பெண் விஞ்ஞானிகளுக்காக தினம் ஒரு விக்கி கட்டுரை எழுதும் ஆய்வாளர்!

அதிகம் அறியப்பட்டாத பெண் விஞ்ஞானிகளை உலகிற்கு அறிமுகம் செய்யும் வகையில், அவர்களைப்பற்றி விக்கிபீடியாவில் தினம் ஒரு கட்டுரையாக பதிவு செய்து வருகிறார் இளம் ஆய்வாளரான ஜெஸ் வேடே.

0

இளம் ஆய்வாளரான ஜெஸ் வேடே(Jess Wade) லட்சிய நோக்கம் கொண்டவராக இருக்கிறார். லண்டனின் இம்பிரியல் கல்லூரியில் பிளாஸ்டிக் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஆய்வாளராக திகழும் ஜெஸ்ஸி, தனது துறையில் சாதிக்கக் கூடிய திறன் படைத்தவர் என்ற போதிலும் அவரது லட்சியம் தனிப்பட்ட நோக்கம் கொண்டது அல்ல. மாறாக அறிவியல் துறையில் சாதித்துள்ள பெண்கள் ஓவ்வொருவர் பற்றியும் உலகறியச்செய்வது தான். இந்த நோக்கத்தை நிறைவேற்ற அவர் தேர்வு செய்துள்ள வழி, விக்கி கட்டுரைகள்.!

ஆம், கட்டற்ற இணைய களஞ்சியமான விக்கிபீடியாவில், ஜெஸ் பெண் விஞ்ஞானிகளை அறிமுகம் செய்யும் வகையிலான பதிவுகளை எழுதி வருகிறார். தினம் ஒரு பெண் விஞ்ஞானியை அறிமுகம் செய்யும் இலக்குடன் செயல்பட்டு வருபவர் இதுவரை 270 க்கும் மேற்பட்ட விக்கி கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

ஜெஸ் வேடே; நன்றி கார்டியன்
ஜெஸ் வேடே; நன்றி கார்டியன்

தினம் ஒரு கட்டுரை எழுதுவது தான் இலக்கு என்றாலும், சில நாட்களில் 3 கட்டுரைகள் கூட எழுதியது உண்டு என கார்டியன் இதழுக்கான பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். முழுநேர ஆய்வுக்கு இடையே ஜெஸ்ஸி, அறிவியல் துறையில் பெண் சாதனையாளர்களை கண்டறிந்து அவர்களைப்பற்றிய தகவல்களை சேகரித்து அவர்களுக்கான விக்கிபீடியா பக்கத்தை உண்டாக்கி வருகிறார்.

பெண் விஞ்ஞானிகளுக்கான விக்கிபீடியா கட்டுரைகள் எழுதுவதை ஜெஸ்ஸி ஒரு இயக்கம் போல செய்து வருகிறார். அறிவியலை நோக்கி இளம் பெண்களை ஈர்ப்பதும், விக்கிபீடியா கட்டுரைகளில் பெண் சாதனையாளர்கள் பற்றிய கட்டுரைகள் சொற்பமாக இருக்கும் குறையை சரி செய்வது ஆகிய இரண்டு காரணங்களே ஜெஸ்ஸின் இந்த லட்சியத்திற்கு பின்னே இருக்கிறது.

ஜெஸ்ஸின் லட்சியைத்தை விவரிக்கும் கார்டியன் இதழ் கட்டுரையில், அவர் அறிவியல் துறையில் போதிய பெண்கள் இல்லாமல் இருக்கும் குறையை உணர்ந்த அனுபவம் பற்றி குறிப்பிட்டுள்ளார். ஜெஸ் பெண்கள் பள்ளியில் படித்தார். அவரது பெற்றோர் இருவருமே டாக்டர் என்பதால் அறிவியல் அவருக்கு இணக்கமானதாகவே இருந்தது. பள்ளியில் படிக்கும் போது அவருக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. நன்றாக படித்ததால், இம்பீரியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. பட்டப்படிப்பின் போது அவர் எடுத்துக்கொண்ட பாடப்பிரிவான இயற்பியல் கடினமாக இருந்ததால் அவரது கவனம் எல்லாம் படிப்பிலேயே இருந்தது. எனவே மாணவிகள் அதிகம் உள்ளனரா என்பதை எல்லாம் அவர் கவனிக்கவில்லை.

ஆனால் முனைவர் பட்ட வகுப்பில் சேர்ந்தபோது தான், அவர் தான் தனிமையில் இருப்பதை உணர்ந்தார். ஆய்வு மாணவியாக தனிமையில் செயல்பட வேண்டியிருப்பது சோதனையான அனுபவமாக அமைந்தது. இந்த கட்டத்தில் தான் அவர் ஆய்வுத்துறையில், அதிலும் குறிப்பாக அறிவியல் ஆய்வில் பெண்கள் ஏன் அதிகம் ஈடுபடுவதில்லை என யோசிக்கத்துவங்கினர். ஆனால் சக மாணவிகள் இல்லை என்பதால் அவர் ஆய்வை விட்டுவிடவில்லை, புலம்பிக்கொண்டிருக்கவும் இல்லை. மாறாக, இளம் பெண்கள் அறிவியல் துறையில் அதிக ஈடுபாடு கொள்ள வைப்பதற்கான முயற்சியில் ஈடுபடத்துவங்கினார்.

