இந்தியாவின் முதல் செயல்பாடு சார்ந்த சமூக தளம் - பிரிட்ஜ்.கோ

சென்னையை சார்ந்த இளைஞர்களின் முயற்சி

1

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் நம் வாழ்க்கையே மாற்றி அமைத்து விட்டது. இது போன்ற வலைத்தளங்கள் நம் நட்பு வட்டத்தை விரிவாக்க மற்றும் தொலைந்து போன நட்பை புதுப்பிக்க உதவினாலும், நமது அடிப்படை பழக்கமான சந்திப்பு மற்றும் நமக்கு பிடித்த செயல்களை சேர்ந்து செய்வது என்பது இந்த காலகட்டத்தில் அரிதாகித்தான் உள்ளது.

ஒரே கருத்துள்ள, ஒரே ஆர்வமுள்ள செயல்களை விரும்பும் சக மனிதர்களை ஒன்றிணைக்கும் பாலமாக திகழ்கிறது இந்தியாவின் முதல் செயல்பாடு சார்ந்த சமூக தரவிறக்கத் தளமான "பிரிட்ஜ்.கோ"(Brigge.co). இந்த முயற்சியில் வெற்றிகரமாக ஈடுபட்டுள்ளனர் சென்னையில் பிறந்து வளர்ந்த பிரசன்னா, சம்பத் மற்றும் முரளி.

தமிழ் யுவர்ஸ்டோரி இவர்களிடம் பிரேத்யேக நேர்காணல் நடத்தியது.

பிரசன்னா மற்றும் சம்பத் சகோதரர்கள். முரளியின் சகோதரியை சம்பத் மணந்துள்ளார். ஒரே குடும்பத்திலிருந்து தொழில்முனை நிறுவனர்களாக உள்ளது பெரும் நன்மை பயப்பதாகவே உள்ளது என்கின்றனர் இம்மூவரும்.

சகோதரர்களின் அமெரிக்கா வாழ்க்கை

சம்பத் ஜகன்நாதன், அண்ணா பல்கலைகழக்கத்தில் தொழில்துறை பொறியியல் பயின்றார். கல்லூரியின் மூலமாக TCS நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு அமைந்தது. இரண்டு வருடம் பணியாற்றிய பின்னர் HCL நிறுவனத்தில் குறுகிய காலம் பணி புரிந்தார். 2007 ஆம் ஆண்டு மேலாண்மை பயில அமெரிக்கா சென்றார். பின்னர் ஆறு மாத காலம் சிகாகோ நகரில் ஒரு கன்சல்டிங் நிறுவனத்தில் பணி புரியும் பொழுது, காக்னிசன்ட் நிறுவனம், அறிகன்சா மாகணத்தில் தனது கிளையை திறந்தது. மூன்று வருட காலம் காக்னிசன்ட் நிறுவனத்தில் பணி புரிந்த பின்னர், இந்தியா செல்லும் ஆர்வம் தலை தூக்கியது. காக்னிசன்ட் சென்னை அலுவலகத்திற்கு மே மாதம் 2013 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்தார். அங்கிருந்து இன்டிக்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக பொறுபேற்றார். இன்டிக்ஸ் நிறுவனத்தில் அவர் வடிவமைத்த தயாரிப்பிற்கு மில்லியன் டாலர் மதிப்பு கூடியது.

பிரசன்னா ஜகன்நாதன், அண்ணாமலை பல்கலைகழகத்தில் ரசாயன பொறியியல் படித்தார். பின்னர் மேற்படிப்பிற்கு அமெரிக்கா சென்றார். சிலிக்கான் வேலியில் உள்ள அபார வளர்ச்சி அவரை அங்கு ஈர்த்தது. பத்து வருட காலம் பல்வேறு நிலைகளில் பணி புரிந்த பிரசன்னாவிற்கு இந்தியா செல்லும் எண்ணம் மேலோங்கியது.

இரு சகோதரர்களும் அமெரிக்காவில் இருந்த பொழுது அங்கு குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவில்லை. இது அவர்கள் எடுத்திருந்த திடமான முடிவு.

