அமெரிக்க தொழில்நுட்ப போட்டியில் தங்கப்பதக்கம், 15 ஆயிரம் டாலர் ரொக்கப்பரிசு வென்ற இந்திய மாணவிகள்!

0

கலிஃபோர்னியாவில் நடைபெற்ற உலகளவிலான டெக்னோவேஷன் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து இளம் பெண்கள் அடங்கிய குழு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. அத்துடன் 15,000 டாலர் ரொக்கப் பரிசையும் இக்குழு வென்றுள்ளது. கலிஃபோர்னியாவில் நடைபெறும் உலகளவிலான டெக்னோவேஷன் நிகழ்வில் இந்தியா பங்கு பெறுவது இதுவே முதல் முறையாகும்.

’Cantavits’ என பெயரிடப்பட்ட ஐந்து மாணவிகள் அடங்கிய இக்குழுவினர் நொய்டாவில் உள்ள விஷ்வ பாரதி பப்ளிக் பள்ளியைச் சேர்ந்தவர்கள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அதிதி ஜெயின் குழுத் தலைவர். அத்துடன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஸ்நேகா அகர்வால், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஷ்ரத்தா சுக், ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ஷ்ரியா சுக்லா, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் கிருத்திகா ஷர்மா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். 

இந்த மாணவிகள் எட்டு மாதம் ஆராய்ச்சி செய்து EEDO என்கிற ஆண்ட்ராய்ட் செயலியை உருவாக்கியுள்ளனர். இது மின்கழிவு உருவாக்குபவர்களையும் மின்கழிவுகளை சுற்றுச்சூழலுக்கோ அல்லது மறுசுழற்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கோ தீங்கு விளைவிக்காமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மறுசுழற்சி செய்யும் அங்கீரிக்கப்பட்ட நபர்களையும் ஒன்றிணைக்கிறது. 

அர்ச்சனா ஜெயின் இந்தக் குழுவிற்கு பயிற்சியளித்தார். ப்ரஜ்வால் ஷெட்டி மற்றும் பவேஷ் ராவல் இவர்களை வழிநடத்தினார்கள்.

அமெரிக்கா, மெக்சிகோ, ஸ்பெயின், எகிப்து, சீனா, பாலஸ்தீனம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மற்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களுடன் போட்டியிட்டு இக்குழுவினர் பதக்கத்தை வென்றுள்ளனர். 

டெக்னோவேஷன் போட்டி என்பது தொழில்நுட்ப தொழில்முனைவோருக்கான திட்டமாகும். அத்துடன் இளம் பெண்களுக்கான போட்டியும் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சமூக பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பம் வாயிலாக தீர்வுகாணத் தேவையான திறன்களை கற்கவும் அவற்றைப் பயன்படுத்தவும் உலகெங்கிலும் உள்ள பெண்கள் அடங்கிய குழுவை இவர்கள் வரவேற்கின்றனர். இந்த ஆண்டு 120 நாடுகளில் இருந்து 20,000 விண்ணப்பங்கள் வந்தது. இதில் 12 குழுக்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்குச் சென்றன.

”அதிகரிக்கும் மின்கழிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசிய உரையைக் கேட்டு உந்துதல் பெற்று இந்த திட்டத்தை உருவாக்கினோம். இந்தியாவில் இந்தப் பிரச்சனையை அடியோடு அகற்றுவதற்காக இத்தகைய செயலியை உருவாக்க அவரது உரைதான் எங்களுக்கு ஊக்கமளித்தது,” என்று பிரதிநிதிகளில் ஒருவர் யுவர்ஸ்டோரி உடனான உரையாடலில் தெரிவித்தார்.

இவர்களது திட்டத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்சென்று மின்கழிவுகளை செயலி வாயிலாக சுற்றுச்சூழலுக்கு பாதகமின்றி அகற்ற விரும்புகின்றனர். இந்தியாவில் விரைவில் செயல்படுத்த இந்த மாணவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகிறது. இந்தச் செயலி வாயிலாக ஈட்டப்படும் தொகையை தொண்டு செய்யும் நோக்கத்திற்குப் பயன்படுத்த விரும்புகின்றனர்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL