தொடக்க நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசனை சேவை அளிக்கும் சென்னை 'மீட்யுவர்புரோ '

0

அடிப்படை சட்டம் மற்றும் வரி விதிப்பு தொடர்பான விழிப்புணர்வு இல்லாதது, ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வர்த்தக நோக்கில் பல்வேறு குழப்பங்களுக்கு உள்ளாக்கியுள்ளது. சில நேரங்களில் இதனால் ஏற்படும் தாமதத்தின் பாதிப்பு ஸ்டார்ட் அப்களின் வருவாயை விட அதிகமாகவும் இருக்கின்றன. எனவே தொடக்கநிலை நிறுவனங்களுக்கு, சட்டம் மற்றும் வரிவிதிப்பு விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதற்கு வழிகாட்டுவதும் அவசியமாகிறது.

2014 ஜூலை, திவாகர் விஜயசாரதி மற்றும் ராஜேஷ் இன்பசேகரன், சட்டம் மற்றும் வரி தேவைகளுக்கான தீர்வாக "மீட் யுவர் புரோ" (MeetUrPro) துவக்கினர். சென்னையை தலைமையகமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்படுகிறது.

மீட்யுவர்புரோ, திறமையான தொழில் வல்லுனர்களை கொண்டுள்ளது. மேலும் தனிநபர் மற்றும் வர்த்தக வரி விதிப்பு, ரியல் எஸ்டேட் பரிவர்த்தனை மற்றும் வர்த்தகத்தை நிறுவுவது உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் அளிக்கத்தேவையான தொழில்நுட்பத்தையும் பெற்றிருக்கிறது.

"தொழில் வல்லுனர்கள் வர்த்தகங்கள் மற்றும் தனிநபர்களுடன் தொடர்பு கொண்டு தங்கள் சேவையை விரிவாக்கம் செய்து கொள்வதற்கான இணைய வழியாக மீட்யுவர்புரோ இருக்கிறது” என்கிறார் இணை நிறுவனர் திவாகர் விஜயசாரதி.

ஸ்டார்ட் அப்களின் தேவைகள்

தொழில்முறை சேவைகளுக்கான கட்டுப்படுத்தப்பட்ட இணைய சந்தை மற்றும் சேவை வழங்கும் இடமாக மீட்யுவர்புரோ திகழ்கிறது. வரி தாக்கல், கட்டுப்பாடு நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவது, ரியல் எஸ்டேட் பரிவர்த்தனை போன்ற தொழில்முறை சேவைகளை அணுக அனுமதிப்பது மூலம் ஸ்டார்ட் அப்களின் வர்த்தக மற்றும் தனிநபர் தேவைகளை இது பூர்த்தி செய்கிறது.

"இந்த தளம் மூலம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனையும் டிராக் செய்யப்படுகிறது. கெடுவை கடைபிடித்து, வொர்க்ஃபுளோ மேனேஜ்மண்ட் சாப்ட்வேர் (டிஐஎம்.ஐ) மூலம் உயர்தரமான சேவையை அளித்து அனைத்து பகுதிகளிலும் நம்பகமான பரிவர்த்தனையை உறுதி செய்கிறது” என்கிறார் விஜயசாரதி.

மீட்யுவர்புரோ.காம் இணையதளம் பல அடுக்கு விலையில் பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற விலையை தேர்வு செய்து கொள்ளலாம். சேவைகளை வழங்க பயன்படுத்தும் டி.ஐ.எம்.ஐ ஆரம்ப தொடர்பு நேரத்தை குறைக்கிறது. இந்தக்குழு சேவையின் ஒவ்வொரு கட்டத்தையும் கண்காணித்து, தேவை எனில் தலையிடுகிறது. இந்த தளம் வழங்கும் சேவைகள் வழக்கமான நிறுவனங்கள் வழங்கும் சேவைகளை விட 50-60 சதவீதம் மலிவானது என்கிறார் விஜயசாரதி.

நிறுவனத்தின் துறை சார்ந்த திறமை மற்றும் பல வகையான சேவைகள், தேர்வுகள், விலை மற்றும் ஒருங்கிணைந்த சேவை வழங்கலில் சந்தையில் உள்ள வெற்றிடத்தை நிறப்புகிறது. இன்று இந்த தளத்துடன் 1000 தொழில்முறை வல்லுனர்கள் இணைந்துள்ளனர்.