"அமெரிக்காவில் வசிக்கும் பொழுது எனக்கு குழந்தை பிறந்திருந்தாலும், இந்திய குடியுரிமையே எடுக்க விரும்பினனேன். இந்தியாவில் தான் குழந்தை வளர வேண்டும் என்று விரும்பினோம்" என்கிறார் பிரசன்னா. இந்தியா செல்ல முடிவெடுத்த நிலையில் டென் மைல்ஸ் நிறுவனரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவர்களுடைய சென்னை வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பை வழங்கினார். அக்டோபர் மாதம் 2013 ஆம் ஆண்டு சென்னைக்கு குடி பெயர்ந்தேன்" என்கிறார் பிரசன்னா.

பல வருடங்கள் வெளிநாட்டில் வசித்த பின் சென்னை வருகை பற்றி கேட்ட பொழுது "முதலில் இந்த சூழலுக்கு மாறுவது கொஞ்சம் கடினமாக இருந்தாலும். சென்னையிலயே வளர்ந்ததால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடிந்தது. மேலும் நகரத்தின் வளர்ச்சி எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது" என்கிறார்கள் இருவருமே.

நகைச்சுவை நாடக திறமையாளர் முரளி

பிரிட்ஜ்.கோ நிறுவனத்தின் மற்றொரு நிறுவனர் முரளி சடகோபன். முழுக்க சென்னை வாசியான இவர், அதில் பெருமையும் கொள்கிறார். SSN கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்து அதன் மூலமாக காக்னிசன்ட் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டார். "மூன்று வருட காலம் அங்கு பணி புரிந்தேன். கோடிங் வேலையும் கார்ப்பரேட் உலகமும் எனக்கானதல்ல என்பதை புரிந்து கொண்டேன்" என்கிறார் முரளி. கல்லூரி காலத்திலேயே நாடகங்களில் பெரிதளவு ஈடுபட்டார். சென்னையில் இருக்கும் வெகு சில நகைச்சுவை நாடக திறமையாளர்களில் முரளி பிரதானமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டென் மைல்ஸ் நிறுவனத்தில் டிஜிட்டல் மார்கடிங் வேலை அமைந்தது. வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்ப மீடியா என்னை ஈர்த்தது. அங்கு சில காலம் பணி புரிந்த முரளிக்கு, பிரசன்னாவும் அங்கு பணி புரிந்தார் என்ற விவரம் தன் தங்கையின் திருமணத்தின் போது தான் தெரிந்தது என்கிறார்.

தொழில்முனை சிந்தனை

2014 ஆம் ஆண்டு தொடக்கத்தில் செயல்பாடுகள் கொண்ட இணையத்தை அமைக்கும் யோசனை உதித்தது. பல்வேறு அலசல்களுக்கு பிறகு ஜூலை மாதம் சோதனை முயற்சியில் ஈடுபட துவங்கினோம். புனேவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு அவுட்சோர்சிங் முறையில் வேலையை வழங்கினோம். நாங்கள் எதிர்பார்த்த அளவில் இல்லாமல் போனதால் இந்த முயற்சியை முற்றிலுமாக துறந்து, முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. ஆனால் இது எங்களுக்கு நிறைய படிப்பினையை தந்தது.

மார்ச் மாதம் 2015 ஆம் ஆண்டு எங்களின் இரண்டாவது கட்ட முயற்சியை தொடங்கினோம். கைபேசிக்கான அம்சங்களுடைய தளத்தை உருவாக்க முடிவெடுத்தோம். கைபேசியின் மூலம் தரவிறக்கம் செய்யக்கூடிய முதல் செயல்பாடு சமூக தளமாக எங்களின் பிரிட்ஜ் இருத்தல் வேண்டும் என்றே எண்ணினோம்.

நமது பாரம்பரிய முறையான சமூக இணைப்பை பலப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். தொழில்நுட்பம் வாயிலாக நேருக்கு நேர் சந்திக்கும் தொடர்பை சாத்தியமாக்க எண்ணினோம்.

