன்னுடைய முதல் ஆசிரியர் அனுபவத்தைப் பெற்றார்.

சின்னஞ்சிறிய குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்களுக்கு கற்பிக்கும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினார். இந்த எண்ணமே சொந்தமான பள்ளியைத் துவங்க தூண்டுதலாக அமைந்தது. அவர் கூறுகையில்,

தினமும் பள்ளிக்கு வருவதை குழந்தைகள் விரும்பவேண்டும். பாடதிட்டமல்லாத நடவடிக்கைகளுடன் வேடிக்கையான முறையில் கற்றல் அமையவேண்டும். அப்படிப்பட்ட ஒரு சூழலை குழந்தைகளுக்காக உருவாக்க விரும்பினேன்.

இந்த முயற்சிக்கு பள்ளி முதல்வரிடமிருந்தும் குடும்பத்தினரிடமிருந்தும் மனமார்ந்த ஆதரவு கிடைத்தது. குறிப்பாக அவரது மைத்துனர் ப்ரசாந்த் மற்றும் அவரது கணவர் மனீஷ் உறுதுணையாக இருந்தனர்.

சின்னச்சிறு தேவதைகளை உருவாக்குதல்

அனைத்து தரப்பிலிருந்து ஆதரவு கிடைத்தபோதும் நிஷாவிற்கு துவக்க நிலை தடுமாற்றங்கள் இருக்கவே செய்தன. எனினும் அவரது அதீத ஆர்வம் பணிகளைத் தொடர உந்துதலளித்தது.

விண்ணப்பப் படிவங்களை விற்பனை செய்த தருணம் குறித்து பகிர்ந்துகொள்கையில்,

எனக்கு அந்த நாள் இன்றும் நினைவில் உள்ளது. நான் தனியாக அமர்ந்து படிவங்களை விற்பனை செய்தேன். மக்கள் என்னை நோக்கி வருவதற்கு பல மணி நேரம் காத்திருந்தேன். முதல் நாள் இரண்டு படிவங்கள் மட்டுமே விற்பனையானது. மிகுந்த ஏமாற்றமடைந்தேன். அடுத்த நாள் மேலும் மோசமாக இருந்தது. ஒருவரும் வரவில்லை. மனமுடைந்து போனேன். முயற்சியை கைவிட நினைத்தேன். இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை.

மூன்றாம் நாள் ஐந்து படிவங்கள் விற்பனையானது. அப்போதிருந்து நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. இறுதியாக கிட்டத்தட்ட 30 படிவங்கள் விற்பனையானது. 25 குழந்தைகள் சேர்ந்தனர்.

மற்றவர்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுத்திக் காட்டுவது என்பதும் குழந்தைகளின் விருப்பத்தை மனதில் கொண்டு சிறப்பான பலனை வழங்குவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தறிவதும் அடுத்த சவாலாக அமைந்தது. எனவே தங்களது கற்பிக்கும் முறையை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக அனைத்து சிறந்த மாண்டிசரி பள்ளிகளுக்கும் சென்று கவனமாக கண்காணித்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகே பாடதிட்டம், மாறுபட்ட கற்பிக்கும் முறை, பிரத்யேகமான புத்தகங்கள் போன்றவற்றை உருவாக்கினார். 25 மாணவர்களுடன் நிஷா வாழ்க்கையில் ஒரு புதிய கட்டத்திற்கு அடியெடுத்துவைத்தார். அவர் குறிப்பிடுகையில், 

“அது வெறும் துவக்கம்தான். பல்வேறு சவால்களையும் சந்திக்க நேர்ந்தது,” என்றார்.

குழந்தைகளின் பெற்றோர்கள் குறித்து குறிப்பிடுகையில், “சில பெற்றோர் பழமையான பாரம்பரிய கல்வி முறையுடன் ஒன்றி இருந்தனர். ஊடாடும் வகுப்பு என்கிற திட்டத்தை ஏற்க மறுத்தனர். இது என்னை ஆவேசப்படுத்தியது. சில பெற்றோர்களைக் கையாள்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது. தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துவிட்டால் தங்களது கடமை முடிந்தது என்று அவர்கள் எண்ணினர். அவர்களது ஒத்துழைப்பின்றி எதுவும் நடக்காது என்பதை அவர்களுக்கு புரியவைப்பது கடினமான செயலாக இருந்தது.

”எனினும் என்னுடைய பணியை சிறப்பாகத் தொடரச் செய்தது சின்னஞ்சிறு குழந்தைகளின் கள்ளம் கபடமற்ற சிரிப்பும் அவர்களது கேள்விகளும் மட்டுமே. தற்போது என்னிடம் அப்படிப்பட்ட குழந்தைகள் 25 பேர் உள்ளனர். பெற்றோர்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற விரும்புகிறேன். அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றவேண்டும்,” என்றார்.

மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற அவரது தீர்மானம் குறித்து அவர் மகிழ்ச்சியடைகிறார்.

ஒவ்வொரு குழந்தையின் கனவுப் பள்ளி

காலம் செல்லச் செல்ல லிட்டில் ஏஞ்சல்ஸ் ஒரு முழுமையான மாண்டசரி பள்ளியாகவும் நகரிலுள்ள மற்ற பள்ளிகளிலிருந்து மாறுபட்ட பள்ளியாகவும் வளர்ச்சியடைந்தது. பொதுவாக மாண்டசரி பள்ளிகள் சிறிய கட்டிடத்துடன் ஏழு அல்லது எட்டு அறைகள் கொண்டதாகவே இருக்கும். ஆனால் லிட்டில் ஏஞ்சல்ஸ் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் விசித்திரக் கதைகளில் வருவது போன்ற அமைப்புடனும் கவிதைகளை சித்தரிக்கும் சுவரோவியங்களுடன், ஒரு மிகப்பெரிய விளையாட்டு மைதானம், இளமையான சுறுசுறுப்பான ஆசிரியர்கள் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது.