பள்ளிகளுக்குச்சென்று மாணவிகளிடம் அறிவியல் தொடர்பான உரை நிகழ்த்தி ஆர்வத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதே நேரத்தில், அறிவியலில் பெண்கள் எனும் தலைப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகளின் எதிர்மறைத்தன்மை அவருக்கு அதிருப்தியை அளித்தது. பெண்களை அறிவியல் துறையில் ஆர்வம் கொள்ள வைப்பதற்கான பெரும்பாலான திட்டங்கள் அறிவியல் பூர்வமாக இல்லாததும் அவர் அதிருப்தியை அதிகமாக்கியது.

விக்கிபீடியா கட்டுரை
விக்கிபீடியா கட்டுரை

இந்த கட்டத்தில் தான் அவர் விக்கிபீடியா வழியை தேர்வு செய்தார். மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் பேசிய அனுபவத்தில் அவர், விக்கிபீடியாவின் துணை திட்டமான விக்கிமீடியா காமன்ஸ் பக்கத்தில் பெண் விஞ்ஞானிகளின் படங்களை இடம்பெற வைப்பது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்து கொண்டார். இதனையடுத்தே விக்கிபீடியாவில் பெண் விஞ்ஞானிகளுக்கான கட்டுரைகளை எழுதுவது என தீர்மானித்தார்.

பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆய்வு செய்து வரும் அமெரிக்க விஞ்ஞானி கிம் கோப் பற்றி அவர் முதல் பதிவை எழுதினார். அதன் பிறகு அவர் நேஷனல் ஜியாக்ரபிக் இதழின் முதல் பெண் ஆசிரியர் சூசன் கோல்ட்பர்க் உரை ஒன்றை கேட்க சென்றிருந்தார். ஆனால் விக்கிபீடியாவில் அவருக்கான அறிமுக பக்கம் இல்லாதது ஜெஸ்ஸி வேடேவை வியப்பில் ஆழ்த்தியது. உடனே அவரைப்பற்றி அறிமுக கட்டுரையை எழுதினார்.

அதன் பிறகு, பெண் விஞ்ஞானிகள் பற்றி தினம் ஒரு கட்டுரையை விக்கிபீடியாவில் எழுதி வருகிறார். இணையத்தில் துவேஷமான கருத்துக்களை எதிர்கொண்ட எமிலி டெம்பிள் உட் எனும் பதின் பருவத்து பெண், தான் எதிர்கொண்ட ஒவ்வொரு துவேஷ கருத்திற்கும் பதிலடியாக விக்கிபீடியாவில் ஒரு பெண் விஞ்ஞானி பற்றி எழுதத்துவங்கி பலரது பாராட்டை பெற்றதையும் ஜெஸ்ஸி தனக்கான ஊக்கமாக மற்றொரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

விக்கிபீடியாவில் இருக்கும் பாகுபாடு பற்றியும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள 100 சயசரிதை கட்டுரைகளில் 17 தான் பெண்கள் பற்றியதாக இருக்கிறது என்று கூறுபவர், இந்த 17 சதவீதம் விஞ்ஞானிகளுக்கானது அல்ல என்கிறார். பெண்கள் போதிய பிரதிநித்துவம் பெறாத அறிவியல் துறையில் இது இன்னும் மோசமாக இருப்பதாக கூறும், ஜெஸ், இது வேதனையான மற்றும் பாகுபாடு நிறைந்த யதார்த்தம் என்கிறார், அது மட்டும் அல்ல, பெண் விஞ்ஞானிகள் தொடர்பாக விக்கி கட்டுரைகள் பெரும்பாலும் வெறும் பரிசுகளின் பட்டியலாகவும் இருப்பதாகக் கூறுகிறார்.

இதற்கு மாறாக குறிப்பிட்ட பெண் விஞ்ஞானி ஏன் கவனிக்கத்தக்கவர் என்பதை விவரிக்கும் வகையில் விக்கி கட்டுரைகளை ஜெஸ் எழுதி வருகிறார். இது தொடர்பாக பலவித விமர்சனங்கள் எழுந்தாலும், அந்த விமர்சனங்களே தன்னை மேலும் எழுத தூண்டுகின்றனர் என்கிறார் அவர்.

ஜெஸ்ஸி, பெண் அறிவியல் சாதனையாளர்கள் பற்றி தேடி அறிந்து, அலசி ஆராய்ந்து விக்கிபிடியாவில் கட்டுரை எழுதிய பின் அந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்து கொள்கிறார். @jesswade

பலரும் இவற்றை படித்துப்பார்த்துவிட்டு தங்களுக்கு தெரிந்த பெண் அறிவியல் சாதனையாளர்கள் குறித்த தகவல்களையும் அளித்து வருகின்றனர்.

ஜெஸ்ஸின் இந்த முயற்சியை விக்கிபீடியா அமைப்பும் அங்கீகரித்துள்ளது. அவரைப்பற்றிய நேர்காணல் விக்கிமீடியா வலைப்பதிவில் வெளியாகியுள்ளது. https://blog.wikimedia.org/2018/07/13/jess-wade/