சமூக தொடர்பையும் தங்களின் விருப்பதை கண்டறிந்து அந்த செயலில் ஈடுபடும் வாய்ப்பையும் பிரிட்ஜ்.கோ வழங்குகிறது

மூன்று நபர்களாக பதினைந்து லட்ச முதலீட்டுடன் செப்டம்பர் மாதம் 2015 ஆம் ஆண்டு செயல்பட தொடங்கிய பிரிட்ஜ்.கோ நிறுவனம் குறுகிய வாரங்களில் ஏழு நபர்கள் கொண்ட குழுவாக விரிவடைந்தது. ப்ளே ஸ்டோரில் பதிவேற்றிய நான்கு வாரங்களுக்குள் சுமார் அறநூறு தரவிறக்கங்கள் மற்றும் எண்பது வகையான செயல்பாடுகள் இவர்களின் செயலி App மூலமாக இயன்றுள்ளது.

நம்பிக்கையூட்டும் வளர்ச்சி

"ஓய்வு நேரத்தை சரியாக பயன்படுத்தவும் மக்கள் சமூக உரையாடல் முறையை மாற்றி அமைக்கவும் நாங்கள் விரும்பினோம். அந்த வகையில் இது வரை பிரிட்ஜ் மூலமாக நடந்துள்ள செயல்கள் எங்களை மிகவும் உற்சாகம் அடைய வைக்கிறது" என்கிறார் பிரசன்னா. சினிமா, சாகச பயணங்கள் போன்ற ஓய்வு நேர செயல்பாடுகளை கடந்து தங்களுக்கு விருப்பமுள்ள செயல்களை செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. யார் வேண்டுமானாலும் பிடித்தமான செயல்களை உருவாக்கி அதே ஆர்வமுள்ள மற்றவர்களை செயலில் இணைத்து கொள்ள முடியும்.

விருப்பமான விளையாட்டு, மாடித் தோட்டம், ஃபுட் வாக் இப்படி பலதரப்பட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

"எங்களின் பிரிட்ஜ் மூலமாக கூவம் நதிக்கரையை செம்மைபடுத்துவது எப்படி என்ற செயல்பாட்டை ஒரு குழு நிறுவி அதில் நிறைய பேர்கள் பங்கு கொள்வதை பார்க்கும் பொழுது எங்களுக்கு ஆச்சர்யமும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது. அதே போல் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று தன்னார்வலர்களை கண்டறிந்து இணைத்துள்ளது" என்கிறார் முரளி.

சென்னை மட்டுமின்றி திருநெல்வேலி போன்ற நகரத்திலும் மக்கள் எங்களின் பிரிட்ஜ் தரவிறக்கம் மூலம் செயல்பாடுகளில் இணைந்துள்ளனர்.

இளைஞர்கள் மட்டுமின்றி முதியவர்களையும் இத்தளம் கவர்ந்துள்ளது வியப்பளிக்கிறது. அர்த்தமுள்ள இந்து மதம் பற்றி விவாதிக்க ஒரு குழு மற்றும் தங்களின் புத்தகம் வாசிப்பு மற்றும் பண்டைய வரலாற்று புத்தகங்கள் பற்றிய விவதாம் அடங்கிய ஒரு குழு பிரிட்ஜ்.கோ மூலம் இணைந்துள்ளது. இந்த குழுவை இயற்றியது அறுபது வயது மிக்க இருவர்.

இந்தியாவின் முதல் செயல்பாடு தரவிறக்க தளம் என்பதில் பெருமை கொள்கிறார்கள். இதன் மூலம் சமூகத்தை இணைத்து விருப்பமிக்க அர்த்தமுள்ள செயல்பாடுகள் கொண்ட தளமாக மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதே இவர்களின் விருப்பமாக உள்ளது. ஒய்வு நேர செயல்பாட்டிற்கான முன்னணி தளம் என்ற நோக்கமே இவர்களின் திட்டமாக இருக்கிறது.

சமூகத்தை இணைக்கும் இந்த புது முயற்சி, இவர்களுக்கு தி சென்னை ஏஞ்சல்ஸ் (TCA ) சார்ந்த ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து வெளியிடமுடியாத முதல் கட்ட நிதியை பெற்றுத் தந்திருக்கிறது.

இணையதள முகவரி: www.brigge.co