ஈஸி... வாசி... ருசி... நம்மை 'செஃப்' ஆக்கும் 4 சமையல் தளங்கள்!

1

எந்தச் செயலையும் சிறப்பாக செய்வதற்கு உறுதுணை ஆகிவிட்டது செல்போன். அதில் பல்வேறு பயன்பாட்டுத் தளங்களை நாடி, நம் அன்றாட வாழ்க்கையின் முக்கியத் தேவைகளையும் வேலைகளையும் எளிதாக அடைய முடிகிறது. இதோ சமையல் மீது நாட்டம் கொண்ட எவரையும் செஃப் ஆக உயர்த்தவல்ல எளிமையான ஆப்-ஆசானாகவே திகழும் 4 பயன்பாட்டுத் தளங்கள் இதோ...

குக்பேட் (Cookpad)

ஒரு கோடி பேர் உபயோகிக்கும் 'குக்பேட்' எனும் இந்தப் பயன்பாட்டுத் தளம், பல லட்சக்கணக்கான சமையல் வழிமுறைகளை ருசிகர ரெசிபிகளாக வழங்குகிறது. உங்களுக்காக சொந்தமாக சுயவிவர கணக்கு தயார் செய்துகொள்ளலாம். அதன் மூலம் உங்களுக்குப் பிடித்த சமையல் நிபுணர்களைத் தொடர்பு கொள்வது மட்டுமல்லாமல், எந்த வழிமுறையை வேண்டுமென்றாலும் சேமித்து கொள்ளலாம் என்பது இந்தத் தளத்தின் தனிச்சிறப்புகள். லட்சக்கணக்கான மக்களை இணைக்கும் இந்தத் தளத்தில், அனைத்து வகையான உணவுகளின் செய்முறையும் இருக்கிறது.

இந்த தளத்தின் சிறப்பே பயனர்கள் ரெசிப்பிகளை அறிந்து கொள்வதோடு, தங்களுக்குத் தெரிந்த ரெசிப்புகளை இதில் பதிவும் செய்யலாம். விதவிதமான வெளிநாட்டு உணவுகளின் செய்முறைகளை இந்த தளம் மூலம் தெரிந்து கொண்டு சமைத்து மகிழலாம்... 

Cookpad வலைதளம்

பிக் ஓவன் (Big Oven)

நீங்கள் மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்க விரும்புபவரா? எளிதான சமையல் குறிப்புகளை வழங்கும் இந்தப் பயன்பாட்டு தளத்தில், 3,50,000-க்கும் மேற்பட்ட வழிமுறைகள் இருக்கிறது. காலை உணவு, மதிய உணவு, மேற்கத்திய உணவு, கலவை, இனிப்பு மற்றும் பருவத்திற்கு ஏற்றார் போல் உணவு என்ற ஏராளமான பிரிவுகளில் சமையல் குறிப்புகளும், செய்முறை விளக்கங்களும் இருக்கின்றன. 

இந்த தளத்தின் சிறப்பே, நமக்கு பிடித்த உணவின் ரெசிப்பியை தெரிந்து கொள்வதோடு அதற்குத் தேவையான பொருட்களையும் அதே தளத்தின் மூலம் வாங்கிக் கொண்டு சமைக்கலாம். முக்கியமாக, தேர்ந்தெடுத்த உணவை எத்தனை நபர்களுக்கு சமைக்கப் போகிறோம் என்றும் சொல்லிவிட்டால் அதற்குத்தேவயான அளவையும் பரிந்துரைத்து வாங்கிக்கொள்ள உதவுகிறது. ஃப்ரிட்ஜில் மீதம் உள்ள காய்கற்களின் தகவல்களை இத்தளத்தில் கூறினால், அந்த பொருட்களை வீணடிக்காமல் என்ன சமைக்கலாம் என்ற ஆலோசனையும் வழக்குவது மேலும் சிறப்பு. பிக் ஓவன், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இல் செயலி வடிவிலும் தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும். 

Big Oven வலைதளம்செயலி 

யம் (yum)

'யம்லி' என்ற பெயரில் இயங்கும் இத்தளம் ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட  உணவுவகைகளை அளிக்கும் பயன்பாட்டுத் தளம். உங்களுக்கு சமையலுக்கான திட்டத்தை தயாரிக்கவும், தேவையான பொருட்களை வாங்கி சமைக்கவும் தூண்டுகிறது. துரித உணவு சமைக்க வேண்டுமா? இத்தாலிய உணவு வேண்டுமா? உங்கள் பக்கத்தில் தேவையான குறிப்புகளைப் பத்திரப்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் விரும்பும் உணவுக்குத் தேவையான பொருட்களை (காய்கறிகள், பழங்கள்) வரிசைபடுத்தி வெளியே சென்று வாங்குவதற்கு ஏதுவாக பிரித்து வைக்கும் வசதியும் இதிலே உண்டு.

ஜூஸ், கேக்கு வகைகள், மில்க் ஷேக்ஸ் என்று எல்லாவித பருவங்களுக்கு ஏற்றவைகளின் செய்முறைகளையும் எளிய வடிவில் வழங்குகிறது இத்தளத்தின் சிறப்பு. "yum" என்ற பெயரில் செயலி வடிவிலும் இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

Yummly வலைதளம், செயலி

சமையல் தமிழ் (samayal Tamil)

சமையலைத் தமிழ் மொழியில் கற்க விருப்பமா? உங்களைப் போன்றவரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறது சமையல் தமிழ் எனும் பயன்பாட்டு தளம். சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், அழகுக் குறிப்புகள், மருத்துவ குணமுடைய பத்திய சமையல் என ஏராளனமான பிரிவுகளின் மூலம் பயனாளர்கள் மனதைக் கவர்ந்து வருகிறது. தமிழ் லேப் எனும் நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பாரம்பரிய சமையல் என்றழைக்கப்படும். எதுவாக இருந்தாலும் இந்தத் தளத்தில் காணலாம். சில உணவுக்குறிப்புகள் வீடியோ வடிவிலும் இத்தளத்தில் உள்ளது கூடுதல் சிறப்பு. 

Tamil Samayal வலைதளம் 

மேற்கூறிய அனைத்து பயன்பாட்டுத் தளங்களும் மக்களுக்கேற்ப விலையில்லாமல் கிடைக்கிறது. உலகம் முழுவதும் உள்ள சமையல் ஆர்வலர்கள், இவற்றை உபயோகப்படுத்தி வருகிறார்கள். நீங்களும் இவற்றை பயன்படுத்தி உங்களுக்குள் இருக்கும் மல்லிகா பத்ரிநாத்தையோ, தாமுவையோ அல்லது மெனுராணி செல்லத்தையோ கண்டுபிடியுங்களேன்.

Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Stories by Induja Ragunathan