தொழில்முனைவோர்

2008-09 ல் விஜயசாரதி மற்றும் இன்பசேகரன் இணயம் வழி வருமான வரி தயாரிப்பு மற்றும் தாக்கல் செய்வதற்கான taxqbe.com எனும் இணையதளத்தை துவக்கினர். இதனைத்தொடர்ந்து 2014 மார்ச்சில் மைடேக்ஸ்மேனஜர்.இன் தளத்தை துவக்கினர். இது இணையவழி வரி ஆலோசனை மற்றும் தாக்கலுக்கு வழி செய்தது. தங்கள் சேவைகளை வேறு துறைகளுக்கும் விரிவாக்கம் செய்வது பற்றி யோசித்த போது மேலும் பல தொழில்முறை வல்லுனர்களை கொண்டு வர தீர்மானித்தனர். இப்படி தான் மீட்யுவர்புரோ பிறந்தது.

ஸ்டார்ட் அப் கிளினிக்

ஸ்டார்ட் அப்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக மீட்யுவர்புரோ, ஸ்டார்ட் அப் கிளினிக் ஒன்றை துவக்கியுள்ளது. ஸ்டார்ட் அப் கிளினிக் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சட்டம் மற்றும் இதர தொழில்முறை சேவைகளை வழங்குகிறது.

ஒரு நிறுவனத்தை துவக்குவது முதல் விதிமுறைகளை நிறைவேற்றுவது வரை வர்த்தகத்திற்கு தேவையான அனைத்தையும் இதன் ஸ்டார்ட் அப் பேக்கேஜ் வழங்குகிறது. நிறுவன துவக்கத்திற்கான சான்றிதழ், பேன் ஒதுக்கீடு கடிதம், டேன், டின் மற்றும் வங்கி கணக்கு துவக்கம், வாட் வரி மற்றும் சேவை பதிவுக்கான ஆலோசனை, முதலீடு தொடர்பான ரிசர்வ் வங்கி விதிமுறைகள் மற்றும் பெமா விதிமுறைகள் பின்பற்றுதல் உள்ளிட்ட சேவைகளை அளிக்கிறது.

'இணையத்திலும் சரி, நேரிலும் சரி, ஸ்டார்ட் அப் கிளினிக்கை பொருத்தவரை ஆரம்ப ஆலோசனை இலவசம். எங்கள் சேவைகளில் வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமானதை தேர்வு செய்ய அனுமதிக்கிறோம். சந்தையின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நாங்கள் எதுவும் நிர்ணயிப்பதில்லை” என்கிறார் விஜயசாரதி.

வழக்கறிஞர்கள் மற்றும் தணிக்கையாளர்களுக்கு இணைய வழி சேவை வரப்பிரசாதமாக இருக்கிறது. வாடிக்கையாளர்களை தேடிக்கொள்வதற்கான புதிய வழியாகவும அமைகிறது. வழக்கமான சேவையை விட இதில் கட்டணம் செலுத்துவது சிக்கல் இல்லாதது.

"இந்தியாவில் உள்ள தொழில்முறை வல்லுனர்கள் தங்கள் கட்டணத்தை மற்றவர்களுடன் பகிர அவர்கள் துறையின் கட்டுப்பாட்டு அமைப்புகளாக அனுமதிக்கப்படுவதில்லை. எனவே நாங்கள் அவர்களிடம் இருந்து நாங்கள் கட்டணம் வசூலிப்பதில்லை. அவர்கள் வசூலிக்கும் தொகையில் ஒரு சிறு பகுதியை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்கிறோம்” என்கிறார் விஜயசாரதி.

வளர்ச்சிப்பாதை

ஸ்டார்ட் அப் கிளினிக் செயல்பாட்டை சென்னையில் தொடர்ந்து நடத்தவும், பெங்களூருக்கு விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. "விதிமுறைகளை பூர்த்தி செய்வதை பொருத்தவரை ஸ்டார்ட் அப்கள் ஏற்றுக்கொள்ளும் பெயராக ஸ்டார்ட் அப் கிளினிக்கை உருவாக்க விரும்புவதாக விஜயசாரதி கூறுகிறார்.

பொருத்தமான வருவாய் மாதிரி இல்லாமல் எந்த வர்ததக பயணமும் முழுமையாகாது. தொழில்முறை வல்லுநர் மற்றும் ஸ்டார்ட் அப்கள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டவுடன் மீட்யுவர்புரோ 6 முதல் 10 சதவீத தொகையை வசூலிக்கிறது. 2016 மார்ச் வாக்கில் 5 லட்சம் டாலர் வருவாயை எட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இணையதள முகவரி: MeetUrPro