19 ஆண்டு நெடுந்தூர பயணத்தில் பலவற்றை கடந்து வந்துள்ளார். அவரது மாண்டிசரி பள்ளி தற்போது உயர்நிலைப் பள்ளியாக வளர்ந்துள்ளது. தற்போது ஏஞ்சல் உயர்நிலைப்பள்ளி மற்றும் டெல்லி பப்ளிக் ஸ்கூல் ஆகிய இரு பள்ளிகளுக்கும் தலைமை வகிக்கிறார்.

தேவையான வசதிகள் அனைத்தையும் ஏற்பாடு செய்யக்கூடிய நிலையில் இருப்பது குறித்து நிஷா குறிப்பிடுகையில், “பள்ளியை முறையாக பராமரித்தல், கற்பித்தல், கடுமையாக உழைக்கும் ஆசிரியர்கள், அவருக்கு அளிக்கப்படும் ஊதியம் என எந்த வசதிகளிலும் சமசரம் செய்துகொள்ளக்கூடாது. அவ்வாறு சமரசமின்றி செயல்படும் நோக்கத்தைக் கொண்டுள்ளதால் தேவைகளை சமாளிக்க அதற்கேற்றவாறான பள்ளிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேசமயம் தகுந்த மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. நிதிப்பிரச்சனையுள்ள மாணவர்களுக்கு கட்டணங்களில் சலுகைகளும் இலவச புத்தகங்கள் வழங்கப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு அரசாங்க வழிகாட்டுதல்படி இலவச கல்வி அளிக்கப்படுகிறது.”

மூன்று பள்ளிகளிலும் ஒட்டுமொத்தமாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத அலுவலக ஊழியர்கள் என கிட்டத்தட்ட 200 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். சிபிஎஸ்இ விதிகளுக்கு உட்பட்டே ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறு நகரங்களின் கல்வி குறித்து குறிப்பிடுகையில், “எந்த ஒரு தொழிலானாலும் கல்வி அதில் மிகப்பெரிய பங்களிக்கிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி இந்தத் துறையைச் சார்ந்தே உள்ளது. ஆனால் எங்களைப் போன்ற சிறு நகரத்தில் ஆசிரியர்களுக்கு தகுந்த மரியாதையும் பாராட்டும் வழங்கப்படுவதில்லை என்பது மிகுந்த கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.”

அடுத்த மிகப்பெரிய பிரச்சனை குறித்து பகிர்ந்துகொள்கையில், ”பெரும்பாலான மாணவர்கள் முதல் தலைமுறை கல்வி கற்பவர்கள் என்பதால் பெற்றோர் தரப்பிலிருந்து மிகக்குறைவான ஆதரவே எங்களுக்கு கிடைக்கும். கற்பிக்கவேண்டும் என்கிற ஆர்வம் அவர்களிடம் உண்டு. ஆனால் அவர்கள் கற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. நேரம் செலவிடவும் விதிகளை மதிக்கவும் விரும்புவதில்லை,” என்றார்.

அதிகம் சாதிக்கவேண்டியுள்ளது!

ஒரு ஆசிரியராகத் துவங்கி மூன்று பள்ளியின் இயக்குனராக வளர்ச்சியடைந்த நிஷாவின் பயணத்தில் ஆயிரக்கணக்கான கதைகள் அடங்கியுள்ளது. தன்னைக்குறித்து அவர் குறிப்பிடுகையில்,

”5000 அன்பான குழந்தைகளின் அம்மா நான். என் குழந்தைகள் அனைவரும் எதிர்காலத்தில் மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள், நடிகர்கள், செஃப் என வளர்ச்சியடைந்து நாட்டைப் பெருமைப்படுத்துவார்கள்.”

சொந்த பள்ளியைத் துவங்கவேண்டும் என்கிற அவரது கனவு குடும்பத்தினரின் முழு ஆதரவின்றி நிறைவேறுவது சாத்தியமில்லை. 

”ஒரு பெண் தொழில் புரிவதில் சிறப்பாக முன்னேறவேண்டுமெனில் அவரது குடும்பம் உறுதுணையாக இருப்பது மிகவும் அவசியமானதாகும். எனக்கு என்னுடைய கணவரும் புகுந்த வீட்டாரும் துணையாக இருந்தனர். நான் வீட்டில் இல்லாதபோது என்னுடைய குழந்தைகளையும் வீட்டையும் அவர்கள்தான் பார்த்துக்கொண்டனர்.”

இறுதியாக நிஷா, “நான் தொடர்ந்து கற்றுக்கொள்வதையும், வளர்ச்சியடைவதையும், ஆராய்வதையும் நிறுத்திக்கொள்ளமாட்டேன். 5,000 குழந்தைகளைக் கொண்ட இந்த குடும்பம் 50,000 குழந்தைகளாக வளர்ச்சியடையவேண்டும். சிறிய வகையில் சமூகத்தின் நலனில் தொடர்ந்து பங்களிக்க விரும்புகிறேன்,” என்று குறிப்பிட்டார்.

இவரது சிந்தனை ’நாம் இந்த உலகை விட்டு மறைவதற்குள் சாதிக்க வேண்டிய எத்தனையோ விஷயங்கள் உள்ளது’ என்கிற கருத்தை ஆழப் பதியவைக்கும் ராபர்ட் ஃப்ராஸ்ட் அவர்களின் புகழ்பெற்ற வரிகளான Miles to go before I sleep என்கிற வரிகளை நினைவுப்படுத்துகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்நேஹ் சிங்